சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, மக்களிடம் வாக்குறுதிகள் அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருவது நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதேபோன்று வீடு, வீடாக சென்று மக்களுடன் உறவினர்களை போல பேசி, பழகி வாக்கு சேகரிப்பது பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.
இதனால் தொகுதி முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் மாலைகள் அணிவித்தும் தங்கள் வீட்டு உணவை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலாப்பூர், நந்தனம், ஆர்.ஏ.புரம், அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
பின்னர் தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்சென்னை தொகுதிக்காக வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளேன். கிழக்கு கடற்கரை சாலையின் மக்களின் கோரிக்கை ஏற்று கோவளம் முதல் தி.நகர் வரை சைதாப்பேட்டை மார்க்கமாக பேருந்து இயக்க வலியுறுத்தி, தற்போது பேருந்து இயக்கப்படுகிறது. கொட்டிவாக்கம் பகுதியில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீன்அங்காடி கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் தென்சென்னைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இந்த சதுப்புநிலம் குறித்து தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரான என்னை ஆதரித்து மயிலாப்பூர் தொகுதியில் 3ம் கட்ட பிரசாரம் தொடங்கியுள்ளனர். வழி எங்கும் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வாசலிலே உதயசூரியன் சின்னம் கோலமிட்டும், நம்முடைய முதலமைச்சரின் திட்டங்களை வரைந்தும் எங்களை வரவேற்று வருகின்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு விரைந்து கட்டப்பட்டு வருகிறது. இது திராவிட மாடல் அரசுக்கு நமது முதலமைச்சர் அவர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. 40 தொகுதிகளில் மட்டுமல்ல இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும் இது உறுதி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது.
அதே சமயம் பாஜவின் அறிக்கை ஒரே நாடு ஒரே ஆட்சி என்று இந்தியாவின் பன்மை தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளது. ஊழலை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட தகுதியற்ற கட்சிதான் பாஜ. ஊழலை அரசுடைமையாக்கும் வகையில் தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்தவர்களே இவர்கள்தான். வரும் 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய தொகுதிகளுக்கு சேர்ந்து தேர்தல் பரப்புரை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி appeared first on Dinakaran.