மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வது சாதாரண காரியமல்ல. நல்ல ஒரு பொருளாதாரத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றால், ஒரு சிறப்பான ரேஸ் கார் அதாவது ஒரு பெராரி கார் இருந்தால் அதை இயக்க அதன் தொழில்நுட்பம் தெரிந்த, சிறப்பான டிரைவர் தேவை. அந்த வகையில் வேகம், பாதை வளைவு தெரிந்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பெராரி கார் என்ற பொருளாதாரத்தை சிறப்பாகவும், வேகமாகவும் இயக்கினார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை கண்டது. ஆனால், 10 ஆண்டுகள் பாஜ ஆட்சியின் பொருளாதாரம், தலையும் தெரியாமல், காலும் தெரியாமல், பெராரி காரை ஒரு எல் போர்டு டிரைவர் ஓட்டுவதைப் போல், பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது.
பண மதிப்பிழப்பு என்ற கொடூரமான திட்டத்தை, அரைவேக்காட்டுத்தனமாக ஒரு செயல் முறையே இல்லாமல் கொண்டு வந்து, பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளி விட்டனர். அதிலிருந்து எப்படியாவது திக்கி திணறி திரும்பி வந்து விட வேண்டும் என, வேகமாக செல்ல ஆக்சிலேட்டரை இயக்குவதற்கு பதில் பிரேக்கை போட்டுட்டாங்க. அதுதான், இரவோடு இரவாக கொண்டு வந்த ஜிஎஸ்டி முறை. நாட்டின் ஜிஎஸ்டி கவுன்சிலில் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். தற்போதைய ஜிஎஸ்டியில் இன்னும் பல நூறு திருத்தங்கள் தேவையாக உள்ளன. ஆனாலும், அதுதொடர்பாக அரசுக்கு கவலை இல்லை. அதேபோல் கொரோனா பேரிடரில், எந்த வளர்ந்த நாடுமே செய்யாத 140 கோடி மக்கள் தொகை உடைய நாட்டில், லாக் டவுன் என்ற கொடூரத்தை செய்தது. அதனால், பொருளாதார இன்ஜின் படுத்தே விட்டது. இவ்வாறு பேசினார்.
The post ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை போட்டுட்டாங்க… எல் போர்டு டிரைவரால் பொருளாதாரம் படுத்துவிட்டது: மோடி மீது பிடிஆர் அட்டாக் appeared first on Dinakaran.