×

ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே சோகம் டிபன் கடைக்குள் கல்லூரி பஸ் புகுந்து 12 வயது சிறுவன் பலி

*5 பேர் படுகாயம்: கார், 4 பைக்குகள் சேதம்

திருமலை : ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி டிபன் கடைக்குள் புகுந்ததில் 12 வயது சிறுவன் குடும்பத்தினர் கண்ணெதிரே உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். கார், 4 பைக்குகள் சேதமானது.ஆந்திர மாநிலம் பெந்துருத்தியில் ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடினர். பின்னர் நேற்று பித்தாபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசிங்கோட்டா மண்டலம் பையாவரத்தில் சாலையோரத்தில் உள்ள டிபன் கடையில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி அனைவரும் கிழே இறங்கினர்.

அப்போது அவ்வழியாக வந்த அனகாபள்ளியில் உள்ள தனியார் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையோரம் இருந்த 4 பைக்குகள், கார் மீது மோதிவிட்டு டிபன் கடைக்குள் பஸ் புகுந்தது. இதில் காரில் இருந்து இறங்கிய 12 வயது சிறுவன் கவுஸ் குடும்பத்தினர் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அங்கிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காசிங்கோட்டை போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அனகப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இதுதொடர்பாக காசிங்கோட்டை இன்ஸ்பெக்டர் வினோத்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே சோகம் டிபன் கடைக்குள் கல்லூரி பஸ் புகுந்து 12 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kannetree ,Tiban ,ANAKAPALLE, AP STATE ,DEIBAN SHOP ,Andhra Kannetree ,Diban ,store ,
× RELATED வரி செலுத்துவதில் முறைகேடு: ஆந்திர...