×

மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது வேட்பாளர்கள் உற்சாக தேர்தல் பிரசாரம்

*வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது

*பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை லேசான மழையும், அதன்பின்னர் மாலை வரையில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்பட்டு வெப்பம் குறைந்ததால் பொது மக்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் உற்சாகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டனர்.தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி முடிவுறும் நிலையில் அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனி காலமாக இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் இந்த வெயில் என்பது கடந்த மாதத்திலேயே துவங்கியுள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி வரையிலும், ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரி வரையிலும் கடந்த ஒரு மாத காலமாக வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதன் காரணமாக பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் பெரும் தலைவர்கள் கூட இந்த வெயிலை பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்கள் அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது, குளிர்ந்தநீரில் குளிக்கவைக்க வேண்டும், போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் நேர கட்டுபாடுகளை தளர்த்தி கொள்ள முடியாமல் கடும் வெயிலிலும் பணி செய்ய வேண்டிய சூழலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக வெயில் அளவு 4 டிகிரி வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலை மையம் அறிவித்திருந்தவாறு வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை லேசான மழை பெய்தது.

அதன்பின்னர் மாலை வரையில் மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பல மணி நேரம் வரையில் மேகமூட்டம் காணப்பட்டு வெப்பம் குறைந்து ஓரளவு குளிர்காற்று வீசியது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக துன்பப்பட்டு வந்த பொது மக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கட்சி தலைவர்கள் மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த மேகமூட்டம் காரணமாக நேற்று மதிய இடைவேளை நேரத்தை குறைத்துகொண்டு கூடுதலான நேரம் வரையில் உற்சாகமாக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடதக்கது.

The post மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது வேட்பாளர்கள் உற்சாக தேர்தல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaroor ,Thiruvarur ,
× RELATED ‘ராஜ்நாத் சிங் விட்டு...