×

பிரசாரத்துக்கு அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை ஆதரித்து பிரசாரத்தை முடித்த அண்ணாமலை, அங்கிருந்து சொகுசு ஹெலிகாப்டர் மூலம் நேற்று ராமநாதபுரம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பிரசார வேனில் அரண்மனை பகுதிக்கு சென்று பிரசாரம் செய்தார். தனக்கு விவசாயம், ஆடு வளர்ப்பு மூலம் வருவாய் கிடைப்பதாக கூறி வரும் அண்ணாமலை, நேற்று திடீரென சொகுசு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது பாஜ தொண்டர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் தேர்தல் செலவின கணக்கு உள்ளிட்ட நடைமுறைக்காக வாடகை உள்ளிட்ட விபரங்களை பைலட்டிடம் கேட்டுக் கொண்டனர். இதேபோல், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காரைக்காலில் நேற்று பாஜ செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜவின் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார். அப்போது நிர்மல் குமார் சுரானா வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் தீவிரமாக சோதனை செய்தனர். மேலிட பார்வையாளர் சூட்கேஸ்கள், பைகள் உள்ளிட்டவற்றை தீவிரமாக ஆய்வு செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசுப் பொருள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் ஒன்றும் சிக்கவில்லை.

* 3 தகர பெட்டியுடன் வந்த அண்ணாமலை ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய பணம் எப்படி வந்துச்சு… கோவை அதிமுக வேட்பாளர் ‘நறுக்’
கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது தேனியில் டிடிவி தினகரன் வசம் அதிமுக போகும் என அண்ணாமலை கூறி வருகிறார். தோல்வி பயத்தில் உளறும் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. கடந்த 3 ஆண்டுகளாக பாஜ மாநில தலைவராக என்ன செய்துள்ளார்?. என்ன செய்யப்போகிறார்?. பாஜவின் அழிவு தமிழகத்தில் ஆரம்பமாகிவிட்டது. 100 தேர்தல் வாக்குறுதியை 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என அண்ணாமலை கூறுகிறார். ஆனால் மோடி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்தார்?. என்ன திட்டத்தை நிறைவேற்றினார்?.

ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை. பம்ப், மோட்டார், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் அனைத்தும் ஜிஎஸ்டி வரியால் அழிந்துள்ளன. 3 தகரப்பெட்டியுடன், 3 பஸ் மாறி கோவை வந்தேன் என சொல்லும் அண்ணாமலை தற்போது ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது?. யார் பணம் கொடுக்கிறார்கள்?. கேட்டால் நண்பர்கள் செலவு செய்கிறார்கள் என்பார். அண்ணாமலை சிடி ரவியை அழைத்து வந்து கன்னடத்தில் ஓட்டு கேட்கிறார். என் உயிரே போனாலும் ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு தர மாட்டேன் என்று சொன்னவர் சி.டி.ரவி. இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரசாரத்துக்கு அண்ணாமலை, பாஜ பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Theni ,AAMUK ,General ,TTV Dinakaran ,Ramanathapuram ,
× RELATED காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து