சேலம்: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில், ஓட்டுக்கு பணம் கொடுக்க சொன்ன அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது நீதிமன்ற அனுமதி பெற்று 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக குமரகுரு களம் இறங்கியுள்ளார். இவர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி, இத்தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் வேட்பாளர் குமரகுரு பேசுகையில், ‘யாரெல்லாம் நமக்கு ஓட்டு போடுவாங்களோ, அவங்களை பார்த்து பணம் கொடுக்கணும். மற்றவர்களையெல்லாம் விட்டுவிடுங்க. யாரையும் கேட்க வேணாம். எதுக்கு வேஸ்ட், வராதவங்கள விட்டு விடு. நாலுக்கு பதிலா எட்டா கொடு.. இல்லையா பன்னிரெண்டா கொடு. முடிஞ்சி போச்சு. ஈஸியா ஜெயிச்சிடலாம்’ என பேசினார். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசிய இப்பேச்சு, தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என்பதால், அதனை வீடியோவாக பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, முல்லைவாடி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் (40), ஆத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரில் அதிமுக வேட்பாளர் குமரகுரு ஓட்டுக்கு பணம் கொடுக்க சொல்லி பேசியுள்ளார். இது தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள், ஆத்தூர் ஜே.எம்.1 கோர்ட்டில் அனுமதி பெற்று, நேற்றைய தினம், ஓட்டுக்கு பணம் கொடுக்க சொன்ன அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க சொன்ன அதிமுக வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.