ஜெய்ப்பூர்:முந்தைய முறைகளை விட அரசியல் கட்சிகளுக்கு பணம் அளிக்க தேர்தல் பத்திர திட்டம் தான் சிறந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒரு நாள் பயணமாக சென்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவொளி மாநாடு மற்றும் தொழில்துறை மற்றும் வணிக உரையாடல் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணம் வழங்க சாக்குகள் மற்றும் சூட்கேஸ்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பத்திரங்களுக்கு முன், எந்த அமைப்பும் இல்லை. நீங்கள் அரசியல் கட்சிகளுக்கு சாக்கு நிறைய பணத்தை எடுத்துச் செல்லலாம், அல்லது சூட்கேஸ்களில் கொண்டு செல்லலாம், அல்லது தங்கம் அல்லது பிளாட் கொடுக்கலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. அதைப்பார்க்கும் போது தேர்தல் பத்திரம் தொடர்பான பணப் பரிமாற்றம் வெளிப்படையாக தெரியும் என்பதால் இது ஒரு சிறந்த அமைப்பு.
சிஸ்டம் சரியானதா என்பது வேறு விஷயம், ஆனால் முன்பு இருந்ததை விட இது ஒரு சிறந்த அமைப்பு. ஏனென்றால் இருபுறமும் உள்ள கணக்குகளில் பணம் தெரியும். காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக வாக்குறுதிகளை அளிப்பதிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதிலும், வாக்குகளைப் பெற்று அதை மறந்துவிடுவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தது. பணவீக்கம் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைச்சர்கள் குழுவிடம் விசாரித்து கேட்டு அறிந்து கொள்வார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இவ்வாறு பேசினார்.
The post முந்தைய முறையை விட தேர்தல் பத்திர திட்டம் சிறந்தது: நிர்மலா சீதாராமன் சொல்கிறார் appeared first on Dinakaran.