×
Saravana Stores

இந்திய தேர்தல்கள் குறித்து அறிந்த தகவலும்… அறியாத வரலாறும்…

* இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட தேர்தல்களில் நிகழ்ந்த சாதனை, சரித்திரம், சறுக்கல் மற்றும் சுவாரஸ்யம் இவைகள் குறித்து அறிந்த தகவலும்… அறியாத வரலாறும் பின்வருமாறு:

* திமுக நிறுவனர் அண்ணா கடந்த 1967ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தென்சென்னை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், அவர் அந்த பதவியை ஏற்கவில்லை. ஏனெனில், அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததால், மக்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

* தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம். இவர், சிவகங்கை தொகுதியிலிருந்து 1984, 1989, 1991, 1996, 1998, 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சிகளின் சார்பில் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.அருணாச்சலம் தொடர்ந்து ஒரே தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றவர் என்ற சிறப்புக்குரியவர். இவர் தென்காசி (தனி) தொகுதியில் இருந்து 1977, 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் தொகுதிகளிலிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, திமுகவின் எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தஞ்சை தொகுதியில் இருந்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் திமுக சார்பிலும் எம்.ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் மற்றும் பாஜ சார்பிலும், ஆர்.பிரபு காங்கிரஸ் சார்பிலும், மு.தம்பிதுரை அதிமுக சார்பிலும் 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை நடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒருவர் மட்டுமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் 1951ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் கோவை மக்களவை தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய டி.ஏ.ராமலிங்க செட்டியார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரா
வார்.

* நாட்டிலேயே அதிக பரப்பளவை கொண்ட தொகுதியாக லடாக் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த லடாக் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கிய இந்த தொகுதி 1,73,266 சதுர கிலோ மீட்டர் (66,898 சதுர மைல்) பரப்பளவை கொண்டவை.

* 1951ல் முதல் பொதுத்தேர்தல் நடந்தபோது, இந்தியாவில் 84% மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். இதுதவிர, வறுமை, சமூகப்பிரிவினை, தேசப்பிரிவினையை அடுத்து உருவாகி இருந்த மதப்பிரிவினைகள் என பலவிதமான சிக்கல்கள் அப்போது இருந்து வந்தன. அந்த காலகட்டத்தில் 17.32 கோடி மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களில் 51.15 சதவீதம் பேர் அந்த தேர்தலில் வாக்களித்தனர்.

* தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. இந்த தொகுதியில் 23,58,526 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் உள்ளது. இங்கு 13,38,459 வாக்காளர்கள் உள்ளனர்.

* இந்தியாவில் இதுவரை பதவி வகித்த பிரதமர்களில் சவுத்ரி சரண் சிங், நாடாளுமன்றத்தை சந்திக்காத ஒரே பிரதமர் ஆவார். மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த பிறகு 28 ஜூலை 1979ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற சரண் சிங் 20 ஆகஸ்ட் 1979ம் ஆண்டு பதவி விலகினார். அதன்படி, 23 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கு கோர இருந்த நிலையில், காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை இந்திரா காந்தி திரும்ப பெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கூட சந்திக்காமல் பதவி விலகினார்.

* 1982ம் ஆண்டு மே 19ம் தேதி கேரளாவில் பரூர் சட்டப்பேரவை தொகுதியில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுக செய்யப்பட்டது. அப்போது தான் அரசமைப்பு சட்டத்தில் 61வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1988 டிச.15ம் தேதி வாக்களிக்கும் வயது 21ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

* புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முறை 1993ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

* நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டிருக்கும் மக்களவை தொகுதியாக ஆந்திர மாநிலம் மல்காஜ்கிரி மக்களவை தொகுதி உள்ளது. இங்கு 29,53,915 வாக்காளர்கள் உள்ளனர். மிகக்குறைவான வாக்காளர்களை கொண்ட மக்களவை தொகுதி லட்சத்தீவு. இங்கு 47,972 வாக்காளர்கள் உள்ளனர்.

* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றவியல் வழக்குகள் உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும் என கடந்த 2002ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்தியாவின் முதல் தேர்தலின் போது இமாச்சலபிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கல்பா கிராமத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராக சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என அவர் அறியப்பட்டார்.

* யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்வதற்கான (நோட்டா) முறை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2013 செப்.27ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

The post இந்திய தேர்தல்கள் குறித்து அறிந்த தகவலும்… அறியாத வரலாறும்… appeared first on Dinakaran.

Tags : Indian ,India ,DMK ,Anna ,Lok Sabha ,South Chennai ,
× RELATED கிழக்கு லடாக்கில் எல்லை...