×

பதற்றமான 250 வாக்குச்சாவடிகளிலும் வெப்-கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு

சேலம், ஏப்.15: சேலம் மாவட்டத்தில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும், வெப்-கேமரா மூலம் நேரடி கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிய ஏந்திய சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

தேர்தலுக்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வரும் வகையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. மேலும், பதற்றமான மற்றும் மிகப் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்குள் வருகிறது. மாவட்டம் முழுவதும் 1,275 மையங்களில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுவதை கண்காணித்து உறுதி செய்திடும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இதில், சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் 89 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 146 பதற்றமான வாக்குச்சாவடிகளும் உள்ளன.

குறிப்பாக, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் 82 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 48 பதற்றமான வாக்குச்சாவடிகளும் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம், மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் இவ்வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கப்பார்கள்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, மத்திய அரசின் வங்கி பணியாளர்கள், அஞ்சல் துறை அதிகாரிகள் என 172 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லமூப்பம்பட்டி ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, சூரமங்கலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் உள்பட பதற்றமான வாக்குச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள், தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அத்துடன், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதேபோல், வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மயில்
மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post பதற்றமான 250 வாக்குச்சாவடிகளிலும் வெப்-கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,CISF ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!