நாடெங்கிலும் உள்ள சிவாலயங்கள் யாவும் வழிபாட்டுக்கு உகந்தவைதான். அவற்றுள் திருமுறை ஏற்றவை மிகச் சிறப்பானவை. அதிலும் சைவத்தின் ஆணிவேரான திருநாவுக்கரசர் சுவாமிகள் சரணம் அடைந்து அரனடி சேர்ந்த தலமென்றால் அதன் பெருமையை என்னென்பது? இவ்வளவு சிறப்பு ஏற்றதால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனைப் பாடுவார்க்கு,
‘‘தம்மையே புகழ்ந் திச்சைபேசினுஞ்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தருஞ் சோறும்கூறையும்
ஏத்த லாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவ லோகம் ஆள்வதற்(கு)
யாதும் ஐயுற வில்லையே!’’
– என்று திருத்தலத்தின் பெருமை கூறினார். போதாக்குறைக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரின் அவதாரத்தலமும் கூட. இன்னுமா நீங்கள் இத்திருத்தலத்தின் பெயர் அறியவில்லை?
இறைவனை வழிபடும் பல மார்க்கங்களுள் மிகவும் சுலபமானது அவனைச் சரணடைவதுதான். இறைவனை, ‘தாளடைந்தேன்’ என்ற அப்பரே பாடியுள்ளார். விசிஷ்டாத் வைத மார்க்கத்தின் சாராம்சமே ‘‘சரணாகதி’’ தான். அதனால்தான். இத்தலம் திருப்புகலூர், புகலூர், சரண்யபுரி, சரணாலய புகலூர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அப்பர் சரணடைந்து முக்தி பெற்றதும் இத்தலத்தில்தான்!
இறைவன் திருநாமமும் திருப்புகழூர்நாதர். இதைத் தவிர இவர் அக்னீச்சவரர், அக்னிபுரீச்வரர், சரண்யபுரீசர், என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தல விருட்சம் ‘புன்னை’யாயிருப்பதால் புன்னாகநாதர், பிரத்யட்ச வரதர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவரின் லிங்கத் திருமேனி சற்று கோணலாயிருப்பதால் ‘கோணப்பிரான்’ எனவும் அழைக்கப் படுகிறார். இதே ஆலயத்தில் வர்த்தமானீஸ்வரர் சந்நதியும் இருக்கிறது. இதற்குத் தனியாக சம்பந்தர் பதிகமும் உண்டு. இந்த ஈசனுக்கு வர்த்தமானீஸ்வரர், மனோன்மணி என்றும் பெயர். இத்தலத்தில் உறையும் இறைவியின் திருநாமம் கருந்தாழ் குழலியம்மை. தீர்த்தம் – அக்னி தீர்த்தம்.
இத்திருக்கோயில் நன்னிலத்திற்குக் கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. அப்பர் பெருமான் முக்தி பெற்ற தலம். கோயில் பெரியது. கோயிலின் தென் பக்கம் தவிர மற்ற பக்கங்களில் எல்லாம் கருங்கல்லினால் கட்டிய அகழி காணப்படுகிறது. அதில் நீர் நிறைந்துள்ளது. கருவறையில் பெருமான் சற்று சாய்வாகக் காணப்படுகிறார். இதனால் இவரை ‘கோணப்பிரான்’ என்று அழைக்கிறார்கள். அருகிலுள்ள சந்திரசேகரர் சந்நதி மிகவும் விசேஷமானது. எதிரில் அக்னி பகவான் உருவம் உள்ளது. வாதாபி கணபதி அருகில் அப்பரடிகளின் திருவுருவம் உள்ளது.
திருக்கோயிலைச் சுற்றி அழகிய மலர்த் தோட்டம் உள்ளது அதற்கு ‘அப்பர் நந்தவனம்’ என்று பெயர். இதன் அருகில் கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலையும் 90 அடி உயரமும் உள்ள இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் உள்ளன.
முதற் பிராகாரத்தில் தெற்குப் பார்த்த வண்ணம் இறைவி கருந்தாழ்குழலியம்மை தனிசந்நதி கொண்டு அருள்பாலிக்கிறாள் அருகில் தெற்கு நோக்கிய வண்ணம் சண்டிகேஸ்வரியும் தனிச் சந்நதி கொண்டிருக்கிறாள். இத்தெய்வம் அரியதும், அபூர்வமானதுமாகும் என்று சொல்லப்படுகிறது. பிராகாரத்தின் தென் பக்கத்தில் வசந்த மண்டபம், நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளது. இரண்டாவது பிராகாரத்தில் அக்னி பகவான், நால்வர், பாணாசுரன், ஜமதக்னி பூஜை செய்த லிங்கம், அறுபத்து மூவர், அகோரேச்வரர், பூதேஸ்வரர் இருவரும் தட்சிணாமூர்த்திக்கு முன்னால் உள்ளனர். பிராகாரத்தின் மேற்குப் பக்கம் வாதாபி கணபதி, அப்பர், ததீசி, பராசரர், பிருகு பூஜித்த லிங்கங்கள், முருகன், முருகன் பூஜித்த லிங்கம், நீலகண்ட சிவாச்சாரியார், புலஸ்திய ஜாபாலி, வாதராயர் பூஜித்த லிங்கங்கள், லட்சுமி ஆகியோர் உள்ளனர்.
வடக்குப் பிராகாரத்தில் சனீஸ்வர பகவான், நளன், அன்னபூரணி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், காசி விஸ்வ நாதர், திரிமுகாசுரன், காலசம்ஹாரர் ஆகியோர் உள்ளனர். கடைசியாக தல மரமான புன்னை மரம் உள்ளது. அங்குள்ள பவிஷ்யேச்வரரை அடுத்து வாமதேவர் பூஜித்த லிங்கம், எதிரே சண்டேஸ்வரரும் உள்ளனர். வடகிழக்கு மூலையில் ஆகமப்படி அமைந்த நடராஜர், கால பைரவர், சூரியன் உள்ளனர். தென் கோடியில் சந்திர சேகரர், எதிரே அக்னீஸ்வரர், வடகோடியில் வர்த்தமானீசுரர், மனோன்மணி, முருக நாயனார் உள்ளனர்.
இத்தலத்தில் உள்ள பல சந்நதிகளில் அதிசயங்கள் பலவற்றைக் கொண்டுள்ள மூர்த்திகளையும் காணலாம்.கோயிலின் உள்ளே இரண்டு கருவறைகள் இரண்டு மூலவர்கள். ஒன்றில் அக்னீசுவரர், அடுத்ததில் பதிகம் பெற்ற வர்த்தமானீசுரர்.அக்னி பகவான் உருவத்தில் இரண்டு முகங்கள் ஏழு சுடர்கள், மூன்று பாதங்கள், ஏழு கைகள் கொண்டு அபூர்வ வடிவில் காட்சி தருகிறார்.கோஷ்ட தெய்வங்காக மேற்கு சுவரில் லிங்கோத் பவரும், வடக்கு சுவரில் அஷ்ட புஜ துர்க்கையும் உள்ளனர். இவ்வமைப்பு இத்தலம் முதற் சோழர்கால கட்டடக் கலையைக் கொண்டுள்ளது என்பது விளங்குகிறது.
அதிசயமாக இங்கு அப்பர், அப்பூதியடிகள் ஆகியோருக்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் இருக்கின்றன. அதிசயமாக ஒன்பது நவக்கிரக நாயகர்கள் ‘ட’ கர வரிசையில் அமைந்துள்ளனர்.
இத்திருத்தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ள மனிதன் என்று மூன்று முகங்கள் இருந்தன. அவன் சிவபெருமானை இந்த மூன்று முகங்களால் மலர், நீர் கொணர்ந்து மூன்றாவது முகத்தால் ஸ்தோத்திரம் செய்து வழிபட்டு சிவ பக்தன் ஆனான்.
