- சித்ரா பௌர்ணமி கிரிவலம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- சித்ரா பூர்ணமி
- கலெக்டர்
- பாஸ்கரா பாண்டியன்
- சித்ரா பவுர்ணமி விழா
திருவண்ணாமலை, ஏப்.16: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்யப்படுகிறது. அதையொட்டி, அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு நடத்தினார். அப்போது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் வாய்ப்பு சித்ரா பவுர்ணமி நாட்களில் இருப்பதால் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்பி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அதில், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, ஏடிஎஸ்பி பழனி, கோயில் மேலாளர் செந்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் உளபட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நகரின் முக்கிய சாலைகளில் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுகிறது. எனவே, தற்காலிக பஸ் நிலையங்களில் நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்ய வேண்டும். மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 2,800 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை அருகே வருவதற்கு வசதியாக சுமார் 120 இணைப்பு பஸ்கள் இலவசமாக இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 85 இடங்களில் மருத்துவக் குழுக்கள், 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணபை்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்படம், மேலும், காவல் உதவி மையங்கள், காவல் கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள், கார், வேன்களை நிறுத்த பார்க்கிங் வசதி என விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, கோயில் நிர்வாகமும், காவலத்துறையும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், விரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட உள்ளன. அன்னதானம் வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டும். அன்னதான உணவின் தரத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post சித்ரா பவுர்ணமி கிரிவலம் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு திருவண்ணாமலையில் வரும் 23ம் தேதி appeared first on Dinakaran.