×

ஆகஸ்ட் 16 1947- திரை விமர்சனம்

ஏ .ஆர் .முருகதாஸ் தயாரிப்பில் என் .எஸ் பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ரேவதி, புகழ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன. நாடே விடுதலை காற்றை சுவாசிக்க காத்துக் கிடக்கிறது. ஆனால் எதுவுமே தெரியாமல் தினமும் வரும் செய்தித்தாள்கள் கூட வாரத்திற்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்கிற நிலையில் மலைக்குப் பின்புறம் இருக்கும் ஒரு கிராமம். சதா சர்வ காலமும் ஆங்கிலேயனின் கொடூரமான ஆட்சியின் கீழ் 16 மணி நேரங்கள் உழைத்து குடும்பமாக சேர்ந்து மொத்த கிராமமும் பருத்தித் துணியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். கொடுங்கோல் ஆட்சி செய்யும் ஆங்கிலேயனாக அந்த ஊரை பேயாக பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறான் ஆங்கிலேயன் ராபர்ட். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் தூக்கிச் செல்லும் ராபர்டின் மகன் ஜஸ்டின். இதற்கிடையில் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறது செங்காடும் செங்காட்டு ஜனங்களும். கூட்டத்தில் ஒருவனாக எதிர்த்து துணிந்து ஆங்கிலயன் மேல் கை வைக்கிறான் பரமன்(கௌதம் கார்த்திக்). சுதந்திரமும் கிடைத்துவிட்டது ஆனாலும் இவர்களுக்கு செய்தி வந்து சேராததால் அதை பயன்படுத்திக் கொள்கிறான் ராபர்ட் இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

பத்து தலை ,ஆகஸ்ட் 16 1947 என கௌதம் கார்த்திக்கின் கிராப் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக உயர்ந்து கொண்டே செல்கிறது. அவரின் நடிப்பிலும் நிறைய பக்குவமும் முன்னேற்றமும் தென்படுகிறது. முக்கியமாக சென்ற வாரம் வெளியான படத்தில் காவல்துறை அதிகாரி , ரவுடி என ஒரே படத்தில் இரண்டு வெவ்வேறு வித்தியாசங்கள் காட்டியவர் இந்த படத்தில் ஏதும் அறியாத கிராமத்து இளைஞனாகவும் ,காதல், ஏக்கம் தவிப்பு சுதந்திர வேட்கை என வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.

நாயகி ரேவதி பெயருக்கு ஏற்றார் போலவே பழைய ‘கிழக்கு வாசல்’ ரேவதியை நிறைய இடங்களில் ஞாபகப்படுத்துகிறார் இந்த ரேவதி. கிளாசிக் லுக், பாவாடை தாவணி முகத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன முத்து போன்ற பருக்கள் என ரேவதி கிளாசிக் பியூட்டி. நடிப்பும் நன்றாகவே வருகிறது.

எந்த படத்திலும் இல்லாதவாறு இந்த படத்தில் புகழின் முடியை நம்பாமல் அவர் முகத்தை நம்பி நிறைய எமோஷனல் காட்சிகளை இயக்குனர் திட்டமிட்டதற்கு சபாஷ். அவரும் ஒரு கட்டத்தில் பேச்சே இல்லாமல் முகபாவனைகளிலேயே தான் என்ன நினைக்கிறோம் என சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுதந்திரம் அடைந்து விட்டோம் என்பதை தெரியாமல் இருக்கும் ஒரு கிராமம் இந்த கற்பனைக்கு முதலில் இயக்குனருக்கு சபாஷ். ஏனெனில் இன்றளவும் கூட இன்னும் எத்தனையோ கிராமங்கள் ஒரு சின்ன அரிக்கன் விளக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்கையில் 70 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும். ஆனால் இன்னும் கற்பனையை ஓடவிட்டு கதை களத்தில் நிறைய சுவாரசியங்களை சேர்த்து விளையாடி இருக்கலாம். என்னவோ மிஸ் ஆகுதே என்னும் எண்ணம் மட்டும் ஆங்காங்கே தெரிகிறது எனினும் படத்தின் மேக்கிங் காஸ்ட்யூம்ஸ் , சோகத்திற்கு இடையேயும் கிடைக்கும் சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடும் கிராமத்து மக்கள், அவர்களின் உடைகள் கிராமத்து செட்டிங் என நம்மை ஒரு சில வினாடிகள் செங்காட்டுக் கிராமத்திற்குள் கடத்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஏன் தந்தி அப்போது இல்லையா? தகவல் சொல்ல வந்த போலீஸ் காரர்களைத் தேடிக்கொண்டு ஏன் ஆட்கள் வரவில்லை, ஜமீன் பொண்ண மட்டும் என்ன ஒசத்தியா போன்ற சில கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

செல்வகுமார் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைக்கின்றன. சீனி காரி… பாடல் காதில் சீனி தண்ணியாகவே பாய்கிறது.

மொத்தத்தில் ’16 ஆகஸ்ட் 1947′, உண்மையான சம்பவத்திற்கு இடையே நடக்கும் ஒரு கற்பனை கதையாகவும் மேலும் இக்கால இளைஞர்களுக்கு நாம் அடைந்திருக்கும் சுதந்திரமும் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் இப்படி எத்தனையோ பேரின் தியாகமும், உயிரிழப்பும் இருக்கிறது என புரியும்படி எதார்த்தமாக காட்டியிருக்கும் விதத்தில் நிச்சயம் தவிர்க்க முடியாத படமாக மாறி இருக்கிறது.

Tags : AR Murugadoss ,NS Pon Kumar ,Gautham Karthik ,Revathi ,Loom ,India ,
× RELATED கார்த்தியுடன் இணைந்த கவுதம் கார்த்திக்