மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் (19ம்தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு, இன்னும் 2 நாள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் க.செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமையில், வேட்பாளர் செல்வம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாமல்லபுரம் அடுத்த எச்சூர், குழிப்பாந்தண்டலம், குச்சிக்காடு, நல்லான் பிள்ளை பெற்றாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு, இந்தியா கூட்டணியின் திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பட்டாசுகள் வெடித்து, மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், திருக்கழுக்குன்றம் சேர்மன் ஆர்டி அரசு, துணை சேர்மன் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், திமுக நிர்வாகி செல்வகுமார், விசிக மாவட்ட செயலாளர் கனல்விழி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜி.செல்வம் நேற்று திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கொத்திமங்கலம் நரிக்குறவர் இனமக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த வேட்பாளர் செல்வத்திற்கு அங்குள்ள மக்கள் பாசி மணி, ஊசி மணி ஆகியவைகளை அணிவித்தனர். பிரச்சாரத்தின்போது, முன்னாள் எம்எல்ஏவுமான தமிழ்மணி, ஒன்றிய சேர்மன் அரசு, துணை சேர்மன் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.