1. ஒன்றிய பாஜ ஆட்சியை கொடுங்கோல் ஆட்சி என விமர்சித்திருக்கிறீர்களே?
இதை நான் மட்டும் சொல்லவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாஜ ஆட்சியை கொடுங்கோல் ஆட்சி என்றுதான் சொல்கிறார்கள். பாஜ ஆட்சியால் நடுத்தர ஏழை மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. நல்ல திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. கொரோனா காலத்தில் சொந்த நாட்டில் எத்தனை மக்கள் அகதிகளை போன்று இறந்தார்கள். ஒரு ஆட்சியாளர்கள் தான் மக்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல் இருந்ததால் தான் கொடுங்கோல் ஆட்சி என்று சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த விஷயங்கள் அனைத்தும் பாஜவினரால் தான் நடந்தது. மக்களை பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல், கார்பரேட்கள் பின்னாடி, அவர்கள் முதலீடு, அவர்கள் வளர்ச்சி பற்றியே யோசித்து கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியை எப்படி சொல்ல முடியும் கொடுங்கோல் ஆட்சி என்று தான் சொல்ல முடியும்.
2. பொய் சொல்லி ஆட்சியை பிடித்ததாக பாஜ மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறதே?
கண்டிப்பாக பொய் சொல்லி தான் மத்தியில் ஆட்சியை பிடித்தார்கள். ஏனென்றால் வந்த உடனே சொன்ன முதல் பொய் அனைவரது வங்கியில் ரூ.15லட்சம் போடுவோம் என்றார்கள். கருப்பு பணத்தை மீட்போம் என்றனர். அப்புறம் ஆட்சிக்கு வந்தால், 1 லிட்டர் பெட்ரோல் ரூ.50க்கும் தருவதாக சொன்னார்கள். எதையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. சொல்லப்போனால், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே சென்றார்கள். அதனாலயே விலைவாசி கடுமையாக உயர்ந்து, பலரும் பாதிக்கப்பட்டனர். 2 கோடி பேருக்கு வேலை என்றார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ஒரு ஆண்டாக ரோட்டில் உட்கார வைத்திருந்தார்கள். இப்படி எல்லாமே அவர்களின் ஏமாற்று வேலை தான்.
3. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை மற்ற அரசியல் தலைவர்களை நாகரிகமில்லாமல் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றி?
40 வயதை கடந்தவள் நான். இதுவரைக்கும் இவ்வளவு அநாகரிகமான ஒரு அரசியல்வாதியை, பொய் மட்டுமே சொல்லுகிற ஒரு அரசியல்வாதியை பார்த்ததே இல்லை. பொய்கள் மட்டுமே அவரது வாயில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு மட்டமான ஒருவரை பற்றிய கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லக் கூட விரும்பமாட்டார்கள். அண்ணாமலை சொல்கிற அனைத்து தரவுகளும் பொய்யானதாகவே இருக்கிறது. பொதுமக்களும் இதை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஒரு மாயையான பிம்பத்தை வைத்து தான் பிரசாரம் செய்கிறார்கள். அதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
4. வாயால் வடை சுடுகிறவர் பிரதமர் மோடி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறதே?
தமிழ்நாட்டின் உணவு பண்டமான வடையை பிரபலமாக்கியதே நமது பிரதமர் மோடி தான். பெண்களை பாதுகாப்போம், பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என்று பிரதமர் மோடி சுதந்திரதின விழாவில் பேசுகிறார். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. அந்த சம்பவங்களுக்கு ஒரு சின்ன கண்டனம் கூட மோடி தெரிவிக்கவில்லை. பில்கிஸ் பானுவில் இருந்து தொடங்கி ஆசிபாவோட வழக்கில் இருந்து ஒரு சின்ன குரல் கூட கொடுக்கவும் இல்லை, பொறுப்பாக இருந்து பிரதமர் எதுவுமே செய்யவே இல்லை. அப்போ, மோடி சொல்வது எல்லாமே வாயால் வடை சுடுவது மட்டும் தானே?. வேலை வாய்ப்பில் ஆரம்பிச்சு எல்லாமே வடை தான்.
The post வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின் உணவுப் பண்டமான வடையை பிரபலமாக்கியவர் மோடி: எழுத்தாளர் பா.மகாலட்சுமி விளாசல் appeared first on Dinakaran.