- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- தூத்துக்குடி
- மக்களவை
- திமுக
- கனிமொழி
- தென்காசி
- ராணி ஸ்ரீ குமார்
- கடையநல்லூர்
- சங்கரகோயில்
- கோவில்பட்டி
- தின மலர்
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி, கடையநல்லூர், சங்கரகோவில், கோவில்பட்டியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில குறைகள் இருக்கலாம். அதற்கு பொறுப்பு அமைச்சர் நான் என்ற முறையில் 100% பெண்களுக்கும் உரிமை தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் காலிலும் விழுந்தது இல்லை. இந்தப் படத்தில் உள்ளது யார் என்று உங்களுக்கு தெரியும். தவழ்ந்து போவது யார், காலில் விழுந்தது யார் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடிக்கு சென்றிருந்தேன். அந்த ஊர்காரர்கள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறாதீர்கள்.
எங்களுக்கு அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்தனர். பாதம் தாங்கி பழனிச்சாமி என்று தான் அவரை கூற வேண்டும். சசிகலா காலை பிடித்து முதல்வராகி விட்டு அவருக்கு துரோகம் செய்தார். யார் இந்த சசிகலா என்று கேட்டார். சசிகலாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தார். கடந்த தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். ஆனால் தமிழகத்தில் கட்டவில்லை. பல கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியுள்ளார். ஒரு வருடம் என்று கூறி பத்தே மாதத்தில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுதான் திராவிட மாடல் அரசு. செங்கலுக்கும் கட்டிடத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் திராவிட மாடலுக்கும் பாஜ மாடலுக்கும் உள்ள வித்தியாசம். பிரதமரை பெயர் சொல்லி கூப்பிடாதீர்கள். மிஸ்டர் 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் ஒன்றிய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு மூன்று ரூபாயும், பீகாருக்கு ஏழு ரூபாயும் வழங்குகிறது. மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை ஆகியவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.
The post 100% பெண்களுக்கும் உரிமை தொகை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.