ஒரு கட்டத்தில் ஆணவம் மேலிட பலரைத் துன்புறுத்தலானான். சிவபெருமான் அவனை சம்ஹாரம் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால், அவன் சிவபக்தனாக இருந்த படியால் புன்னை மரமாக வளரும் படி அருளினார். வடக்குப் பிராகாரத்தில் உள்ள இம்மரமே தல விருட்சமாகும். ஒரு சமயம் அப்பர் பெருமான் இத்திருக்கோயில் முழுவதையும் தமது உழவாரப் படை மூலமாக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரது உழவாரத் தொண்டை உலகோருக்குக் காட்ட விரும்பிய இறைவன் அவர்முன் பொன்னும் மணியும் நிறைந்து கிடக்கச் செய்தார். ஆனால், அப்பர் பெருமானோ அவற்றையெல்லாம் குப்பையாக எண்ணி, ‘ஓடும், செம்பொன்னும் ஒன்று’ என பாவித்து குப்பையோடு குப்பையாக வாரி எறிந்தார்.
இதே இடத்தில் நேர் எதிரான மற்றொரு வரலாறும் உண்டு. திருவாரூரில் தேர்த்திருவிழா. தன் மனைவி பறவை நாச்சியாருக்குக் கொஞ்சம் பொன் கொடுக்க வேண்டும் என சுந்தரமூர்த்தி சுவாமிகள் விரும்பினார். யாரிடம் போய்க் கேட்பது? கவலையோடு அருகில் கிடந்த செங்கற்களைத் தலையனை வைத்துப்படுத்து உறங்கி விட்டார். அவர் தூங்கி எழுந்து பார்த்த போது அச்செங்கற்கள் யாவும் பொன் கற்களாக மாறிக் கிடந்தன. இறைவன் கருணையை வியந்து.
மிகவும் மகிழ்ச்சியடைந்த சுந்தரர், ‘‘வெற்றி விடையார் அருளேலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்பொன்தின் கல்லாயின! ‘‘ என இறைவனைப் போற்றிப் பாடினார்.அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் இத்தலத்தில் அருள்பெற்றது போலவே, அதே ஊரில் பிறந்து நந்தவனம் சென்று மலர்களைப் பறித்து வர்த்தமானீச்வரருக்கு அளித்து வந்து முருக நாயனார், அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவரே! இவர் தான் ஞான சம்பந்தர் நல்லூர் பெருமணத்தில் நம்பியாண்டார் நம்பியின் மகளான ஸ்தோத்ரி பூர்ணாம்பிகையை மணம் செய்து கொண்ட போது திருமணத்தை வேத விதிப்படி செய்து வைத்தவர். பின் அவருடன் சித்தோதியில் கலந்து விட்டவர்.
இத்திருக்கோயிலில் இன்னும் ஓர் அதிசயம் இருக்கிறது. இங்கு கோயிலைச் சுற்றியிருக்கும் அகழி அதிசயமானது. அதுவே திருக்குளம் ஆகும். இதற்கு நீர் முடி கொண்டான் நதிக் கிளையிலிருந்து வருகிறது. முடி கொண்ட சோழன் என்பவனால் தான் ‘முடி கொண்டான் ஆயிற்று’ பெரும்பாலும் கோட்டை கொத்தளத்திற்குத் தான் அகழி ஏற்படுத்துவார்கள். இங்கு கோயிலுக்கு மட்டும் அகழி உருவாக்கியிருப்பது அதிசயம் தானே’ இதையே திருக்குளமாகக் கருதி பாண தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று கூறுகிறார்கள்.
