×
Saravana Stores

கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின் உடலுக்கு அரசு மரியாதை 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின கலெக்டர், எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் பலியான

திருவண்ணாமலை, ஏப்.13: கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் பலியான கர்நாடக போலீஸ் அதிகாரி மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 3 பேரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வெளிமாநில போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கர்நாடக மாநில சிறப்பு காவல் படையைச் சேர்ந்த உதவி கமாண்டன்ட் பிரபாகரா, சிறப்பு காவல் படை வீரர் ஹேமந்த், பாதுகாப்பாளர் விட்டல் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, சிறப்பு காவல் படை வீரர் ஹேமந்த், பாதுகாப்பாளர் விட்டல் மற்றும் சேலத்தில் பணிபுரியும் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த தினேஷ், ஜெயக்குமார் ஆகியோருடன் ஜீப்பில் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர். பின்னர், அங்கிருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, செஞ்சி வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் புதிய பைபாஸ் சாலை சந்திப்பில், எதிரில் வந்த அரசு பஸ்சும், ஜீப்பும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அதில், ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணம் செய்த உதவி காமாண்டன்ட் பிரபாகரா, பாதுகாப்பாளர் விட்டல், டிரைவர் தினேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் பலியான 3 பேரின் உடலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், விபத்தில் பலியான 3 பேரில் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தனித்தனி வாகனங்கள் மூலம் அவர்களுடடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின் உடலுக்கு அரசு மரியாதை 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின கலெக்டர், எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி கீழ்பென்னாத்தூர் அருகே சாலை விபத்தில் பலியான appeared first on Dinakaran.

Tags : Anjali ,Kilibennathur ,Thiruvannamalai ,Collector ,SP ,Kilipennathur ,Tamil Nadu… ,Kilpennathur ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...