சென்னை: இளம்பெண் மண்டையோட்டின் அடிப்பகுதியை ஒட்டி வலது தொண்டை குருதிக்குழாயில் மிதமான அளவில் இருந்த புற்றுநோய் கட்டியை 26 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக அகற்றியது. பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் அலுவலராகவும், தடகள வீராங்கனையாகவும் உள்ள இளம்பெண்ணுக்கு, ஒரு மாதத்திற்குள் இருமுறை திடீர் நினைவிழப்பு உட்பட அச்சுறுத்தும் பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. மேலும் வலது காதை சுற்றி உணர்விழப்பு ஏற்பட்டது.
அப்பெண்ணின் வலது தோள்பட்டையில் பலவீனமான அறிகுறிகளும் பயிற்சி செயல்பாடுகளின்போது வெளிப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு கதிரியக்க இமேஜிங் பரிசோதனை வழியாக, மூளைத்தண்டுக்கு மிக நெருக்கமாக, மண்டையோட்டின் அடிப்பகுதியை ஒட்டியுள்ள வலது தொண்டை குருதிக்குழாயில் மிதமான அளவில் புற்றுக்கட்டி இருப்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.
இக்கட்டி இருந்த அமைவிடத்தின் காரணமாக விழுங்குவது, பேசுவது மற்றும் தோள்பட்டை அசைவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்குரிய மிக முக்கிய நரம்புகள் மற்றும் ரத்தநாளங்கள் மீது அழுத்தம் ஏற்பட்டது தெரிந்தது. அந்த இளம்பெண்ணுக்கு நரம்பியல் மற்றும் நரம்பியல் இடையீட்டு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் மற்றும் இம்மையத்தின் காது மூக்கு தொண்டை, மண்டையோட்டு அடிப்பகுதி அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு, 26 மணி நேர அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. பேச்சு மற்றும் விழுங்கல் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறுகையில், இன்றியமையாத கழுத்துப் பெருஞ்சிரையை அகற்றாமல் தக்கவைக்கும் அதே வேளையில், புற்றுக்கட்டியை அகற்றுவதே எமது பிரதான நோக்கமாக இருந்தது. இதற்கு மிக துல்லியமான புற்றுக்கட்டி அகற்றலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் ரத்தநாளங்களில் சேதம் ஏற்படாமல் கவனமாக பாதுகாப்பதும் அத்தியாவசியமான நடவடிக்கையாக இருந்தது. இதனை வெற்றிகரமாக மேற்கொண்டோம் என்றார்.
The post வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.