(சென்ற இதழின் தொடர்ச்சி)
ரத்ன கிங்கிணிகா ரம்ய ரசனா தாம பூஷிதா
ரத்ன கிங்கிணிகா ரம்யா… ரசனா தாம பூஷிதா… போன நாமாவில் சொன்னபடி அவள் அணிந்திருகக்
கூடிய சிவப்பு வஸ்திரம் சமாதி அவஸ்தையை கொடுக்கும். அந்த சமாதி நிலையை கொடுக்கும்போது அந்த சமாதி நிலையை நோக்கி நாம் முன்னேறும்போது நமக்கு இந்த நாதானுபவம் கிடைக்கும். அந்த நாதானுபவமும் யார் கொடுக்கிறாள் எனில் அவள் இடையில் அணிந்திருக்ககூடிய அரைஞான் கயிறு மூலமாக அவளே அளிக்கிறாள். அந்த இடையிலுள்ள சதங்கை களின் அசைவுகளின் ஓசைகள்தான் ஒரு சாதகனின் ஆத்ம சாதனையின்போது அனுபவிக்கக்கூடிய நாதானுபவம். அதையும் அவள்தான் கொடுக்கிறாள். ஒரு ஓசைக்கு மேல் இருப்பதால்… கிங்கிணி… என்று வருகின்றது.
மணி ஓசை, வீணைஒலி, தாளம், மத்தளத்தின் ஒலி என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வரும்போது வேணுகானம் கேட்கும். புல்லாங்குழலுக்கு பிறகு கேட்டதற்குப் பிறகு பத்தாவது ஓசை என்னவெனில் மேக நாதம் கேட்கும். அதாவது, மேகங்கள் நகரும்போது ஒரு ஓசை இருக்கின்றது. மிகவும் சூட்சுமமான ஓசை. அந்த சூட்சுமமான ஓசையை இவன் தனக்குள்ளே அனுபவிப்பான். வெளியே நாம் பார்த்தால்கூட அந்த ஓசையை உணரமுடியாது. ஆனால், யோக மார்க்கத்தில் உள்ள ஆத்ம சாதகன் வந்து இந்த பத்து நாதங்களை ஒவ்வொன்றாக கடக்கும்போது கடைசியில் மேகம் நகரக்கூடிய சூட்சுமமான ஓசையைக்கூட தனக்குள்ளேயே கேட்பான்.
ஒருமுறை எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களை திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்கள் தமது யோக சக்தியால் ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்போது யோகி தன் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தீப்பெட்டியை நகர்த்தினாராம். அந்த நகர்த்தலின் சத்தமானது ஒரு லாரி தன் காதருகே சென்றால் என்னவொரு சத்தம் வருமோ அதுபோன்று இருந்ததாம். அவ்வளவு நுட்பமான ஓசையும் நம் புலன்களுக்கு வெகு அருகே கேட்கும் அசாதாரண நிலையாகும். இதுபோல வெவ்வேறு ஓசைகள் கேட்கும் என்பதற்காகவே இந்த உதாரணம். இந்த கிங்கிணியை எப்படி சொல்கிறோமோ அதுபோல ரத்னம் என்கிற வார்த்தையும் இந்த நாமாவில் இருக்கின்றது.
ரத்ன கிங்கிணி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். கிங்கிணி என்பது ஒசை அனுபவத்தையும், ரத்னம் என்பது ஒளி என்கிற light அனுபவத்தைக் கொடுக்கும். இந்த சாதகன் அனுபவிக்கக்கூடிய ஒளி அனுபவத்தை கொடுக்கும். ஒளி அனுபவம் எனில் தியானத்தில் இருக்கும்போது திடீரென்று பளிச்சென்று ஒளி அனுபவம் தெரியும். கனவுகளில் சில காட்சிகள் வரும். அல்லது நேரடியாகவே சில
தரிசனங்கள் கிடைக்கும். நீல நிறங்களில் ஒளிரும். பேரொளி கண்களின் முன்னால் வந்து மறையும். இந்த இரண்டையும் அம்பிகை எதற்கு அளிக்கிறாள். தேவையில்லாமல் அளிக்கவில்லை. ஒரு சிறிய விஷயம் பார்ப்போம். புட்டபர்த்தியில் பாபா முதன் முதலில் ஒரு ஸ்தூபம் பிரதிஷ்டை செய்தார்கள். அந்த தூணில் ஸ்தூபத்தில் மேலே ஒரு தாமரை மலர்ந்திருக்கும்.
அந்த தாமரைக்குள் சிறிய ஜோதி ஒன்று இருக்கும். அப்போது எல்லோரும் கேட்டபோது பாபா சொன்னார், இது அநாகத பத்மம். இது ஹிருதய தாமரை. அந்த ஹ்ருதய தாமரைக்கு உள்ளே இருக்ககூடிய ஆத்ம வஸ்துதான் அந்த ஜோதி. இந்த ஹ்ருதய தாமரையை எவன் தியானிக்கிறானோ… அவனுக்கு அந்த ஆத்மவஸ்து தன்னை காண்பித்துக் கொடுக்கின்றது என்பதை அந்த ஜோதி காண்பிக்கின்றது. வெளியில் இருக்கிற தாமரை ஹிருதயத்தை காண்பிக்கின்றது. இதற்காகவே இந்த ஸ்தூபத்தை பிரதிஷ்டை செய்தேன் என்று சுவாமி சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லிவிட்டு எட்டு பூந்தொட்டிகளை கொண்டுவரச் சொல்கிறார்கள். இந்த எட்டு தொட்டியை கொண்டுவந்து இந்த ஸ்தூபத்திற்கு வெளியில் சின்னதாக ஒரு வட்டம் மாதிரி செய்து அதில் இந்த எட்டு பூச்செடிகளையும் வைக்கச் சொல்கிறார். அப்போது எல்லோரும் பாபா..
