×
Saravana Stores

முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?

தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் நாமக்கல் தொகுதி 16வது இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது நாமக்கல் மாவட்டம். தமிழகத்தில் நீண்டகாலம் தனித் தொகுதியாக இருந்த ராசிபுரம் தொகுதி கடந்த 2008ம் ஆண்டிற்கு பின் மறுசீரமைப்பின்போது பொதுத் தொகுதியாக மாறியது. ராசிபுரம் தொகுதிக்கு பதிலாக மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள புதிய மக்களவை தொகுதி இது.

தற்போது நாமக்கல் மக்களவை தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. அதன்படி, காவிரி கரையின் பரமத்தி-வேலூர் முதல் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சேர்ந்தமங்கலம் வரை இந்த தொகுதி பரவியுள்ளது. இங்கு கோழிப் பண்ணை, முட்டை உற்பத்தி, கோழி இறைச்சி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி உள்ளிட்டவை முக்கிய தொழிலாக இருந்தாலும், விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது.

காவிரி கரையையொட்டிய பகுதி என்பதால் நெல், கரும்பு என பாரம்பரிய விவசாயம் நடைபெறும் பகுதியாக உள்ளது. அதேபோல், நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் அதிகமாக லாரி சார்ந்த தொழில் நடக்கிறது. இந்த பகுதிகளைச் சேர்ந்த லாரிகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இயக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, பால்பண்ணை, நெசவு, ஜவ்வரிசி உற்பத்தி என பல்வேறு தொழில்களும் கோலோச்சும் இடமாக நாமக்கல் மக்களவை தொகுதி விளங்குகிறது.

இங்கு, குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே செல்வாக்கு என்றில்லாமல் பல கட்சிகளும் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ராசிபுரம் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் அதிகப்படியாக வெற்றிகளை பெற்றிருந்தது. இதனையடுத்து நாமக்கல் மக்களவை தொகுதியாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர், இரண்டு 2 முறை திமுக, ஒரு முறை அதிமுக இந்த தொகுதியை கைப்பற்றி உள்ளன. கடந்த முறை இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிட்டு 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன்படி, தேர்தலில் அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகளை சின்ராஜ் நிறைவேற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, எளிமையாக அனைவரிடத்திலும் பழக கூடியவர். கையூட்டு பெறாத நேர்மையான அரசியல்வாதியாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவரின் நாடாளுமன்ற வருகை பதிவாக 72 சதவீதமும், 12 விவாதங்களிலும் பங்கேற்று இருக்கிறார்.

நாமக்கலுக்கு கூடுதல் ரயில் இயக்கம், மக்காச் சோளம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் உள்பட 263 கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். ராசிபுரம், புதுசத்திரம், ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதிகளில் மேம்பாலம் கட்டிக் கொடுத்துள்ளார். பள்ளிகளுக்கு அடிப்படை வசதி, உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தந்துள்ளார். பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் மனு அனுப்பினாலும் அதற்கு சின்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக – கொ.ம.தே.க கூட்டணி சார்பில் மாதேஸ்வரன் களம் காண்கிறார். அதேபோல், அதிமுக சார்பில் எஸ்.தமிழ்மணி, பாஜ சார்பில் கே.பி.ராமலிங்கம் மற்றும் நாம் தமிழர் சார்பில் கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மகுடத்தை சூட வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான சாவல் நிறைந்த பகுதியாக காணப்படும் நாமக்கல் தொகுதியை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கான விடை மக்கள் ஏப்.19ம் அளிக்கும் வாக்குகளிலேயே தெரியவரும்.

The post முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்? appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Sabha ,Tamil Nadu ,South India ,Rasipuram ,Dinakaran ,
× RELATED மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக...