×

வர்ணாசிரமம் தான் லட்சியம் என்று கூறி கொண்டு அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியிடுவது கபட நாடகம் : பாலகிருஷ்ணன் கடும் தாக்கு

பாஜவோட மறைமுக கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத நிலையில் சிக்கித் தவிக்கிற அதிமுக தேர்தலுக்கு பின் முகவரி இல்லாமல் போகும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 இடங்கள் மற்றும் வட இந்தியாவில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும்.

அதிமுக, பாஜகவோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிறார்கள். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் பாஜ பற்றியோ, மோடியை பற்றியோ, மோடி ஆட்சியின் அவலங்கள் பற்றி, இந்த 10 ஆண்டுகளில் மோடி செய்திருக்கிற சீரழிவுகள் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு எடப்பாடி தயாராக இல்லை. எனவே அதிமுக, பாஜக இரண்டு பேரும் மறைமுகமான கூட்டணி கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு பிறகு அவர்கள் ஒன்றாக சேர்வதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டுமா என்ற கேள்விக்கு எடப்பாடி, நாங்கள் அவரை பிரதமராக ஏற்கமாட்டோம், வர விட மாட்டோம் என்று என்றைக்காவது கூறி இருக்கிறாரா. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பவாத நிலையில் சிக்கித் தவிக்கிற அதிமுக முகவரி இல்லாமல் போகும் என்பது என்னுடைய அழுத்தமான கருத்து. அம்பேத்கர் கொள்கைகளை சாவு மணி அடிக்கிறவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கிப் பிடிப்பவர்கள் வர்ணாசிரமம் தான் என்னுடைய லட்சியம் என்று கூறுகிறவர்கள், வர்ணாசிரமத்தை இந்தியாவுடைய அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என கூறும் ஆர்எஸ்எஸ் தலைமை தாங்கக்கூடிய பாஜக, அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறோம் என சொல்வது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கபட நாடகம் என்றார்.

The post வர்ணாசிரமம் தான் லட்சியம் என்று கூறி கொண்டு அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியிடுவது கபட நாடகம் : பாலகிருஷ்ணன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Balakrishnan ,BJP ,Atamuka ,Chidambaram, Cuddalore district ,North Main Road ,Marxist ,Daku ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா