நாகர்கள் எல்லோரும் சிறந்த சிவபக்தர்களாக விளங்குகின்றனர். அவர்கள் பல இடங்களில் சிவாலயங்களை அமைத்தனர். அவர்கள் அமைத்த சிவாலயங்கள் அவர்கள் பெயராலே நாகேச்சுரங்கள் என்றும், அவர்களுக்கு அருள்புரிந்த பெருமான் நாகேச்சுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். பாரதத்தின் புகழ்பெற்ற பல தலங்களில் நாகராஜர் வழிபட்ட ஆலயங்கள் உள்ளன. காஞ்சி, குடந்தை, காசி, மதுரை, கோவை முதலிய தலங்களில் உள்ள நாகேசுவரங்கள் புகழ் பெற்றவைகளாகும். இவற்றில் சிலவற்றை இங்கே சிந்திக்கலாம்.
குடந்தைநகர் நாகேச்சரங்கள்
குடந்தையில் நாகராஜாக்கள் வழிபட்ட தலங்கள் பல உள்ளன. அவற்றில் நாகநாத சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும். இது தேவாரத்தில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும், குடந்தைக்கு அருகில் திருநாகேசுவரம் என்னும் திருத்தலமும் உள்ளது.
குடந்தை கீழ்க்கோட்டம்
கும்பகோணம் நகரின் மையத்தில் குடந்தை கீழ்க்கோட்டம் அமைந்துள்ளது. இதை இந்நாளில் நாகநாதசுவாமி கோயில் என்றழைக்கின்றனர். இங்கு ஆதிசேடனும் சூரியனும் பூஜித்துப் பேறுபெற்றனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.
திருநாகேஸ்வரம்
கும்பகோணத்திற்கு அருகில் 3 கி.மீ. தொலைவில் திருநாகேச்வரம் உள்ளது. இது மூவராலும் பாடப்பட்ட பதி. ஆதியில் இது ஷெண்பகவனமாக இருந்தது. அட்டமா நாகங்களில் ஒருவனான தட்சகன் என்பவன் சுசீலர் என்னும் முனிவரின் குமாரனைக் கடித்ததால், முனிகுமாரன் துன்பமடைந்தான். கோபம் கொண்ட
சுசீலர் கார்கோடகனின் பாம்புத் தன்மைகள் முற்றிலும் அழியும்படி சபித்து விட்டார். அவனால் சீறவோ, கடிக் கவோ வேமாக ஓடவோ முடியவில்லை. இதைத் தெரிந்து கொண்ட அசுரகுமாரர்கள் அவனது வாலைப் பிடித்துச் சுழற்றி எறிந்து விளையாடினர். அவன் எல்லோரையும் கண்டு அஞ்சி வனங்களில் ஒளிந்து வாழ வேண்டிய தாயிற்று. ஒரு சமயம் நாகர்களோடு தொடர்புடையதும், நாகர்குல மகளாகப் பராசக்தி தோன்றி கோயில் கொண்டிருந்த ஷெண்பக வனத்தை அடைந்தான். அங்கிருந்த சிவபெருமானை வழிபட்டான். சிவபெருமான் அவனுக்கு இன்னருள் புரிந்தார். மீண்டும் பழைய பலத்தைப் பெற்றான். அவன் வழிபட்டதால் இத்தலம் திருநாகேச்சுரம் எனப் பெயர் பெற்றது. தேவியருடன் கூடிய அவனுடைய திருவுருவத்தை ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் எழுந்தருளி வைத்துள்ளனர். (தட்சகன் என்னும் நாகராசனின் வடிவத்தையே இன்று மக்கள் இராகு பகவான் என்று கூறி வழிபட்டுப் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர்). ஐப்பசி சுக்லபட்ச சதுர்த்தசி தினத்தில் உச்சிகாலத்தின் போது இங்குள்ள நாகேசப்பெருமானின் திருமேனியில் ஆதிசேடன் பாம்பு வடிவில் தோன்றிப் படமெடுத்துக் காட்சியளிப்பார் என்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் நாகம் வழிபட்டதை
‘‘சந்திரனொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணி கொள்
மைந்தர் போல் மணி நாகேச்சரவரே’’
என்று திருஞான சம்பந்தர் குறித்துள்ளார். சேக்கிழார் இத்தலத்துப் பெருமானை ‘‘மாநாகம் அர்ச்சித்த மணாளர்’’ என்று போற்றுகின்றார். மாசி மாதம் சிவராத்திரியில் இரண்டாம் காலத்தில் நாகராஜன் பூசிக்கும் ஐதிக விழா இங்கு நடைபெறுகிறது.
