தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் அவரை மடக்கி கேள்வி கேட்பது தர்ம சங்கடத்தில் நெளிய வைத்து வருகிறது. அந்தவகையில் தர்மபுரி நகரில் வாக்கு சேகரிப்பின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து வாலிபர் ஒருவர் சவுமியாவிடம் எழுப்பிய கேள்வி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் நமக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத ஒன்றிய அரசை ஆதரித்து பாஜ கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்று வாலிபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் அவரை ஒருமையில் வறுத்தெடுத்தனர். இதனால் அவர் அங்கிருந்து சென்றார். உடனே சவுமியா அன்புமணி ‘‘பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் எல்லாம் ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கி விட்டது’ என்று விளக்கம் அளித்தார்.
* கோடீஸ்வரர்களுக்கு 3%, ஏழைகளுக்கு 18%, ஜிஎஸ்டியா? திருமாவளவன் ஆவேசம்
கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஒரு லிட்டர் பால் என்ன விலை, இட்லி என்ன விலை, தோசை என்ன விலை, ஒரு தேனீர் என்ன விலை, காபி என்ன விலை, எல்லாம் இது எப்படி உயர்ந்தது. (உடனே அங்கிருந்தவர்கள் ஒவ்வொன்றின் விலையையும் கூறிவிட்டு மோடியாலதான் என பதிலளித்தனர்). மோடி விதித்த ஜி.எஸ்.டி. வரியால்தான். ஜிஎஸ்டி என்பது அந்த வரியினுடைய பெயர். சரக்கு மற்றும் சேவை வரி.
இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கெல்லாம் 18 சதவீதம் வரி. நீ 100 ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்கினால் 18 ரூபாய் வரி கட்டணும். 118 ரூபாய் கொடுத்தால்தான் அந்த பொருளை நாம வாங்க முடியும். 18 ரூபாய் அதிகபட்ச வரி. வைர நகைகளுக்கு 3 சதவீதம் வரி. 100க்கு ஒரு வைர மூக்குத்தி வாங்கினால் 103 ரூபாய் கொடுத்தால்போதும். வைர நகை நாமளா வாங்க போறோம். ஆனால் நம்ம வீட்டுல படிக்கிற பிள்ளைகள் பால் பாயிண்ட் பென் வாங்கினால் அதற்கு 18 ரூபாய் வரி. இந்த நரேந்திர மோடி யாருக்கானவர். ஏழை எளிய மக்களுக்கானவரா, கோடீஸ்வரருகளுக்கானவரா?. உனக்கும், எனக்குமானவரா, அதானிக்கும், அம்பானிக்குமானவரா?. அந்த மோடி மீண்டும் பிரதமர் ஆகலாமா?, அவரது ஆட்சி தொடரலாமா? (உடனே அங்கிருந்தவர்கள் வேண்டாம் என ஒருமித்த குரல் எழுப்பினர்) இவ்வாறு அவர் பேசினார்.
* ‘அதிமுகவில் 5 சீட்… கோடி, கோடியா தருவதாக பேசினாங்க…’ திருமாவளவன்
கூறுகையில், ‘எல்லோரும் பேசினாங்க… என்ன போய்… போய்.. உங்களுக்கு 2 சீட்டுதானா… நம்மள ஆசையை தூண்றாங்களா… அதிமுகவில் 5 சீட்டு தருவாங்க போறீங்களா… கட்டு கட்டா, மூட்டை மூட்டையா, கோடி கோடியா அள்ளித் தருவார்கள் போறீங்களா?. சராசரி அரசியல்வாதியாக திருமாவளவனை எடை போடுகிறார்கள். திருமாவளவனை எடை போட இன்னும் இங்கே யாரும் பிறக்கவில்லை. திருமாவளவனை விலைபேச இன்னும் தமிழகத்தில் எவரும் பிறக்கவில்லை, இந்தியாவிலும் பிறக்கவில்லை’ என்றார்.
