×
Saravana Stores

பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல… எங்களை பார்த்தாச்சும் காப்பி அடியுங்க… பாஜவுக்கு கமல் அட்வைஸ்

பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து கிணத்துக்கடவு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: பாஜ பொய்யாக சொல்லும் வாக்குறுதி நிஜமாகும். 2047ல் தான் இலக்கு என பாஜ சொன்னது நடக்கக்கூடும். அது நடக்க வேண்டும் என்றால் எங்களை பார்த்து காப்பியாவது அடியுங்கள். சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்கள் நல்வழிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் திரும்பாமல் நான் திரும்பி என்ன பயன்?. நீங்கள் திரும்ப வேண்டும். நாடு திருந்த வேண்டும். இந்த பத்து வருடத்தில் ஒன்றும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

இப்போது திடீரென வந்து தமிழ்தான் உலகத்தில் பழமையான மொழி என சொன்னால் நீங்க வாக்களித்து விடுவீர்களா?. தமிழ் பழமையான மொழி என உங்களுக்கு இப்ப தெரிஞ்சது. எங்களுக்கு 2 ஆயிரம் வருஷமாகவே தெரியும். பொய்யா மொழி புலவருக்கு பொய்யவர்கள் எல்லாம் கூடி, ஒவ்வொரு ஊராக பிரசார மண்டபம் கட்ட போறாங்களாம். அத மட்டும் நாம் நிஜம் என நம்ப வேண்டுமா. அது நடக்கும்போது பார்த்துக்கொள்வோம். வள்ளுவரை காப்பாற்ற ஒவ்வொரு தமிழன்போதும். திருக்குறளை பரப்பினால் சந்தோஷம். இல்லையென்றால், தமிழர்கள் அதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பார்கள்.

தமிழ்நாட்டிற்கு செய்யும் ஒரவஞ்சனையில், மிக முக்கியமானது மொழிக்கு செய்யும் வஞ்சனை ஆகும். நீங்கள் எங்களிடம் ஓட்டு மட்டும் கேட்கவில்லை. எங்களின் வாழ்க்கை முறையை கேட்கிறீங்க. அது மறுக்கப்படும். நான் என்ன உடை, என்ன நிறத்தில் அணிய வேண்டும், என்ன உணவு, என்ன கறி சாப்பிட வேண்டும்? என யாரும் சொன்னது கிடையாது. அக்பர், அசோகர் கூட சொன்னது இல்லை. அதுக்கே கேட்காதவர்கள் நீங்க சொல்லி கேட்கவா போறோம். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டிற்கு செய்யும் ஒரவஞ்சனையில், மிக முக்கியமானது மொழிக்கு செய்யும் வஞ்சனை ஆகும். நீங்கள் எங்களிடம் ஓட்டு மட்டும் கேட்கவில்லை. எங்களின் வாழ்க்கை முறையை கேட்கிறீங்க.

* ஜெயலலிதா உயிரோடு இருந்தா எடப்பாடியை நசுக்கிருப்பாங்க: அடித்து சொல்லும் ராதிகா
விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளரான நடிகை ராதிகா, மதுரை மாவட்டம் பேரையூர் பகுதிகளான காடனேரி, அரசப்பட்டி, சிலைமலைப்பட்டி, சின்னப்பூலாம்பட்டி, பெரிய பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘அதிமுக, தேமுதிகவிற்கு எடப்பாடி என்ன பிரதமரா? ஜெயலலிதாவே நான்தான்னு எடப்பாடி நினைக்கிறாரு. அவங்க உயிரோடு இருந்தா இந்நேரம் இவரை நசுக்கி போட்டுருப்பாங்க. கோணவாய். இதுல கொட்டாவி வேற. இலையை கசக்கி தூரப்போடுங்க. பொய்ப்பிரசாரத்த நம்பாதீங்க’’ என்று தெரிவித்தார்.