காஞ்சி நாகநாதங்கள்
முக்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மை பெற்ற தலமான காஞ்சியில் பாம்பரசர்கள் வழிபட்ட தலங்கள் பல பெயர்களில் விளங்குகின்றன். இவை யாவும் தனித் தனியே புராணச் சிறப்புடன் திகழ்கின்றன.
காசி நாகநாதங்கள்
காசி மாநகரில் நாகராஜாக்கள் வழிபட்ட ஒரு சிவாலயம் உள்ளது. காசியில் கங்கைக் கரையில் உள்ள கேதாரீசுவரர் ஆலயத்திலிருந்து விசுவநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் உயரமான மேடை மீது சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட அழகிய ஆலயமாக நாகநாதர் ஆலயம் உள்ளது. கருவறையில் ஏழுவிங்கங்கள் உள்ளன. இது புராணச் சிறப்பு மிக்கதாகும். மேலும், காசிக்கு அருகே அமைந்துள்ள அமராவதி கிராமத்தில் நாகநாதர் எழுந்தருளியுள்ளார். காசிக் கண்டத்தில் காசியில் கடைப்பிடிக்க வேண்டிய பலவிதமான யாத்திரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாக யாத்திரை என்பது ஒன்றாகும். ஆவணி மாதத்து வளர்பிறை பஞ்சமியில் வாசுகீசர், கார்க்கோட ஈசுவரர், முதலான லிங்கங்களை நாககுண்டத்தில் மூழ்கி வழிபட வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது.திருப்புத்தூர் நாகநாதர்
பாடல்பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் திருப்புத்தூர். இங்கு பெருமான் திருத்தளிநாதர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டாம் சுற்றில் வடபகுதியில் பைரவர் ஆலயமும் வடகிழக்கு முனையில் நாகேசுவரர் ஆலயமும் உள்ளன. நாகேசுவரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இது கருங்கல்லில் கலைநுணுக்கத்துடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூர்ப் புராணத்தில் இந்தச் சந்நதி இங்கு அமைந்ததற்கான வரலாறு கூறப்பட்டுள்ளது. மேலே குறிக்கப்பட்ட திருப்பத்தூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. வடார்க்காடு மாவட்டத்திலும் திருப்புத்தூர் என்னும் ஊர் உள்ளது. இதை வாணியம்பாடி திருப்பத்தூர் (வேலூர் திருப்பத்தூர் என அழைக்கின்றனர். இந்த திருப்பத்தூரிலும் நாகநாதசுவாமி ஆலயம் உள்ளது. இது பழம்பெரும் ஆலயமாகும். இங்கு இறைவன் நாகநாதர். இறைவி நாகேசுவரி.
