×

கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்ல வனத்துறையினர் ஆய்வு

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் உள்ள காப்புக்கட்டில் டிரக்கிங் செல்ல ஏற்பாடுகள் செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி ஃபால்ஸ், நம் அருவி, தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சி முனையம், வாசலூர் பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொல்லிமலை ஆன்மீக சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. வரலாற்று புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், காசி பெரியசாமி கோயில், கொல்லிப்பாவை கோயிலும் இங்குள்ளது.

மூலிகை வனம் நிறைந்த பகுதியான இங்கு சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் டிரக்கிங் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சோளக்காட்டில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதி அமைந்துள்ளது. சுமார் 500 ஏக்கருக்கு மேலுள்ள காட்டில் மூலிகை செடிகள், அரிய வகை தாவரங்கள், அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை பார்வையிடவும், அங்கு சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அடர்ந்த காப்புக்காட்டு பகுதியில், விரும்பத் தகாத செயல்கள் அதிகளவில் நடைபெற்றதால், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது அந்த வனப்பகுதியில் டிரக்கிங் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று டிரக்கிங் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வனத்துறை அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் அப்பகுதியில் அதிகளவில் அட்டைகள் அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு டிரக்கிங் பாதை அமைக்க முடியுமா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காப்புக்காடு வனப்பகுதியில் டிரக்கிங் செல்லப்பாதை அமைத்தால் கொல்லிமலைக்கு கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என வனத்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்த ஆய்வு நடத்த அப்பகுதியில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

The post கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்ல வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Forest department ,Kollimalai reserve forest ,Senthamangalam ,Kollimalai reserve ,Kollimalai ,Namakkal district ,Tamil Nadu ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!