கங்கையிற் புனிதமான காவிரி பல கிளைகளாகப் பிரிந்து இந்த பிரதேதத்தை சோலைமயமாக்கியதால் இதை ‘‘பொய்கை சூழ் புகலூர்’’ என்று சம்பந்தர் பாடி விட்டார். கோயிலைச் சூழ்ந்துள்ள அகழியில் ஒரு பகுதியைத் தூர்த்து வழி செய்திருக்கிறார்கள்.திருப்புகலூர் திருத்தலம் காவிரி தென் கரைத்தலங்களில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருதலவரிசையில் 150-வது தலமாக உள்ளது. இத்தல இறைவன் மீது திருஞானசம்பந்தர் 22-பாடல்களும், அப்பர் 44-பாடல்களும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் 11-பாடல்களும் பாடியுள்ளனர்.
திருப்புகழூர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்கள், மற்ற ஆலயங்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானது. இங்கு தமிழ் மாதங்களில் வரும் முக்கியமான பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றாலும் சீர் மிகு சித்திரை மாதத்தில் நடைபெறும் அப்பர் பெருமானுக்காக நடைபெறும் ‘விழா’தான் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் அப்பரின் வாழ்க்கை வரலாறு பலருக்கும் விளங்குமாறும் காட்டப்படுகிறது.
திருநாவுக்கரசர் பெருமான் எனும் அப்பரடிகளின் திருநட்சத்திரமும், சோழப் பேரரசின் பிரசித்தி பெற்ற மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனுடைய திருநட்சத்திரமும் அப்பர் பெருமானுக்கு ‘‘சதயத் திருவிழா’’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மிகவும் உற்சாகத்தோடும் விமரிசையாகவும் ‘‘பத்து நாட்கள்’’ திருவிழா நடைபெறுகிறது. இதில் ஓர் அதிசயம் என்ன வென்றால். அப்பர் வாழ்க்கையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் எல்லாம் வரிசையாக அப்பர் பாடி வைத்த பாடல்களின்படி, அவர் பெற்ற துன்பங்களையெல்லாம் பக்தர்கள் கண்டு உய்யும் வண்ணம் காட்சிப்படுத்தியபடி கொண்டாடுவதுதான். இவ்வாலயத்தின் சிறப்பு!இங்கு பத்து நாட்கள் நடைபெறும் அப்பரின் சதயத்திருவிழாவைக் காண்போம்.
முதல் நாள் விழா: பெற்றோரை இழந்த அப்பர் பெருமான் தமக்கை திலகவதியாரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். சைவ சமயத்தை வெறுத்து. சமண மதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு குருவாக விளங்கினார். சமணத்தை விட்டு சைவத்தில் இணையுமாறு திலகவதியார் பலமுறை வற்புறுத்தியும் அவர் மாறவில்லை. தம்பி மனம் மாற வேண்டி அல்லும் பகலும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார். ஒரு நாள் இறைவன் அசரீரியாக ‘அப்பருக்கு சூலை நோய் கொடுத்து ஆட்கொள்ளுபோம்’ என வரமளித்தார். உரிய காலத்தில் இறைவன் அவருக்கு வயிற்று வலி எனும் சூலை நோய் தந்தார். நோயால் அப்பர் நொந்தார்.
சமணர்கள் தங்களுக்குத் தெரிந்த வைத்தியங்களைச் செய்தும் நோய் தீராததால் அவரைக் கை விட்டனர். திலகவதியார் தம்பியை அரவணைத்துத் திருநீறு தந்து கோயிலுக்கு அழைத்துச் சென்றார். வலி பொறுக்க முடியாமல் அப்பர் இறைவனை நோக்கித் தன் தவறுக்கு மன்னிக்குமாறு கூறி, முதன் முதலாக நோயின் கடுமை நீக்கி அருள்புரிய வேண்டினார் திரு அதிகை வீரட்டானம் திருத்தல இறைவன் மீது பாடினார் இப்படி, அது முதல் தேவாரப்பாடலாக ஒலித்தது.
‘‘கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேயிர வும் பகலும்
பிரியாது வணங்குவ எனப் பொழுதும்….’’