நாகலிங்கம்
நாகத்தோடு விளங்கும் லிங்கத்தை நாக லிங்கம் என்பர், (படத்தை விரித்துக்குடை பிடித்த வாறு மூன்று அல்லது ஐந்து சுருளாக உடலைச் சுருட்டிக் கொண்டுள்ள பாம்பின் உடலை ஆசனமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் லிங்கம் நாகலிங்கம் எனப்படும், நாகலிங்கத்தை வழிபடுவதால் வம்சம் விருத்தியாகும் என்று நம்புகின்றனர். அனைத்து ஆலயங்களிலும் லிங்கத்தோடு சேர்த்து நாகத்தின் உருவத்தை அமைப்பதில்லை. விரிந்த படத்துடன் கூடிய நாகத்தை உலோகத்தால் செய்து லிங்கத்திற்கு அணிவிப்பர். அதற்கு நாக பாசம் என்பது பெயர். பெருமானை எப்போதும் நாகலிங்கமாக வழிபட வேண்டும் என்பதற்காக இந்த முறையைக் கடைப்பிடிக்கின்றனர். சில தலங்களில் பிராகாரத்தில் நாகலிங்கத்திற்கான சந்நதி அமைந்துள்ளது. இதில் லிங்கமும் அதற்கு பீடமாகவும் குடையாகவும் இருக்கும்படி பாம்பை அமைத்துள்ளனர்.திருவோத்தூர் ஆன திருவத்திபுரம் வேதபுரீசுவரர் ஆலயத்தில் தனிச்சந்நதியில் நாகலிங்கம் அமைந்துள்ளது. இது அபூர்வமான கலைப்படைப்பாகும். இதில் நாகம் உயர்ந்த ஆசனத்தின் மீது அமைந்துள்ளது. ஆசனத்தை ஆமையும் அதனை ஆதாரசக்தியும் தாங்குகின்றனர். ஆசனத்தை எட்டு யானைகள், எட்டு பாம்புகள், எட்டு மலைகள் தாங்குகின்றன. பாம்பு படம் விரித்து லிங்கத்திற்குக் குடையாக அமைந்துள்ளது. இந்த அமைப்போடு சேர்ந்த வகையில் கல்லிலேயே பெரிய பிரபாவளி உள்ளது. இத்தகைய அபூர்வமான கலைப்படைப்பினை வேறெங்கும் காணமுடியவில்லை. வடநாட்டுச் சிவலிங்கத் திருவுருவங்களில் ஆவுடையாரில் பாம்பின் உருவமும் சேர்த்தே அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி மாநகரில் பாம்பரசர்கள் பணிந்த சிவலிங்கங்கள்
‘‘கல்வியிலே கரையிலா கச்சி’’ என்று புகழப்படும் காஞ்சியில் தேவர்களும், முனிவர்களும் அசுரர்களும், மாமன்னர்களும் தத்தம் பெயரால் அனேக லிங்கங்களை நிலைப்படுத்தி வழிபட்டுச் சிவனருள் பெற்றுள்ளனர். அதுபோன்று பாம்பரசர்களும் காஞ்சியில் பல்வேறு சிவலிங்கங்களைத் தத்தம் பெயரால் அமைத்துள்ளனர். இவ்வகையில் மகாகாளேசம், அனந்தேசம், மணிகண்டேசம், பணாமணீசம், பணாதரேசம் முதலான ஆலயங்கள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்திற்கு நாகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தை ஆண்ட கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னனுக்கும் நாக கன்னிகையான பீலி வளைக்கும் பிறந்தவன். இவனுடைய திருவுருவம் காமாட்சி ஆலயத்தில் உற்சவ காமாட்சிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. வடமொழியில் இவனை துண்டீர மகாராஜா என அழைக்கின்றனர்.பார்வதிதேவி நாகலோகத்தில் நாக கன்னிகையாகப் பிறந்து, பின்னர் காஞ்சிக்கு வந்து தவம்செய்தாள் என்றும், இறைவன் தானும் நாகனாகத் தோன்றி அவளைத் திருமணம்செய்து கொண்டான் என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் மகனாக விநாயகர் தோன்றினார். சிவனும் நாக கன்னிகையான அம்பிகையும் விநாயகரைச் சீராட்டும் தூண் சிற்பம் ஒன்று ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ளது.