×

‘ராஜ்நாத் சிங் விட்டு கொடுத்ததால்தான் மோடி பிரதமராம்…’ நாகை கூட்டத்தில் சலசலப்பு

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் ரமேஷை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு தமிழர் பெருமையும், தமிழ் மொழியை பெருமையும் பற்றி பேசினார். மேலும், ‘தமிழகத்தில் ஜெயலலிதா மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. அது இப்போதும் உண்டு. எப்போதும் இருக்கும்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கூட்டத்தில் மாநில துணை தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான புரட்சிகவிதாசன் வரவேற்புரையாற்றியபோது அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.

அப்போது, 2014ல் தேசிய தலைவராக இருந்த போது பிரதமர் பதவியை மோடிக்கு விட்டுகொடுத்தவர் ராஜ்நாத்சிங். இவர் அடையாளம் காட்டவில்லை எனில் மோடி உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கமாட்டார் என பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதை தமிழாக்கம் செய்து பெண்மணி ஒருவர் பேசிய நிலையில் அவரும் சரிவர உச்சரிப்புடன் பேசாமல் தடுமாறியதால் அமைச்சர் பேசி கொண்டிருக்கும் போதே காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் கலைந்து சென்றதால் பொது கூட்டம் காலிசேர்களாக காணப்பட்டது.

* ஓ.. இதுக்கு பேருதான் ரோடு ஷோவா… பாஜ வேட்பாளர் பெயர் தெரியாத ராஜ்நாத் சிங்
நாமக்கலில் நேற்று நடந்த ரோடு ஷோவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் இந்தியில் பேசினார். இதை பாஜ கட்சி நிர்வாகி ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார். பிரதமர் மோடி அரசின் திட்டங்களை கூறிக்கொண்டு வந்த ராஜ்நாத் சிங் தனது பேச்சின் இறுதியில், வேட்பாளரின் பெயரை மறந்து ரங்கராஜன் என கூறினார். இதை கவனித்த மொழி பெயர்ப்பாளர் வேட்பாளரின் பெயர் கே.பி.ராமலிங்கம் என ராஜ்நாத்சிங்கிடம் கூறினார். இதையடுத்து அமைச்சர் கேபி ராமலிங்கம் எனக்கூறி வாக்கு சேகரித்தார். இதேபோல், தென்காசி தொகுதி பாஜ வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று மாலை ரோட் ஷோ நடத்தினார். அப்போது, வேட்பாளரின் பெயரை முழுமையாக சொல்லத் தெரியாமல் பாண்டியன், பாண்டியன் என்று உச்சரித்துக் கொண்டிருந்தார். சாலையில் கூட்டம் இல்லாததால் ஒன்றிய அமைச்சர், விரைவாக தனது வாகன பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

* தலையில் அடித்து தேம்பி தேம்பி அழுது ஓட்டுகேட்ட பிரேமலதா
கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பண்ருட்டியில் நேற்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தழுதழுத்த குரலில் கேப்டனோடு நான் திருமணம் செஞ்சி முதல்ல வந்த ஊர் பண்ருட்டி. ஆனால் என் துரதிஷ்டம் கேப்டன் இல்லாம நான் வந்திருக்கிறேன் இன்னைக்கு… கேப்டன் கூடவே என்னைக்குமே வந்த நானு இன்னைக்கு கேப்டன் இல்லாம முதல்முறை இன்று உங்ககூட வந்திருக்கிறனே.. ஏன் கடவுள் இப்படி செஞ்சாருன்னு நம்மல தெரியல்லையே… நாம் யாருக்கு என்ன தண்டனை செஞ்சோம் தெரியலையே.

எனக்கு ரொம்ப மனசு வலிக்குதே… இந்த புகழ் எல்லாம் யாருக்கு நம்ம தலைவருக்குதான். நான் எவ்வளவோ என் மனசுல துக்கத்தை கட்டுப்படுத்துனாலும் என்னால முடியல. தலைவர் நம்மகூட இல்லையே என யாரும் நினைக்காதீங்க. தலைவரு தெய்வமா நம்ம கூடத்தான் இருக்கிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா, புரட்சி கலைஞர் கேப்டன் ஆகிய 3 பேரும் தெய்வமாக நம்மோடு தான் இருக்கிறாங்க. நம்ம கூட இருந்து நம்மை கேப்டன் வழிநடத்துவாரு.. இனி என் வாழ்க்கை எல்லாம் உங்களுக்காகத்தான். இன்று அமைந்திருக்கும் கூட்டணி மகத்தான கூட்டணி என்றார். அப்போது என்ன பாவம் பண்ணுணேனோ… கேப்டன் இல்லாம… அய்யோ கடவுளோ… என தலையில் அடித்து தேம்பி தேம்பி பிரேமலதா அழுதது தொடர்பான அரசியல் விமர்சனங்களும் வலைதளத்தில் பரவி வருகின்றன.