என்று தொடங்கி பத்துப் பாடல்கள் பாடி தன் நோய் நீக்க வேண்டினார். உடனே சூலை நோய் நீங்கியது. அப்பர் உடல் பூரிக்க ஆனந்தத்தில் அழுந்தி இறைவனை வணங்கித் துதித்தார் ‘அற்புத மதுரமாகிய தேவாரப் பாடல்களால் சிவனைத் துதித்து பாடியதால் அவருக்குத் ‘திருநாவுக்கரசு’ என்ற பெயரை அளித்து விட்டு மறைந்தார். அப்பர் மனம் திருந்தி, மனம் மொழி மெய்களால் திருத்தொண்டு செய்யத் திருவுளங்கொண்டு சைவத்தில் இணைந்தார்.
இக்கதை ஆலய அன்பர்களால் காட்சிப்படுத்தப்பட்டு முதல் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் நாள் விழா: அப்பரடிகள் சமணத்தை விட்டு சைவ சமயத்துக்கு மாறியதை அறிந்த சமணர்களும், சமணர்களின் அரசனான பாடலிபுத்ரத்தராசனும் கடுங்கோபம் கொண்டு அப்பருக்குப் பல வகையிலும், தண்டனை அளித்தான். கொதிக்கும் சுண்ணாம்பு வெந்நீற்றறையில் சிறை வைத்தான். அப்பர் பெருமான் சிறிதும் அஞ்சாமல் சிறை சென்றார். அங்கு இறைவனை
எண்ணிமாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் விங்கிள வேனிலும்
மூசு வண்டரை பொய்கையும்
போன்றதே
ஈசனெந்தை இணையடி நீழலே…’’
என்று தேவாரம்பாட வெந்நீற்றறையில் இளந்தென்றல் வீசிட பொய்கையின் குளிர்ச்சியைப் பெற்று உயர்ந்தார்.தனிக் குறுந்தொகையில் உள்ள இப்பாடல் காட்சி இரண்டாம் நாள் திருவிழாவாகக் காட்சிப்படுத்துகிறார்கள்.மூன்றாம் நாள் விழா: தோல்வி கண்ட சமணர்கள் மீண்டும் வெகுண்டெழுந்து அப்பரை யானையை விட்டுக் கொல்ல முயன்றனர். அப்பரை நோக்கி யானையையும் பாகனையும் ஏவிவிட, அப்பர் பெருமான் இறைவனை வணங்கிய படியே யானையை நோக்கி,
‘‘கண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்
திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவையுடையும் வளரும் பவள
நிறமும்
அண்ணவரண் முர ணேறும் அகலம் வளாய
அரவும்
திண்ணன் கெடிலப் புனலுமுடையா
ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்சவருவது மில்லை’’
என்று தேவாரப் பதிகம் பாட, யானை அவரைச் சுற்றி வந்து வணங்கி விட்டுச் சென்றது. திருஅதிகை வீரட்டானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியை மூன்றாம் நாள் விழாவில் காட்சிப் படுத்திக் கொண்டாடுகிறார்கள்.
நான்காம் நாள் விழா: அரசன் கொடுத்த தண்டனையிலிருந்து சூப்பிவரும் அப்பரடிகளைக் கண்டு அடங்காத சினம் கொண்ட சமணர்கள் அவரை இழுத்துக் கொண்டு போய், அரசன் கட்டளைப்படி ஒரு கல் தூணில் இணைத்து கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டு போய் அவரை நடுக்கடலில் வீசி எறிந்தனர் அப்பர் பெருமான் சிவபெருமானின் திருவடிகளை
எண்ணித் துதித்த படியே,
‘‘சொற்றுணை வேதியன் சோதி வானவில்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடவிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சி வாயவே!’’
