திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பிரசாரம் செய்து வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசியதாவது: பெண்கள், முதியோர்கள், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரான கட்சி பாஜ. தொடர் மக்கள் விரோத ஆட்சியை தந்த மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் தான் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்.
அதிமுக -பாஜ உறவு முறிந்து விட்டதாக எடப்பாடி போகும் இடமெல்லாம் சிறுபான்மை வாக்குகளை கவர பேசி வருகிறார். பத்தாண்டுகால பாஜ அரசின் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி. பாஜவிற்கு கூஜா தூக்கிய எடப்பாடிக்கு இன்று சிலர் அதிமுக பரிசுத்தமாகிவிட்டது என புது கூஜா தூக்க தொடங்கியுள்ளனர். இன்றும் பாஜவின் காவி கறை அதிமுகவின் மீது படிந்தே இருக்கின்றது. உணவு கலாச்சார மற்றும் வழிபாட்டு உரிமைகளில் மூக்கை நுழைக்கின்ற வேலையை பாஜ அரசு தனது ஆட்சிகாலத்தில் அதிகம் செயல்படுத்தியது.
அதானிக்கு அளவில்லாத சலுகைகளை வாரி வழங்கிய மோடி அரசின் மோசடி குறித்த நேர்மையான விவாதமும், நாடாளுமன்ற கூட்டு குழுவின் விசாரணையை கேட்டு எதிர்கட்சிகளின் வைத்த கோரிக்கையை இந்த ஆட்சி முடிந்துவிட்ட நிலையிலும் செயல்படுத்தாதவர் மோடி. எண்ணெய் இல்லாமல் வடை சுடும் மோடிக்கு தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள்.
நீட், க்யூட் என எந்தவிதமான நுழைவுத்தேர்வுகளும் நடத்தபடாது, கல்வி உரிமைகள் அனைத்தும் மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விடப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோடியின் சிறுபான்மை வெறுப்பு, கொடுங்கோல் நிறைந்த ஆட்சியை அகற்றி மக்களாட்சி தத்துவத்தை உயர்த்தி பிடிக்கும் திராவிட மாடல் நாயகர், தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர். இவ்வாறு அவர் பேசினார்.
The post தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை பரிசாக தருவார்கள்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடும் தாக்கு appeared first on Dinakaran.