* அண்ணாமலையை பற்றி பேசினால் ‘டைம் வேஸ்ட்’: நடிகை கவுதமி பளீச்
நடிகை கவுதமி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை காமராஜபுரத்தில் பேசியதாவது: அம்மா ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார். உங்களின் வேட்பாளர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடிய ஒரே வேட்பாளர் தம்பி சிங்கை ராமச்சந்திரன் மட்டுமே அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பாஜ வேட்பாளர் அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல. போட்டியாளரும் அல்ல. அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டியது இல்லை’’ என்று தெரிவித்தார்.

* நமீதாவை வீரப்பன் கடத்தாதது ஏன்? சீமான் சொன்ன புது தகவல்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கச்சத்தீவு பிரச்னையை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொண்டேன் என்று நாட்டை 10 ஆண்டுகள் எல்லா அதிகாரத்ைதயும் வைத்து ஆண்ட ஒரு தலைவர் சொல்வது கேவலம். தகவல் அறியும் உரிமை சட்டம் எளிய பிள்ளைகள் நாட்டில் என்ன நடக்குது? ஏது நடக்குது என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒன்று. அது அதிகாரமற்ற எளிய மக்களுக்கானது. குஜராத், மணிப்பூர் கலவரத்தை பற்றி ஒரு கேள்வி கேட்டால் தகவல் அறியும் சட்டத்தில் பதில் வராது. ஆனால் கச்சத்தீவை பற்றி கேட்டால் உடனே வருகிறது. அதுவும் அண்ணாமலைதான் எடுத்துக் கொடுத்தாராம். அண்ணாமலையை முன்னிறுத்தி தான் இங்கு தேர்தலை சந்திக்கிறாங்க. நீங்க என்னங்கடா நேர்மையாளர்கள்?. வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இருந்து பெண்களை அழைத்துச் சென்று கர்நாடகா மாநில போலீசார் சித்ரவதை செய்திருக்க முடியுமா?. காட்டை காத்த மாவீரனின் மகள், இந்த நாட்டை காக்க போராடுவாள் என்கிற உறுதியை நான் உங்களுக்கு தருகிறேன்.
காட்டிற்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவை கடத்தினார். அவர் நினைந்திருந்தால் நமீதாவை கடத்தியிருக்க முடியாதா?. தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்ந்த மறவர்கள். காட்டிற்குள் வீரப்பன் இருந்திருந்தால், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கூற முடியுமா?. இவ்வாறு சீமான் பேசினார்.

* செல்பி எடுக்க முயன்ற வாலிபர்: ‘முட்டாப்பய, கிறுக்குப்பய’ என்று திட்டி தீர்த்த சீமான்
மேடையில் சீமான் பேசி கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர், அண்ணே ஒரே ஒரு செல்பி என்று கூறிக்கொண்டு சீமானை பிடித்து போட்டோ எடுக்க முயன்றார். அப்போது சுதாரித்து கொண்ட சீமான் வாலிபரின் செல்போனை பறித்துகொண்டார். பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் அந்த வாலிபரை பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் கடுப்பான சீமான், ‘‘முட்டாப்பய, முட்டாப்பய, அவன் பிரச்னை அவனுக்கு, போட்டோ எடுக்கிறதுக்கு, கிறுக்குப்பய’ என்று கூறிக்கொண்டு பேச்சை தொடர்ந்தார்.

The post ‘ராஜ்நாத் சிங் விட்டு கொடுத்ததால்தான் மோடி பிரதமராம்…’ நாகை கூட்டத்தில் சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rajnath Singh ,Nagai ,Thiruvaroor South Road ,Nagapattinam ,Baja ,Ramesh ,Union Defence Minister ,Rajnatsing ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...