என்று பத்துப் பாடல்கள் கொண்ட நமச்சிவாயப் பதிகம் பாடினார் இறை அருளால் கற்றூண் கல் தெப்பமாக மிதந்து அப்பர் அடிகளைத் தாங்கிச் சென்று திருப்பாதிரிபுலியூர் எனும் திருத்தலம் கொண்டு சேர்த்தது. இந்த நிகழ்ச்சி நான்காம் நாள் விழாவில் காட்சிப்படுத்தப் படுகிறது.
ஐந்தாம் நாள் விழா: அப்பர் அடிகள் பல தலங்களைச் சேவித்து வருங்காலையில் திருத்தூங்கானை மாடஞ் சென்று சிவ மூர்த்தியை நோக்கி, ‘‘சுவாமி! அறிவற்றவனாகி சமணசமயத்தில் சேர்த்தால் அழுக்கடைந்த இந்தத் தேகத்துடன் வாழ விரும்பவில்ல. அடியேன் உயிர் வாழ வேண்டுமெனில் பாவப்பட்ட இத்தேகத்தில் தேவரீர் திருவிலச்சினையாகிய இடபக்குறியையும் சூலக்குறையும் பொறித்தருள வேண்டும் என்று மன முருக வேண்டி,
‘‘பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி
மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்
சுடர் கொழுந்தே’’
என்று திருப்பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறை அருளால் ஒரு பூதம் தோன்றி அவ்விலச்சினைகளைத் தேகத்தில் பொறித்தது இந்நிகழ்ச்சி தூங்கானைமாடம் எனுந் திருத்தலத்தில் நடந்தது. இதை ஐந்தாம் நாள் திருவிழாவில் காட்சிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள்.
ஆறாம் நாள் விழா: சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்த மூர்த்திகளின் மகிமையைக் கேட்டு அவரை வணங்க வேண்டும் என்ற அவாவினால், சீர்காழி சென்று அவரைக் கண்டு வணங்கினார். சீர்காழிப் பிள்ளை அவரை ‘‘அப்பரே!’ என்ற அழைத்ததால் அப்பெயரே நிலைபெற்றது.பின் அவரிடம் விடைபெற்று, திருநல்லூரை அடைந்த அப்பரடிகள் சிவபெருமானிடம் திருவடியை என் சிரசில் வைத்து அருள வேண்டுமென விண்ணப்பித்து,
‘‘நினைந்துருகும் அடியாரை
நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப்
போர்வைவைத்தார்
செழுமதியின் தளிர் வைத்தார்
சிறந்துவானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போத விழ்ந்து மதுவாய்ப்பில்கி
நனைந்தனைய திருவடியென் தலை
மேல்வைத்தார்
நல்லூதெம் பெருமானார் நல்லவாறே’’
என்று பதிகம் பாட, சிவபெருமான் தம் திருவடியை அப்பர் பெருமான் சிரத்தில் சூட்டியருளினார். இந்நிகழ்ச்சி ஆறாம் நாள் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.ஏழாம் நாள் விழா: அப்பர் பெருமான் பல தலங்களைத் தரிசித்துத் திங்களூர் வழியாகச் செல்லுகையில் அப்பூதியடிகள் என்ற சிவனடியார் தம்மிடத்தில் மிக்க தேர்வு பேரன்பு வாய்த்தவராய் இருக்கக் கண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார்.
அப்பூதி அடிகள் அப்பருக்கு அமுது படைத்தல் வேண்டித் தம்புத்திரர் இருவரில் முத்த திருநாவுக்கரசரை நோக்கித் தோட்டத்திற் சென்று வாழைக் குருத்தைக் கொண்டு வரச் சொன்னார். அக்குமரர் இலை கொய்கையில் பாம்பு தீண்ட விஷம் ஏறுவதன் முதன் இலையை வீட்டில் இட்டுக் கீழே விழுந்து இறந்தான். சவத்தை மறைத்து இனி அப்பர் அமுது கொள்வாரே என்று தடுமாற்ற மின்றி அவரை அமுது செய்ய அழைத்தார். அப்பர் அவ்விடம் நடந்தவைகளை திருவருளால் உணர்ந்து, அவரது அன்பை நினைத்து திருவருள் சுரந்து சவத்தைச்
சிவாலயத்து முன்னே கொணர்ந்து,
‘‘ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி யுயர்வரை
ஒன்றுகொ லாமிகு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே!’’
