×
Saravana Stores

சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்

ஒரிசா மாநிலம் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது, புரி ஜெகந்நாதனின் பிரம்மாண்டமான கோபுரமும், அதன் மீதுள்ள காற்றில் மெதுவாக அசைந்து ஆடும் கொடியும், அனுதினமும் பானையில் சுடச் சுட கிருஷ்ணனுக்கு நிவேதிக்கப்படும் சங்குதி மகாபிரசாதங்களும், இவை எல்லாத்துக்கும் மேலாக பலராமன், சுபத்திராவுடன், கருவறையில் அழகுக்கே உரித்தான கருத்த நிறத்தோடு அருள்கிறானே அந்த ஜெகந்நாதன், அவனையும்தான் நினைவுக்கு வரும்.

இதே போல், ஒரிசா மாநிலத்தை சுற்றி பல கோயில்கள் இருக்கின்றன. அதில், நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம், “சூரியக்கோயில்’’ ஆங்கிலத்தில் “சன்டெம்பிள்’’ (Sun Temple). ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் என்னும் இடத்தில் இருந்து, சுமார் 65 கி.மீ., தொலைவிலும், புரி ஜெகந்நாதர் கோயிலிலிருந்து சுமார் 33 கி.மீ., தூரத்திலும், கொனார்க் (Konark) என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து
1 கி.மீ., தொலைவில் இந்த அருமையான “சூரியக்கோயிலை’’ அடைந்துவிடலாம்.

நாங்கள், சென்னையில் இருந்து விமானத்தில் பயணம் செய்து, புவனேஸ்வருக்கு வந்தடைந்தோம். புரி கோயிலிலிருந்து சூரியக்கோயில் அருகருகே இருந்த போதிலும், ஜெகந்நாதனை காண எங்களுக்கு மறுநாட்கள்தான் எய்துவாக இருந்தது. அதனால், நேரத்தை வீணடிக்க விருப்பமில்லாது, புவனேஸ்வரில் இருந்து கார் மூலமாக சூரியக் கோயிலுக்கு செல்ல ஆயத்தமானோம்.விடியற்காலையிலேயே பயணம் மேற்கொண்டு வந்ததால், சற்று அசதி. காரினிலே ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவாறு புவனேஸ்வரிலிலிருந்து சற்று தொலைவில்தான் பயணித்திருப்போம்.

ஓய்வெடுக்கவிடாமல் செய்தது புவனேஷ்வர் டு சூரியக் கோயில் பயணம். ஒரு கிராமத்தில் பயணம் செய்வதை போல் உணர்ந்தோம். கண்களுக்கு எட்டிய தூரம்வரை வயல்வெளிகளும், தென்னை மரங்களும், மெல்லிய மண்ணின் வாசமும், அதைவிட, வெயில் அதிகம் தெரியாமல் இருந்தது. ஆங்காங்கே சில குடிசை வீடுகள் மட்டுமே தென்பட்டன. வானத்தை பார்த்தால், பெரிய பெரிய பறவைகள் பறக்க, அதன் குஞ்சுகள் தாய் பறவையை பின்தொடர்ந்து செல்ல, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. இதனால், இவைகளை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம்.

ஒருவர், நாலைந்து கூடைகள் முழுவதிலும் ஏதோ ஒன்றை விற்றுக் கொண்டிருந்தார். சட்டென்று வண்டியை நிறுத்தி, விற்றவர் அருகே சென்றோம். சென்றவுடன், அது ஏதோ ஒரு வகையான இனிப்பு பதார்த்தம் என்று மட்டும்புரிந்தது.வித்தியாசமாக இருக்கிறதே! என்று எண்ணிய நான், `கித்நா’ (எவ்வளவு) என்று இந்தியில் கேட்டேன். `ஏக் ஹை சாஹ் ரூபாயே’ (ஒன்று ஆறு ரூபாய்) என்று கூறினார். நான், “க்யா ஆப் முஜே பாஞ்ச் ரூபாயே மே ஏக் தே சகாதே ஹைன்?\” (ஒன்று, ஐந்து ரூபாய்க்கு தரமுடியுமா?) என்று கேட்டேன். “தீக் ஹை’’ (சரி) என்றார். ஒரே ஒரு பீசை வாங்கி சுவைத்தோம்.

ஹாஹா… தித்திப்பாக இருந்தது. `இசகா நாம் க்யா ஹை?’ (இதற்கு பெயர் என்ன?) என்று கேட்டோம். `பூரி காஜா’ என்றார். பெயருக்கு ஏற்றார் போலவே, பூரி போன்றே மொறுமொறுப்பாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன், வேறு எங்கும் இந்த பூரி காஜா கிடைக்காது என்று நினைத்து, பார்சல் வாங்கிக் கொண்டோம். பிறகுதான் தெரிந்தது, இந்த ஊருக்கு பூரி காஜா ஃபேமஸ் என்று. ஒரிசா மாநிலத்தில், எந்த கோயில்களாக இருந்தாலும்சரி, அங்கு பூரி காஜா நிச்சயம் கிடைக்கும். மிக முக்கியமாக, புரி ஜெகந்நாதர் கோயிலில் இது இல்லாமல் இல்லை.பூரி காஜாவை அசைபோட்டபடியே, 34 கிலோமீட்டரையும் கடந்து சூரியக் கோயிலுக்கு வந்துவிட்டோம்.