* நட்டா, ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ வெறிச்’
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று பரமக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். கிருஷ்ணா தியேட்டரில் துவங்கியபோது சாலையின் இருபுறங்களிலும் கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு அளித்த நிலையில், பொதுமக்கள் யாருமின்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. சாலையின் இருபக்கமும் பொதுமக்கள் இல்லாமல், நட்டா வாகனத்திற்கு முன்பும், பின்பும் பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மட்டுமே பின் தொடர்ந்தனர். பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை வரையிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், வெறிச்சோடிய சாலையில் நட்டா கையை அசைத்து சென்றார். ஒரு கிமீ தூரத்திற்கு பாஜ மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கூட இல்லாததால் கடும் கோபத்தில் ஏற்பாட்டாளர்களை அழைத்து, நட்டா டோஸ் விட்டு சென்றார்.

இதை தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மாலை துறையூர் ரோடு ரவுண்டானா பூங்காவில் இருந்து முசிறி கைகாட்டி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வேனில் நின்றவாறு ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் ஜே.பி.நட்டாவை வரவேற்க போதிய கூட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசியிலும் ஜான்பாண்டியனை ஆதரித்து நட்டா நடத்திய ரோடு ஷோ கூட்டமின்றி பிசுபிசுத்தது.

இதேபோல், திருவண்ணாமலையில் நேற்று பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திருவண்ணாமலை காமராஜர் சிலையில் தொடங்கி, திருமஞ்சன கோபுர வீதி, திருவூடல் தெரு, தேரடி தெரு வழியாக காந்தி சிலை சந்திப்பு வரை ரோடு ஷோ நேற்று நடத்தினார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, கடை வீதி மற்றும் மாட வீதியில் ரோடு ஷோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தபோதும், பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் சாலைகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடியே இருந்தது. இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிருஷ்ணகிரி பாஜ வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசி கொண்டிருந்தபோது பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் சென்றதால் அந்த இடம் காலி சேர்களாக காட்சியளித்தது.

* மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி பாஜ: காமராஜர் பற்றி பேச மோடிக்கு ஒரு சதவீதம் கூட அருகதை இல்லை; ஈவிகேஎஸ் சுளீர்
ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மோடி தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும், குட்டி கரணம் அடித்தாலும் தமிழகத்திலே பாஜ கட்சியால் ஜெயிக்க முடியாது. மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி பாஜதான். மோடி திருநெல்வேலியில் காமராஜரை பற்றி பேசி உள்ளார். காமராஜர் பற்றி பேசுவதற்கு ஒரு சதவீதம் கூட பேச அருகதை இல்லாதவர் மோடி. ஏனென்று சொன்னால், காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது டெல்லியில் அவரை தீ வைத்து கொல்ல முயன்றவர்கள் பாஜவின் மூத்த நிர்வாகிகள்தான். அப்போது, காமராஜரின் உதவியாளரால் அவர் காப்பாற்றப்பட்டார். காமராஜரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என்ற வழியில் வந்த மோடிக்கு காமராஜர் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?. தமிழ் மொழியை அங்கீகரிப்பதாக சொல்வது அண்ட புழுகு, ஆகாச புழுகு. மோடியை நம்பி சென்ற ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் போன்றவர்களும் அரசியலில் இருந்து முடிந்து போவார்கள். இந்த தேர்தலோடு மோடியோடு சேர்ந்து அண்ணாமலையும் காணாமல் போய்விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

* சசிகலா அதிமுக… ஜெயலலிதா அதிமுக…
ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ‘ஏற்கனவே பல அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவை இனிமேல் உடைப்பதற்கோ, அழிப்பதற்கோ என்ன இருக்கிறது. அதிமுக.வில் தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்று உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னொரு பிரிவாக எடப்பாடி பழனிசாமிக்கும், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கும் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் சசிகலா அதிமுக, ஜெயலலிதா அதிமுக என்று பெயரை வைப்பார்கள்’ என்றார்.

The post பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல… எங்களை பார்த்தாச்சும் காப்பி அடியுங்க… பாஜவுக்கு கமல் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Kamal ,Bajau ,Kamal Haasan ,People's Justice Center ,Kinathukkadavu ,Pollachi ,Easwarasamy ,Baj ,Dinakaran ,
× RELATED லண்டனில் படிக்கும் எஸ்தர் அனில்