என்று பத்துப் பாடல்கள் கொண்ட பதிகம் பாட, அப்பூதியடிகளின் புத்திரரின் விடம் நீங்கி உயிர் பெற்றான். இவ்வரிய நிகழ்ச்சி விடந்திர்த்த திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியைக் காட்சிப் படுத்தி ஏழாம் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.எட்டாம் நாள் விழா: அப்பர் அடிகள் திருத்தல யாத்திரை மேற்கொண்டு வருகையில் திருவீழிமிழலை அடைந்தார். அப்போது நாடெங்கும் கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் துடித்தனர். சிவனடியார்கள் வருந்தி நின்றனர். அப்பர் சிவபெருமானை வேண்டி படிக்காசுகள் பெற்று பஞ்சம் போக்கினார்.
அடுத்து திருமறைக்காடு எனும் வேதாரண்யம் திருத்தலம் சென்று, வேதம் பூஜித்த, வெகுகாலம் மூடப்பட்டிருந்த திருக்கதவம் திறக்கப்பதிகம் பாடியருளிய திருக்கதவம் திறக்கச் செய்தார். அடுத்து திருவாய்மூர் சென்ற அப்பர் பெருமான் சிவபெருமானை நேரில் தரிசிக்க விருப்பம் கொண்டார்.
‘‘எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடையாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய் மூரிச்
செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்
கொலோ’’
என்று தொடங்கி பத்துப் பாடல்களால் பதிகம் பாட சிவபெருமான் அப்பருக்கு தரிசனம் தந்தருளினார். இந்நிகழ்ச்சிகள் எல்லாம் எட்டாம் நாள் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒன்பதாம் நாள் விழா: அப்பர் பெருமான் தொடர்ந்து திருத்தல யாத்திரை மேற் கொண்டு வரும்போது பழையாறை எனும் திருத்தலத்தை அடைந்தார். கெடு மதியாளர்களான சமணர்கள் அங்கே வடதளியென்னும் ஆலயத்தில் இருந்த சிவலிங்க மூர்த்தியைக் கடத்தி சென்று எங்கோ ஒளித்து மறைத்து வைத்திருந்தார்கள். அப்பரடிகள் இறைவன் திருஉருவை தரிசித்தாலன்றி அமுது செய்யேன் என்று வருந்தியிருக்க. சிவபெருமான் கனவில் வந்து தாம் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினார். அப்பகுதியை ஆண்ட அரசன் சமணர்களை விரட்டிவிட்டு, அப்பரை வணங்கி, அவர் விருப்பப்படியே சிவலிங்க மூர்த்தியை மறுபடியும் பிரதிஷ்டை செய்தார்.
‘‘தலையெலாம் பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக்
கொண்ணுமே
அலையினார் பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே!’’
எனப் பதிகம் பாடிப் போற்றினார். இந்நிகழ்ச்சி ஒன்பதாம் நாள் திருவிழாவாகக் காட்சிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள்.பத்தாம் நாள் விழா: ஒரு சமயம் அப்பர் திருப்பைஞ்ஞீலி செல்கையில் பசிதாகத்தால் மிக வருந்தி மனந்தளர்ந்து சென்றார். இவரது களைப்பும் இளைப்பும் பசியும் தீர சிவ பெருமான் ஒரு வேதியராய் ஒரு தோப்பும் குளமும் உண்டாக்கி பொதிச்சோறும் வைத்திருந்தனர். அப்பர் வந்ததும் பொதிச்சோறுதந்து பசியையும் களைப்பையும் நீக்கினார். இறைவன் அவருக்கு காட்சி தந்தருளினார்.
