*திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரசாரம்
கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நேற்று முன்தினம் எஸ்.எஸ்.குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்குசேகரித்தார். அவருக்கு, பெண்கள் ஆதரத்தி எடுத்து வரவேற்றனர். இளைஞர்கள் ஜமாப் அடித்து, மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:
நான், இந்த மண்ணின் மைந்தன். மக்களோடு மக்களாக, கணபதி பகுதியில் வசித்து வருகிறேன். கோவை மாநகராட்சியில் மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளேன். ஒருமுறை மேயராக பணியாற்றி இருக்கிறேன். என்னை, எப்போது கூப்பிட்டாலும், களத்தில் வந்து நிற்பேன். மக்கள் பிரச்னையை தீர்த்து வைப்பேன். மேயராக இருந்த காலத்தில், கோவை மக்களின் அடிப்படை தேவை என்ன? என்பதை புரிந்து, எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.
நான் எப்போதும்போல் மக்களோடு மக்களாக கலந்து இருப்aபேன். இதைத்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்துகிறார். எந்தெந்த பகுதியில், மக்களுக்கு என்னெ்ன பிரச்னை இருக்கிறது என கள ஆய்வு செய்து வருகிறோம். இவை, எல்லாம் விரைவில் தீர்த்து வைக்கப்படும். வெளியூர்காரர்கள் நிறைய பேர் வருவார்கள். காது குளிர, பேசுவார்கள். ஆனால், உங்களோடு இருக்க மாட்டார்கள். என்றாவது ஒருநாள்தான் மீண்டும் இங்கு வந்து எட்டி பார்ப்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் நமக்கு வேண்டாம். அவர்களால், நம் ேதவையை அறிந்து பணிசெய்ய முடியாது. கடந்த 2014ம் ஆண்டு 400 ரூபாய்க்கு விற்ற சமையல் காஸ் சிலிண்டரை இன்று ரூ.1,200க்கு விற்கிறார்கள்.
இதுதான், ஒன்றிய பாஜ அரசு, கடந்த 10 ஆண்டுகளாக செய்த சாதனை. இப்போது தேர்தல் காலம் என்பதால் 100 ரூபாய் விலை குறைப்பு செய்து நாடகம் ஆடுகிறார்கள். இது யாரை ஏமாற்ற..? தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும். அவர்கள், உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது, இதைச்சொல்லி திருப்பி அனுப்ப வேண்டும். இதுபோல்தான் பெட்ேரால், டீசல் விலையும் இருமடங்கு உயர்ந்துவிட்டது. இதுவே, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்துக்கு காரணமாகவும் அமைந்து விட்டது.
பணம் மதிப்பிழப்பு, அபரிமிதமான ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகிய காரணங்களினால், தொழில்துறையை நாசமாக்கி விட்டார்கள். கருப்பு பணத்தை மீட்போம், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பட்டை நாமம்தான் போட்டுள்ளனர். எனவே, சிந்தித்து வாக்களியுங்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றிபெற செய்யுங்கள்.
உங்களுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைவாக வந்து சேரும். மோடி, தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும் பருப்பு வேகாது. திராவிட மாடல் ஆட்சியில், தேர்தலுக்கு பிறகும் நிறைய திட்டங்கள் வர இருக்கிறது. அதனால், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு கணபதி ராஜ்குமார் பேசினார். பிரசாரத்தின்போது, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
The post கருப்பு பணத்தை மீட்கவில்லை, வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வரவில்லை 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் ஏமாற்றமே மிஞ்சியது appeared first on Dinakaran.