எதற்கு இந்த பூச்செடிகளை வைக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். அப்போது சுவாமி சொல்கிறார். இந்த எட்டு பூச்செடிகளும் அஷ்டமா சித்திகளை குறிக்கின்றது. அநாகதம் என்கிற ஹ்ருதய பத்மத்தில் ஒருவன் தன்னுடைய ஆத்ம சொரூபத்தை தரிசிக்கும்போது இந்த எட்டு பூச்செடி என்கிற எட்டு
சித்திகளும் அதாவது அஷ்டமா சித்திகளும் அவனை அறியாமலேயே அவனை வந்து அடையும். அப்போது அவன் இந்த பூச்செடிகளை விலக்கி விடவும் வேண்டியதில்லை. அதை பெரிதாக எடுத்துக் கொண்டு எட்டு பூச்செடிகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான் எனில், உள்ளே இருக்கக்கூடிய ஸ்தூபத்தை ஜோதியை பார்க்க முடியாது.
அதற்காக எட்டு பூச்செடியை தூக்கி போட்டுவிடலாம் எனில் அதுவும் தேவையில்லை. அதை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும். அதனாலேயே தூரமாகவும் இல்லாமல், கிட்டேயும் இல்லாமல் வைத்திருக்கிறேன் என்றாராம், பாபா. கவனம் முக்கியமாக இருக்க வேண்டியது ஹ்ருதயம் என்கிற ஆத்ம ஸ்தானம். அம்பிகையின் இருப்பிடமே. இந்த எட்டையும் கொண்டு அவனே இந்த உலகத்திற்கு ஏதாவது நன்மை நடக்கும். அஷ்டமா சித்திகள் வந்தாலும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதே முக்கியம். சாதகன் இதை பெரிதாக எடுத்துக்கொண்டால் லட்சியம் தவறி விடுவான். இந்த நாத அனுபவங்கள். ஒளி தெரியக்கூடிய அனுபவங்கள் இவை வரும்போது என்ன செய்ய வேண்டும். உபநிஷதமே அதற்கான வழியைச் சொல்லிக் கொடுக்கின்றது.
ஒரு நாதம் கேட்கிறது… எனில் இந்தக் கேட்கக் கூடிய ஒலியையே தியானம் செய் என்று சொல்லிக் கொடுக்கின்றது. exicitementல் மனதை விடாமல் கேட்கக் கூடிய ஒலியில் தியானம் செய். Go through that… அவ்வளவுதான். இவை எல்லாமுமே சாதகன் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று அம்பிகையே காட்டிக் கொடுக்கும் அனுக்கிரகங்களே இங்கு சதங்கையாகவும் ரத்னங்களாகவும் உள்ளன. கொஞ்சம் ஆழமாகப் போய் புரிந்து கொண்டால் இந்த நாமத்தின் வலிமை புரியும். இப்படியாக ஒலியையும் ஒளியையும் கடந்து “ஓம்’’ எனும் பிரணவ நாதத்தை கேட்டு இறுதியாக ஆத்மஜோதியைத் தரிசனம் செய்கிறான். இன்னும் இதில் ஆழமாகச் சென்றால் ஆத்ம சாட்சாத்காரம் என்கிற அம்பிகையின் தரிசனத்தில் தன்னையே தான் அறிந்து முழுமையாகின்றான்.
இதற்குப் பிறகு அங்கு எந்த பேதமும் இல்லை. கடைசியாக அம்பிகையினுடைய காட்சி கிடைக்கும்போது, லலிதாம்பிகையின் காட்சி கிடைக்கும்போது அப்போதுதான் அவனுக்கு தெரியும் அல்லது புரியும்… இந்த அனுபவங்கள் எல்லாமுமே அவள் இடுப்பில் கட்டியிருந்த அந்த கிங்கிணியினுடைய அசைவு கொடுத்த அனுபவம் என்பது கடைசியில் அவனுக்குப் புரியும். அவள் இடுப்பிலிருந்த ஆபரணத்தினுடைய அசைவினாலேயே நமக்கு இத்தனை விதமான நாதானுபவங்களும் இத்தனை யோகானுபவங்களும் கிடைத்திருக்கின்றது.
நாதம், பிரணவம், ஆத்ம சொரூபம்…. அப்பேற்பட்ட ஆத்ம சாட்சாத்காரத்திற்கு யோக மார்க்கமாக நம்மை முன்னேற்றக்கூடியதே இந்த நாமா…இதற்கான கோயில் என்பது திருக்கோலக்கா ஆகும். இத்தலத்தில் உள்ள அம்பிகையின் பெயரே ஓசைநாயகி ஆகும். ஏனெனில், திருஞானசம்பந்தருக்கு கையில் பொற்தாளத்தை (ஜால்ரா) இவளே ஆசையாக ஞான சம்பந்தருக்கு அருளினாள். இந்த நாமத்திற்கு இதைத்தவிர வேறெந்த கோயிலையும் சொல்ல முடியுமோ. இக்கோயில் இறைவன் பெயர் தாளபுரீஸ்வரர். எத்தனை பொருத்தம் பாருங்கள். இக்கோயில் சீர்காழிக்கு வெகு அருகிலேயே உள்ளது.
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா
The post மன அமைதிதரும் நாமம் appeared first on Dinakaran.