* கடந்த ஓராண்டில் மட்டும் ஏழைகளிடம் ரூ.13 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: திருச்சி சிவா பகீர்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி பேசியதாவது: மோடி பிரதமராக இருந்த இந்த 10 ஆண்டுகளில் இதுவரை 108 தடவை பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். மிகச்சிறிய புள்ளிவிவரம் ஒன்றை சொல்கிறேன். கடந்த ஓராண்டில் மட்டும் மோடி அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைத்தபணம் ரூ.14 லட்சம் கோடி. அதில் வெறும் ரூ.44 ஆயிரம் கோடி தான் பணக்காரர்கள் தந்தது. மீதமுள்ள ரூ.13 லட்சம் கோடியும் உங்களை போன்ற ஏழை, எளிய நடுத்தர வர்க்க உழைக்கும் மக்கள் கொடுத்த பணம். ரூ.2 லட்சம் கடன் கேட்கும் நடுத்தர விவசாயிக்கு ஸ்யூரிட்டி, கேரண்டி கேட்கும் வங்கியில், ஒரு டீ தொழிலதிபருக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் தருகிறார்கள். இன்னொருவருக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் கொடுத்தார்கள்.
அவர்கள் அதனை திருப்பி செலுத்தாமல், இந்தியாவை விட்டு தப்பி வெளிநாட்டுக்கு ஓடி விட்டார்கள். லண்டன் பீச்சில் நின்று கொண்டு போஸ் கொடுக்கும் அவர்களை கையை கட்டி கொண்டு வந்து பணத்தை வசூலிக்க துப்பில்லாத இந்த மோடி அரசாங்கம், அந்த ரூ.10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு அவர்களை பாடாய்ப்படுத்தினார்கள். கல்விக்கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத ஏழை மாணவர்களை வஞ்சித்து பணக்காரர்களின் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் இந்த அரசு வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* பாஜ ஆட்சிக்கு வந்தால் பவுனு ஒரு லட்சமாகும்: சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் எம்பி தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி தலைவர் முகம்மது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசிதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாஜ நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் குழந்தைகளுக்கு தங்கராசு, தங்கம் என்று பெயர் தான் வைக்க முடியும். மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்ந்து விடும். இவ்வாறு பேசினார்.
* ஏழைகளை கொன்றுவிடு… குடிசையை கொளுத்திவிடு… இன்னும் ஒருமுறை பாஜவிடம் நாட்டை கொடுத்தா முடிஞ்சிடுச்சு… சீமான் ‘பையர்’
கடலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம், சிதம்பரம் வேட்பாளர் ஜான்சிராணி, பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இன்னும் ஒருமுறை பாரதிய ஜனதாவிடம் நாட்டை கொடுத்துட்டோம்னா முடிஞ்சிடுச்சு. 10 ஆண்டுகள் நான் மக்களுக்கு சூப் கொடுத்துக் கொண்டிருந்தேன். அடுத்து என்ன கொடுப்பீர்கள். ஸ்டிரைட் பாய்சன்தான் கொடுத்து அனுப்பிட்டே இருப்பேன். ஏனென்றால் ஒரு கோட்பாடு வைத்திருக்கிறாங்க… ஏழ்மையை ஒழிக்க என்ன செய்யலாம். ஏழைகளை கொன்றுவிடு. குடிசை இல்லா நகரம் உருவாக்க வேண்டும் என்ன செய்யலாம்… குடிசையை கொளுத்திவிடு… சிரிக்காதே, நீ சிந்தித்துபாரு. டிரம்ப் குஜராத் வரும்போது, குடிசைகளை மறைக்க 7 அடிக்கு சுவர் எழுப்பி மறைத்தார்கள். டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்த போது 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை வெளியேற்றினார்கள்.இதெல்லாம் டெவல்புல வருது… இவ்வாறு பேசினார்.
* ‘ஆம்புலன்ஸ் போனாலே பயமா இருக்கு’
சீமான் மேலும் கூறுகையில், ‘ஓராண்டு முன்பே சிலிண்டர் விலையை குறைத்தால் அது மக்கள் அரசியல்… அதுவே தேர்தல் நேரத்தில் விலை குறைத்தால் அது தேர்தல் அரசியல். அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) போனாலே பயமா இருக்கு… எத்தனை கோடி போதோ… நீ பாரு… இப்போ முடிக்கிறதுக்குல்ல இன்னும் எத்தனை போதுன்னு பாரு….’ என்றார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை ஆதரிப்பது ஏன்? அன்புமணி மனைவியிடம் வாலிபர் சரமாரி கேள்வி: ஒருமையில் திட்டிய பாமகவினர் appeared first on Dinakaran.