×
Saravana Stores

சுல்தான் பத்தேரி ஊர் பெயரை கணபதிவட்டம் என மாற்ற வேண்டும்: பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரன் புதிய சர்ச்சை

திருவனந்தபுரம்: வயநாட்டிலுள்ள சுல்தான் பத்தேரி ஊர் பெயரை கணபதிவட்டம் என மாற்ற வேண்டும் என்று கேரள மாநில பாஜ தலைவரும் வயநாடு தொகுதி வேட்பாளருமான சுரேந்திரன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி இங்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். கடந்த 300 வருடங்களுக்கு மேலாக இந்த நகரம் இந்தப் பெயரில் தான் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஊரின் பெயரை கணபதிவட்டம் என மாற்ற வேண்டும் என்று கூறி பாஜ மாநிலத் தலைவரும், வயநாடு தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளருமான சுரேந்திரன் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “வயநாடு அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு எதிராக போராட்டம் நடந்த மண் ஆகும். இங்குள்ள சுல்தான் புத்தேரி நகரின் உண்மையான பெயர் கணபதிவட்டம் என்பதாகும். திப்பு சுல்தான் இங்கு வந்த பின்னர் தான் சுல்தான் பத்தேரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இப்போது அந்தப் பெயர் நமக்குத் தேவையில்லை. பிரதமர் மோடியின் உதவியுடன் சுல்தான் பத்தேரியின் பெயர் மாற்றப்படும். நான் எம்பியானால் என்னுடைய முதல் வேலை இதுவாகத் தான் இருக்கும்” என்று தெரிவித்தார். சுரேந்திரனின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுரேந்திரன் அல்ல, மோடி நினைத்தால் கூட சுல்தான் பத்தேரியின் பெயரை மாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சித்திக் கூறியுள்ளார்.

The post சுல்தான் பத்தேரி ஊர் பெயரை கணபதிவட்டம் என மாற்ற வேண்டும்: பாஜ மாநிலத் தலைவர் சுரேந்திரன் புதிய சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Sultan Bhatheri ,Ganapativattam ,BJP ,Surendran ,Thiruvananthapuram ,Kerala ,Wayanad ,Sultan Patheri ,Sultan ,Patheri ,Wayanad district ,president ,Dinakaran ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...