×
Saravana Stores

விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாத பாஜ ஆட்சி: விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் சாடல்

முசாபர்நகர்: ‘‘கடந்த 10 ஆண்டுகாலமும் பாஜ சர்வாதிகார ஆட்சி நடத்தியது. எந்த எதிர்பார்ப்பையும் அவர்கள் நிறைவேற்றவில்லை’’ என பாரதிய கிசான் (பிகேயு) விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் கூறி உள்ளார். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-21ல் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தியதில், பாரதிய கிசான் சங்கம் முக்கிய பங்கு வகித்தது. சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் அங்கமான இச்சங்கத்தின் தலைவர் நரேஷ் திகைத் உபியின் முசாபர்நகரில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நாங்கள் வெளிப்படையாக பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதை ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்தபடி பாஜ ஆட்சி செய்யவில்லை. எங்களின் எந்த எதிர்பார்ப்பையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்தியா மிகப்பெரிய நாடு. இங்கு எல்லா பிரச்னையையும் அரசு தீர்த்து விட முடியாது. ஆனால் முக்கிய பிரச்னைகளை பாஜ அரசு புறக்கணித்தது. குறிப்பாக விவசாயிகளை பாஜ முற்றிலும் புறக்கணித்தது.

டெல்லியில் 13 மாதங்கள் நடந்த போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால் அதை ஒப்புக் கொள்ள பாஜ அரசு தயாராக இல்லை. இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம். அப்படியிருந்தும் பாஜ விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகாலமும் பாஜ சர்வாதிகார ஆட்சியை நடத்தியிருக்கிறது. பிடிவாதக்காரன் ஒருவன் அவன் சொல்வது நடந்தே தீரணும் என பிடிவாதம் பிடிப்பான்.

அப்படிதான் பாஜ அரசும் செயல்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு அரசு இந்த மாதிரி செயல்பட முடியாது. சில இடங்களில் அரசு வளைந்து கொடுக்க வேண்டும். சில இடங்களில் மக்கள் வளைந்து செல்ல வேண்டும். சமநிலையை பராமரித்து சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டியதுதான் அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாத பாஜ ஆட்சி: விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Farmers Union ,president ,Naresh Thikait Chadal ,Muzaffarnagar ,BJP ,Bharatiya Kisan ,PKU ,Farmers' Union ,Naresh Dighai ,Union government ,
× RELATED கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு...