×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை, போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணிப்பு: தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளதால் தீவிரம்

காஞ்சிபுரம்: தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பறக்கும் படையினர், போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காஞ்சிபும், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கருவிகளும், கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தற்போது, மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பொது இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், காணொலி கண்காணிப்பு குழுக்கள், காணொலி பார்வையாளர் குழுக்கள், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு உதவி செலவின பார்வையாளர் குழு மற்றும் உதவி கணக்கு தணிக்கை குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பிரசித்தி பெற்ற கோயில்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அப்போது, சந்தேகப்படியான பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா, சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித் திரிகின்றார்களா என்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பறக்கும்படை குழு, காணொலி கண்காணிப்புக்குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கு ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்பேரில், மேற்கண்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, மேற்படி குழுவினரின் பணிகள் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடைமுறை மற்றும் நடத்தை நெறிமுறை பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு பணிக்கும் துணை கலெக்டர் நிலையில் ஒரு கண்காணிப்பு அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைக்குழு, நிலை கண்காணிப்பு குழு, காணொலி கண்காணிப்பு குழு, உதவி செலவின பார்வையாளர் குழு, உதவி தணிக்கை குழு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும்போது ஆய்வு கூட்டங்களும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தல், பிரசாரத்தின்போது, பணம் வழங்குதல், ஆரத்தி எடுப்போருக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சம்பந்தமான விதிமுறை மீறல்களை முறைகேடுகளை நடக்கிறதா என அந்தந்த குழுக்கள் கண்காணித்து வருகின்றன. தேர்தல் பறக்கும் படை, போலீசாரின் 24 மணி நேர தீவிர ரோந்து பணியால் பல்வேறு தேர்தல் முறைகேடு சம்பங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் தேதி நெருங்க நெருங்க பணியின் தீவிரம் மேலும் கூடும் என அவர்கள் கூறுகின்றனர்.

* சி-விஜிலில் புகார்கள்
இதைத்தவிர வேட்பாளர்கள் கட்டிடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்க அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. C – Vigil என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் நடைபெறும்போது ஏற்படும் விதிமுறை மீறல்களை குறித்து புகார்கள் வந்த வந்த வண்ணம் உள்ளன. இதில், விவரங்கள் புகைப்படம், காணொலி காட்சி மற்றும் விதிமீறல் நடைபெறும் இடம் உடனடியாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். மேற்படி புகாரினை சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும்படை குழுவினருக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவைப்படுவோார், இந்த செயலியை Google Play Store-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* கட்டுப்பாட்டு அறை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகின்றன. பொதுமக்கள் இலவச அழைப்பு எண்களில் 24 மணி நேரமும் புகார் புகார் தெரிவிக்கலாம்.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை, போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணிப்பு: தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளதால் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : force ,Chengalpattu, Kanchipuram district ,Kancheepuram ,Chengalpattu ,Kanchipuram ,Tamil Nadu ,Chengalpattu, Kancheepuram district ,
× RELATED அரசு வேலை வாங்கித்தருவதாக ஓய்வுபெற்ற...