- ED
- சிபிஐ
- இசி
- புது தில்லி
- ஐஏஎஸ்
- ஐபிஎஸ்
- , IFS
- ஐஃபோஸ்
- தேர்தல் ஆணையம்
- வெளியுறவு செயலாளர்
- சிவஷங்கர் மேனன்
- இங்கிலாந்து
- சிவஷங்கர் முகர்ஜி
- தின மலர்
புதுடெல்லி: ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 87 ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஎப்ஓஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், இங்கிலாந்தின் முன்னாள் தூதர் சிவசங்கர் முகர்ஜி, பஞ்சாப் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் விஜய லதா ரெட்டி, முன்னாள் சுகாதாரச் செயலர் கே.சுஜாதா ராவ், டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் குறை கூறவில்லை. அதேநேரம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாக கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் தொந்தரவு செய்வது ஏற்கத் தக்கது அல்ல.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கி வைத்துள்ளது. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகவே பார்க்கிறோம். விசாரணை அமைப்புகளை கட்டுப்படுத்தாமல் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை அமலில் இருக்கும் காலங்களில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துவது போல், ஒன்றிய அரசின் இயந்திரங்களையும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கடந்த எழுபது ஆண்டுகால வரலாற்றில், புகழ்பெற்ற தேர்தல் ஆணையர்கள் நேர்மையுடன் பணியாற்றி உள்ளனர். உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்திக் காட்டும் இந்திய தேர்தல் ஆணையம், அதன் நற்பெயரையும் புனிதத்தையும் தக்கவைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
The post ஈடி, ஐடி, சிபிஐயை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்குவது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு 87 மாஜி அதிகாரிகள் கடிதம்: சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.