×

சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி; திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா, திருப்பூர் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் கொண்டார். அப்போது பேசிய அவர்; திராவிட இயக்கம் உருவான ஊர்; பல்வேறு அரசியல் திருத்தங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் திருப்பூர். வந்தோரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்துள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். விவசாயக் கடன்கள் வட்டியுடன் ரத்து செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர்; இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறுவதற்கான தேர்தல். கோவையில் நானும் ராகுலும் பங்கேற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல் பிரம்மாண்டமாக இருந்தது. ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரச்சாரத்தையும் காலி செய்துவிட்டது. மக்களவை தேர்தல் 2 தத்துவங்களுக்கு இடையேயான போர்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியின் ஒளி விளக்காக திகழும் ஆட்சி திமுக ஆட்சி. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தலை நிமிர்ந்து நிற்க இந்தியாவின் அரசியல் சட்டமே காரணம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது அரசியல் சட்டத்துக்கே ஆபத்து. இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறுவதற்கான தேர்தல். ஜனநாயகம் தழைக்க இந்தியா கூட்டணி ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமைய வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப உருவாகி உள்ளதுதான் இந்தியா கூட்டணி. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. ஒற்றுமைத்தன்மையை சீர்குலைத்துவிட்டால் பல ஆபத்துகள் நம்மை சூழும். ஆட்சிக்கு வரும்போது புதிய இந்தியாவை உருவாக்குவதாக கூறினார் மோடி; ஆனால் அவரது 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா பல துறைகளில் பின்தங்கியுள்ளது. ரூ.55 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் மோடி ஆட்சியில் ரூ.158 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

உண்மையை எழுதும் பத்திரிகையாளரை சிறையில் அடைப்பது, பத்திரிகையாளர் படுகொலையை வேடிக்கை பார்ப்பதுதான் மோடி ஆட்சியில் நடக்கிறது. மோடி சொன்ன புதிய இந்தியாவில் 32% மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தவில்லை. 40 விழுக்காடு மக்களுக்கு வீடுகளே இல்லை. மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 52% அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் பால் பொருட்கள் விலை 53 விழுக்காடு அதிகம். 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் பிரச்சாரத்தில் சாதனைகளை மோடியால் கூற முடியவில்லை.

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி நாட்டை எப்படியெல்லாம் சீரழித்துவிட்டது என்பதை பார்த்துவிட்டோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிவிட்டனர்; வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவிலேயே கலந்துவிட்ட ஒன்று. நேற்றுகூட திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் கடுமையாக தாக்கினர். கேள்வி கேட்ட பெண்ணை தாக்குவது தான் பாஜக பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை. அராஜகமும் கலவரமும் செய்யும் பாஜக, திருப்பூரை மணிப்பூர் போல் மாற்றிவிடுவார்கள்.

தமிழ்நாடு ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே வரிப்பகிர்வாக கொடுக்கிறது மோடி அரசு. ஒன்றிய அரசு தரும் நிதி நெருக்கடியை தாண்டி ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். திமுக அரசின் திட்டங்களால் நேரடியாக ஒரு குடும்பத்துக்கு ரூ.5,000 போய் சேருகிறது. மேற்கு மண்டலம் மீது மோடி நடத்திய இரட்டை தாக்குதல் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி. தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்த நிலைமை போய்விட்டது பாஜக ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்றுவிட்டன.

மோடியை நம்பி ஏமாந்துபோய்விட்டதாக தொழிலதிபர்கள் ஏராளமானோர் புலம்புகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூரில் எம்எஸ்எம்இ மேம்பாட்டுக்காக அனைத்து திட்டங்களையும் தீட்டித் தருகிறோம். நாட்டில் எளிமையாய் தொழில் புரிவோர் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஈரோடு, மதுரை, நெல்லையில் வட்டார தொழில் மையங்கள் நிறுவப்பட உள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு வளரும். நாட்டையே பாழ்படுத்தும் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் பழனிசாமி.

பழனிசாமிக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் பிரச்சனை; அவருக்கும் மோடி, அமித் ஷாவுக்கும் இடையே பிரச்சனை இல்லை. சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பிரித்து தர்மயுத்தம் நடத்தி வைத்தது பாஜகதான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சேர்த்தது பாஜக. சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்தது பாஜகதான். பழனிசாமியை தனியாக தேர்தலில் நிற்க வைத்ததும் பாஜகதான் இவ்வாறு கூறினார்.

The post சமூக நீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி; திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,Tiruppur ,K. Stalin ,Neelgiri ,A. Rasa ,Suprayan ,MLA K. Stalin ,Dravitha movement ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்