சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களோடு மக்களாக பழகி அவர் வாக்கு சேகரிப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தயாரித்த தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கரு நாகராஜன், தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, நாராயண திருப்பதி, பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸ், தமாகா மாவட்ட தலைவர் லூயிஸ், அமமுக மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தனது தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்த தேர்தல் அறிக்கையை தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை உடனடியாக தொடங்கினர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்பி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, பொதுக்கள் குறைகள் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை= எடுக்கப்படும். தனி மொபைல் செயலி மற்றும் வாட்ஸ் அப் எண்-9550999991 மூலம் புகார்களை தெரிவிக்கலாம். தென்சென்னை மக்கள் சந்தித்து வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் கோதாவரி ஆற்று நீரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய நீர்வள அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து குடிநீர், பாதாளசாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்தப்படும். போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய வழித்தடத்தில் மேட்ரோ-2 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
லூட் வழித்தடங்களில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுடன் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். அம்மா உணவகங்கள் போன்று ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும். சோழிங்கநல்லூரில் புதிதாக மிகப் பெரிய பன்னோக்கு இஎஸ்ஐ அரசு மருத்துவமனை அமைக்கப்படும். நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு அரசு கலைக்கல்லூரியும், ஒரு அரசு தொழில் நுட்பக் கல்லூரியும், பணி செய்யும் பெண்களுக்கான விடுதியும் அமைக்கப்படும். பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும். மீனவர் நல அமைப்பு உருவாக்கப்பட்டு, இந்த அமைப்பு முழுவதுமாக தென் சென்னை தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களில் ஆராய்ந்து அவர்கள் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்கு பாடுபடும். மீன் வியாபாரிகளுக்கு மிகப் பெரிய மீன் விற்பனை சந்தை அமைத்து தரப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
The post குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி ஆற்று நீர் சென்னைக்கு கொண்டு வரப்படும்; தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை வாக்குறுதி appeared first on Dinakaran.