திருவண்ணாமலை, ஏப்.13: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களுடைய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆவணங்களின் விபரம்: ஆதார் அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அட்டை, வங்கி மற்றும் அஞ்சல சேமிப்பு கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு. பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் appeared first on Dinakaran.