இறங்கியவுடனேயே ரோட்டின் இருபுறங்களிலும் வரிசையாக கடைகள் களைகட்டி இருந்தன. மரச்சாமான்களால் ஆன தெய்வீக பொம்மைகள், மினியேச்சர் என்று சொல்லக் கூடிய மிக சிறிய அளவிலான பொருட்கள். முந்திரி, பாதாம் போன்ற பொருட்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. கூடவே இங்கும் பூரி காஜா கிடைக்கிறது.ரோட்டில் இருந்து கோயில் உள்ளே செல்ல சுமார் 1கி.மீ நடந்தாகவேண்டும். நடக்கும்போதே, கோயிலின் பிரம்மாண்டமான தோற்றத்தை ரசித்தவாறு செல்லலாம். நடைபாதைகளின் இருபுறத்திலும் வரிசையாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலை கண்டுகளிக்க நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதனை பெற்றுக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.கோயிலை கண்டவுடன் அதன் தொன்மை நமக்கு நன்கு தெரியும். 12-ஆம் நூற்றாண்டில், மாமன்னர் ஒட்ட ராஜு லங்குலா கஜபதி நரசிங்க தேவாவின் (பொ.ஊ. 1238-64) காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். சிவப்பு மணற்பாறைகளாலும், கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது என்பதைவிட, மிக அழகான சிற்பங்களால் செதுக்கப்பட்டது என்றுதான் சொல்லியாக வேண்டும். அத்தகைய அழகியலால், பிரம்மாண்ட தேர்வடிவ கோயிலாக இந்த சூரியக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியக் கடவுளான சூரிய பகவானுக்கு, நன்றி செலுத்தும் விதமாக, சுமார் 100 – அடி (30மீ) உயரத்தில், சூரிய பகவானின் தேரின் தோற்றத்தைக் கொண்டு, அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்களுக்கு எப்படி சக்கரங்கள் இருக்கின்றனவோ.. அதே போல், கல்லால் செதுக்கப்பட்ட மிகப் பெரிய சக்கரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவை வடிவமைக்கப் பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி இப்போது இடிந்த நிலையில் உள்ளது. ஒரு காலத்தில், இதன் உயரம் 200 – அடி (60மீ) உயரத்திற்கு மேல் இருந்திருக்கிறது என்று வரலாறுகள் கூறுகின்றன. குறிப்பாக, சரணாலயத்தின் மேல் உள்ள பெரிய “ஷிகாரா’’ என்னும் பெயர் கொண்ட கோபுரம், ஒரு காலத்தில் தற்போது எஞ்சியிருக்கும் மண்டபத்தைவிட மிக உயரமாக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஏன் இந்த கோயில் இடிந்த நிலையில் இருக்கின்றன? அழிவுக்கான காரணம் என்ன? என்பது போன்ற தெளிவான காரணங்கள் இல்லை. இன்னும் சர்ச்சைக் குரியதாகவே உள்ளது. தற்போது இருக்கும் இந்த சூரியக் கோயில், பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், தொல்பொருள் ஆய்வு குழுக்களின் பாதுகாப்பு முயற்சி களால், ஓரளவு மீட்கப் பட்டுள்ளது.அன்று முதல் இன்று வரை ஒரு முக்கிய புனித யாத்திரை தளமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில், “சந்திரபாகா மேளா” என்னும் பிரம்மாண்டமான விழாவில், இந்த சூரியக் கோயிலில் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள்.

1984 – ஆம் ஆண்டு, யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினர், உலக பாரம்பரிய தளமாக இந்த சூரியக் கோயிலை அறிவித்தது. மேலும், இந்த கோயிலை சிறப்பிக்கும் வகையில், இந்திய கலாச்சார பாரம்பரியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் குறிக்கும் விதத்தில், 10 ரூபாய் இந்திய கரன்சி நோட்டின் பின்புறத்தில், சூரியக் கோயிலை அப்படியே அச்சடிக்கப்பட்டு, இந்த கோயிலுக்கு மிக பெரிய பெருமை சேர்த்தது. இந்த கோயில், பழைய ஒடிசாவின் சிற்ப சாஸ்திரத்தில் காணப்படுகிறது. சூரியக் கோயில், மூன்று வகையான கற்களால் ஆனது. அவைகள்; குளோரைட் (Chlorite), லேட்டரைட் (Laterite), கோண்டலைட் (Khondalite) ஆகும்.

