உடுமலை, ஏப். 14: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தியா கூட்டணி சார்பில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி, நேற்று உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் சுமார் 10 கிமீ தூரம் மாட்டு வண்டியில் சென்று கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தார். கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜோதிபாளையம், பாலப்பம்பட்டி, சமத்துவபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கே. ஈஸ்வரசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிக்கு நல்லது நடக்க, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.. எதிர்தரப்பில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் நிற்கின்றனர். தனித்தனியாக நின்றாலும் இருவரும் ஒரே வேட்பாளர்கள் தான்.
தேர்தலுக்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து விடுவார்கள். எனவே, அதிமுக, பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.மோடி அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து நல்ல திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை அமல்படுத்தினார். குறிப்பாக பெண்களுக்கு உரிமைத் தொகை, அரசு பேருந்தில் இலவச பயணம், முதியோர் உதவித்தொகை உயர்வு, மாணவிகளுக்கு கல்லூரி படிப்புக்கு உதவித்தொகை வழங்கிவருகிறார். மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தொண்டனுக்கும் தமிழக முதல்வர் வாய்ப்பளித்துள்ளார். எனவே, இது நமது பகுதிக்கு கிடைத்த பெருமையாக நினைத்து என்னை நீங்கள் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேசினார்.
இப்பிரச்சாரத்தின்போது, உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மெய்ஞானமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், மடத்துக்குளம் அரசன் செல்வராஜ், மோகன், பிரனேஷ், செந்தில், சக்தி, காளிமுத்து, கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள், துணை தலைவர் குமுதா, கவுன்சிலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி செந்தில்வேல், ஆறுச்சாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு மற்றும் ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
The post பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் appeared first on Dinakaran.