தொடர்ந்து தல யாத்திரை மேற்கொண்ட அப்பர் பெருமான் இறுதியாக திருப்புகழூர் வந்தடைந்தார். இத்தலத்தின் இறைவன் அப்பரின் உழவாரத் தொண்டை உலகோருக்கு எடுத்துக்காட்ட விரும்பினார். அப்பர் உழவாரப் பணி செய்யும் போது குப்பையோடு குப்பையாக ஏராளமான பொன்னையும் மணியையும் தோன்றச் செய்தார். அப்பர் அவற்றையெல்லாம் கூட்டி எடுத்து குப்பையோடு குப்பையாகத் தூக்கி எறிந்தார்.
மற்றொரு சமயம் இவர் ஆலயமொன்றில் உழவாரப் பணியில் இருந்த போது சிவன் கட்டளையால் அரம்பையர் சிலர் இவரிடம் வந்து பலவாறு ஆடியும் பாடியும் மயக்கியும் இருக்க, இவர் தம் கொண்டிலிருந்து தமது வினையை முன்னிலையாகக் கொண்டு ‘நான் திருவாரூர் பெருமானுக்கு ஆட்பட்டவன். உங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டேன் என்று அவர்களையெல்லாம் உதறித்தள்ளினார்.
இதை,
‘‘பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்கள் தீவினைகள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
இல்லையே கிடந்தது தான் யானேல்வானோர்
தம்மானைத் தலை மகனைத் தண்ண லாரூர்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச்செய்யும்
எம்மான்ற னடித் தொடர்வா னுழிதர்கின்றேன்
இடையிலேன் கெடுவீர்கள் இடறேன் மின்னே!’’
என்னும் திருப்பதிகம் பாட, அரம்பையர் தங்கள் கருத்து முற்றாமல் அப்பரை வணங்கிச் சென்றனர்.
இறுதியாகத் திருப்புகலூர் வந்த அப்பரடிகள் திருப்புகழூர் நாதனைக் கண்டு தரிசித்து,
‘‘எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும் போ துரைக்க மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்.
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!’’
என்று பதிகம்பாடி இறைவனடி சேர்ந்தார் அப்பர் பெருமான். மேற்கூறிய அனைத்தும் பத்தாம் நாள் திருவிழாவாகக் காட்சிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள். அப்பர் இறுதியாகப் பதிகம் பாடியதும் முக்தியடைந்ததும் இங்குதான்!இறைவனால் ‘திருநாவுக்கரசர்’ என்றும், திருஞானசம்பந்தர் பெருமானால் ‘அப்பர்’ என்று பாராட்டப் பெற்றவருமான, சான்றோர்களால் வாரீசர் என வணங்கப்பட்ட வருமான அப்பரடிகள் இறுதியாக வந்து தரிசனம் கண்டு, இறுதியாகப் பதிகம் பாடிச் சிறப்பித்த உன் இந்த சரணாலயபுகழூர்.
இறைவனை வழிபடும் பல மார்க்கங்களுள் மிகவும் சுலபமானது அவனைச் சரணடைவது தான். அப்பர் தாம் இறுதியாகப் பாடிய திருப்புகளூர் பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் ‘உன்னடிக்கே போதுகின்றேன்’ என்கிறார். அதாவது, ‘இறைவன் திருவடிகளே சரணம்’ என்கிறார். திருப்புகலூர் திருக்கோயில் சரணாகதி தத்துவத்தை விளக்கும் தலமாக விளங்குகிறது.சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இங்கு நடைபெறும் சதயத்திருவிழா அப்பரின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பத்துநாள் திருவிழாவாக நடைபெறுவது வேறு எங்கும் காண இயலாத அற்புதக் காட்சியாகும்.!
டி.எம். ரத்தினவேல்
The post சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர் appeared first on Dinakaran.