சென்னை: தென்சென்னையின் பிராதன பிரச்சனையாக உள்ள வெள்ளம் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களை இயற்கையாகவே சமன்படுத்த வேண்டுமென்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான இயற்கை சூழலோடு வைக்க வேண்டும் என தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார். தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். ‘உங்கள் வீட்டு பெண்ணாக வந்துள்ளேன்’ என்ற அவரது அதிரடி பிரசாரம் தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வரும் தமிழச்சி தங்கப்பாண்யடின், தற்போது நவீன தொழில்நுட்பங்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தொடங்கி உள்ளார். அதேபோன்று மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் தமிழிசை மக்களுடன் மக்களாக உணவு சாப்பிடுவது, தெரு பிரச்சாரத்தின் போது கடைகளில் கூழ் குடிப்பது, மீனவர்களுடன் கூழ் குடிப்பது, பூங்காங்களில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது என மக்களோடு மக்கள் களத்தில் நின்று பழகி வருவதால் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தென்சென்னைக்குட்பட்ட மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒக்கியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் காலை முதல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது : செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூறுவதும், சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகள் தான் வெள்ளம் வரும்போது அதிகமாக பாதிக்கப்படுகிற தாழ்வான பகுதி.
இந்த இடங்களை இயற்கையாகவே சமன்படுத்த வேண்டுமென்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான இயற்கை சூழலோடு வைக்க வேண்டும். வெள்ளத்தில் வருகின்ற தண்ணீரை பி-கெனால் வழியாக திருப்பிவிட்டு கோவளம் கடற்கரையில் உள்ள முகத்துவாரத்தில் கொண்டு சேர்த்தால் பயன்படும். கடல் நீரை குடிநீராக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்தவர் கலைஞர். இந்த தொகுதி மக்களுக்கான மிகப்பெரிய திட்டம். அவர் அமைத்த முதல் வாட்டர் டேங்க் இன்னும் உள்ளது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராமல் எப்படி அகற்றுவது என்பது கிடப்பில் உள்ளது. மீண்டும் நாடாளுமன்ற சென்றால் இவைஎல்லாம் முன்னெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான இயற்கை சூழலோடு வைக்க வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி appeared first on Dinakaran.