விதிகளை மீறி, பாஜ சார்பில் அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததால் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம், நகை பரிசு பொருட்கள் என ரூ.1284.46 கோடி இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிடிபட்ட ரூ.950 கோடி தங்கமும் அடங்கும். தற்போது அது திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதுதவிர தேர்தல் பறக்கும் படையினர் ரூ.78.84 கோடியும், வருமான வரித்துறை சோதனை நடத்தி ரூ.83.63 கோடியும் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர ரூ.5.92 கோடி மதிப்புள்ள மதுபான வகைகள், தங்கம் வெள்ளி நகைகள் ரூ.10.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (நேற்று) தினசரி பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பாஜ சார்பில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. பொதுவாக தேர்தல் ஆணையத்திடம் விளம்பரத்தை காட்டி, அனுமதி பெற்றுதான் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரத்துக்கு அனுமதி கொடுக்க சென்னை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்கள் தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இப்படி, அனுமதி கேட்கும்போது அந்த விளம்பரத்தை பிரசுரிக்கலாம் என்று அனுமதி கொடுத்தால், அதற்காக ஒரு எண் அளிக்கப்படும். அந்த எண்ணை கண்டிப்பாக விளம்பரத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பிரசுரிக்க வேண்டும். ஆனால் பாஜ சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் இந்த எண் இடம்பெறவில்லை. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் விளக்கம் கேட்டு, விசாரணை நடத்துவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
The post விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ விளம்பரம்: நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு appeared first on Dinakaran.