இந்த வகை கற்கள் அனைத்துமே சாதாரணமான கற்கள் கிடையாது. ஒவ்வொன்றும் பல டன் எடைக் கொண்டது. மேலும், மிக எளிமையாக கிடைக்கக்கூடிய கற்களும் கிடையாது. கட்டிடக் கலைஞர்கள், எங்கிருந்தோ தொலைதூரத்தில் இருந்து, கற்களை வாங்கி எடுத்து நகர்த்தி இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும். அதே போல், இந்த சூர்யக் கோயில் அருகிலேயே கடல் இருப்பதால், இந்த கோயில் கட்ட தேவைப்படும் கற்களையும், கோயிலை கட்டி முடிக்க தேவையான பொருட் களையும் எடுத்து வர, இந்த கடல் வழிப் பாதைகளை பயன்படுத்திருக்க வேண்டும். அதே போல், மூல கோயிலில் ஒரு முக்கிய கருவறை (விமானம்) ஒன்று இருந்தது.

இது சுமார் 229 அடி (70மீ) உயரம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்கிய விமானம், 1837-ல் விழுந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலும் இந்த கோயில்களில் இருக்கின்ற சிற்பங்கள், நிர்வாண சிற்பங்களாகவும், ஆணும் – பெண்ணும் களவு செய்துக் கொள்ளும் தோற்றம் கொண்டவையாகவும் அமைந்திருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில், குழந்தை பேறுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களை, சூரிய கோயில் போன்ற இத்தகைய சிற்பங்கள் இருக்கும் இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த சிற்பங்களை எல்லாம் பார்த்து, மேலும் பல களவு விஷயங்களை அறிந்துக் கொண்டு, தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள்.

இதனால், குழந்தைப் பேறு பாக்கியம் சீக்கிரம் கிட்டும். அதன் தாத்பரியத்தின் அடிப்படையிலேயே இத்தகைய நிர்வாண சிற்பங்களை இந்த சூரிய கோயில் உட்பட சில கோயிலுள் அமைத்திருக்கின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.மேலும் சில இடங்களில், பல்வேறு இசைக் கருவிகளை ஆணும் – பெண்ணும் கைகளில் வைத்து இசைப்பது போலவும், விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்களும், அப்சரஸ்கள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் கலாச்சார சிற்பங்களையும் காணலாம்.ஒரு சில இடங்களில், பல்வேறு விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், அறியவகை உயிரினங்கள் ஆகிய சிற்பங்களையும் காணலாம்.

சற்று தொலைவில் இருக்கக் கூடிய ஒரு மேடையின் அடிப் பகுதியில், யானைகள் மற்றும் அதன் வீரர் களின் அணிவகுப்பு சிற்பங்கள், வேட்டையாடும் காட்சிகள், தலையில் சில பொருட்களை சுமந்து செல்லும் மக்கள், காளை வண்டியின் உதவியோடு மக்கள் பயணிக்கும் சிற்ப காட்சி, சாலையோரம் உணவு தயாரித்து வரும் பயணிகள், பண்டிகை ஊர்வலங்கள், மரத்தடியில் நிற்பது, ஜன்னல் வழியாகப் பார்ப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது, கண்ணாடியைப் பார்த்து மேக்கப் போடுவது போன்ற எண்ணற்ற பல எதார்த்த சிற்பங்களை காணலாம்.

மேலும், கோயிலின் மற்ற பகுதிகளில், பிற தெய்வ சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சூரிய கோயிலின் தேர் சக்கரங்களில் விஷ்ணு, சிவன், கஜலட்சுமி, பார்வதி, கிருஷ்ணர், நரசிம்மர் ஆகியோர்களும், இந்திரன், அக்னி, குபேரன், வருணன் போன்ற வேதகால தெய்வங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.இத்தகைய பெரும் சிறப்புகளை பெற்ற சூரிய கோயிலை ஆற அமர நிதானமாக சுற்றிப் பார்க்க, முழுவதுமாக ஒரு நாள் தேவைப்படுகிறது. இந்த கோயிலுக்குள்ளே செல்லும் போது உங்களின் ஃபோனை ஃபுல் சார்ஜில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். கோயிலை சுற்றி புகைப்படம் எடுக்க உதவியாக இருக்கும். கோயிலைவிட்டு வெளியே வரும்போது, நீங்களும் உங்கள் மனதும் ஃபுல் சார்ஜில் இருக்கும்.

ரா.ரெங்கராஜன்

The post சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில் appeared first on Dinakaran.

Tags : Surya temple ,Lord Surya ,Orissa ,Puri ,Sanguthi ,Mahaprasads ,Krishna ,Chariot ,Lord ,Surya ,
× RELATED இளைஞரிடம் செல்போன் பறிப்பு