திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மீனவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பாஜ பணத்தை அள்ளி வீசுகிறது என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் பிரான்சிஸ் ஆல்பர்ட் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய எம்பி சசி தரூரும், பாஜ கூட்டணி சார்பில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், இடதுசாரி கூட்டணி சார்பில் பன்யன் ரவீந்திரனும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
3 பேருக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் மீனவ கிராமங்களில் ஓட்டுகளுக்காக பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுப்பதாக சசி தரூர் குற்றம்சாட்டினார். ஆனால் அதை ராஜீவ் சந்திரசேகர் மறுத்தார். இதையடுத்து அவர் சசி தரூருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். இதனிடையே பாஜ திருவனந்தபுரம் மாவட்ட கமிட்டி உறுப்பினரும், மீனவர் சங்க தலைவருமான பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆதரவாளர்களுடன், காங்கிரசில் இணைந்தார்.
சசிதரூர் மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம். ஹசன் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். அதன் பிறகு பிரான்சிஸ் ஆல்பர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மீனவர்களையும், மீனவ கிராமங்களையும் பாஜ தொடர்ந்து புறக்கணிக்கிறது. நீண்டகாலமாக காங்கிரசுக்கு கிடைத்து வரும் மீனவர்களின் ஓட்டுகளை பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே அவர்கள் செயல்படுகின்றனர். இதற்காக பணத்தை அள்ளி வீசுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எனக்கும் பெருமளவு பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். மீனவர்களுக்கோ, மீனவ கிராமங்களுக்கோ எந்த வசதிகளையும் அவர்கள் செய்து தரவில்லை. அவர்களது இந்த ஓரவஞ்சனையால் மனம் வெறுத்துத் தான் பாஜவில் இருந்து விலகி நாங்கள் காங்கிரசில் சேர்ந்துள்ளோம். இன்று முதல் நாங்கள் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என்று கூறினார். மீனவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பாஜவினர் பணம் கொடுப்பதாக மீனவ கிராமங்களைச் சேர்ந்த பலர் தன்னிடம் கூறியதாக சசி தரூரும் தெரிவித்தார்.
The post திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள் வாக்குகளை பெற பணத்தை அள்ளி வீசும் பாஜ: மீனவர் சங்கத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.