சென்னை : GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிய பாஜகவினர் என்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் ரெடிமேட் கடை நடத்தும் சங்கீதா என்ற பெண் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருப்பூர் ஆத்துப்பாளையத்துக்கு பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க.விடம் சங்கீதா என்ற பெண் ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்பினார். பிரச்சார வாகனத்தை மறித்து ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்புவதா என்று கூறி பா.ஜ.க.வினர் தகராறில் ஈடுபட்டனர். கேள்வி எழுப்பிய பெண்ணை தரக்குறைவாக பா.ஜ.க.வினர் திட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை பா.ஜ.க.வினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் ! கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா? சிந்தியுங்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கிய பாஜகவினர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் appeared first on Dinakaran.