இறைவன் பாம்புகளைத் திருமேனியில் அணிகளாக அணிந்த இடம் பணாதரேச்சரமாகும். கருடனுக்கு அஞ்சிய பாம்புகள் சிவபெருமானைச் சரணடைந்தன. அவற்றைப் பெருமான் அணிகலன்களாக மேனியில் தரித்தார். பாம்புகளைத் தரித்ததால் பெருமான் பணாதரேசுவரர் என்று அழைக்கப்படுகின்றார். நாகர்கள் தமது ஒப்பற்ற நாகரத்ன மணிகளால் பெருமானைப் போற்றிய இடம் பணாமணீசம் ஆகும். இது திருவள்ளுவர் தெருவில் வடக்குச் சிறகில் அமைந்துள்ளது. இதற்கருகில் முத்ராதேவி (மாகாளியம்மன்) ஆலயம் உள்ளது.தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்னும் பாம்பரசன் பாம்பாக விளங்கினான். அவர்கள் அவனை மலையில் கட்டியிழுத்த போது விஷத்தைக் கக்கினான். அதைப் பெருமான் உண்டு மணிகண்டரானார். விஷம் கொடுத்த பாவம் தீர, வாசுகி காஞ்சிபுரம் சென்று சிவலிங்கம் அமைத்து வழிபட்டான். பெருமான் மணிகண்டராக அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்புரிந்தார். மணிகண்டேசம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ளது. மகாகாளன் என்னும் பாம்பரசன் வழிபட்ட ஆலயம் மகாகாளேச்சுவரர் என்னும் பெயரில் குமரக் கோட்டத்திற்கு அருகில் உள்ளது. இன்னும் அனேக பாம்பரசர்கள் இந்தத் தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவர்கள் அமைத்த பல லிங்கங்கள் அவர்கள் பெயராலேயே உள்ளன.
தென்பாண்டி நாட்டில் நாக வழிபாடு
தென்பாண்டி நாட்டுத் தலங்கள் பலவற்றில் பாம்பு வழிபாடுகள் சிறப்பாத விளங்குகின்றன. இவற்றில். நாகர்கோவில், சங்கரன் கோவில், நயினார் கோவில் ஆகிய மூன்று தலங்கள் குறிப்பிடத் தக்கவைகளாகும். நாகர்கோவிலில் பாம்பு வழிபாடு இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது. அங்கு நாகராஜருக்குப் பெரிய ஆலயம் அமைந்துள்ளது. பின்னிரண்டு தலங்களும் பெரிய சிவாலயங்
களாக விளங்குகின்றன. அவற்றைப் பற்றிய செய்திகளைச் சிந்தித்து மகிழலாம்.
நாகவல்லி
நாகவல்லி என்பதற்கு பாம்புக் கொடி என்பது பொருள். நடைமுறையில் வெற்றிலைக் கொடியையே நாகவல்லி என்கின்றனர். முன்னாளில் பாம்புகள் தொடர்பான கொடிகள் இருந்திருக்க வேண்டும். அவற்றின் அடியில் மணமக்களை அமர்த்தி வம்சம் தழைப்பதற்கான வேண்டுதல் பூசைகள் நடத்தப்பட்டு வந்தன. நதியோரங்களில் வளரும் அக்கொடிகள் காலவெள்ளத்தில் மறைந்து விட்டதால் வெற்றிலைக் கொடிகளின் கீழ் அந்த பூசையை நடந்தும் வழக்கம் வந்துவிட்டதாகக் கருதுகின்றனர். நாகவல்லி கொடிகள் பின்னிப்பிணைந்திருப்பது பாம்புகள் பின்னிப் பிணைந்திருப்பது போல் இருப்பதாகும். நாகவல்லி கொடிகளில் கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பார்வதிக்கு நாகவல்லி என்பது பெயர். நாகூரில் உள்ள நாகநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நாகவல்லி என்று அழைக்கப்படுகின்றாள். தெலுங்கு, கன்னட மொழி பேசும் வகுப்பாரிடம் நாகவல்லி முகூர்த்தம் என்னும் திருமணச் சடங்கு நடைபெறுகின்றது. நீர்க்கரையில் வெற்றிலைக் கொடி கீழ் இந்த முகூர்த்தம் நடத்தப்படுகிறது.தெலுங்கு மன்னர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வேளையில், மதுரை மீனாட்சி திருமணத்திலும் நாகவல்லி முகூர்த்தம் இடம் பெறத் தொடங்கியதாகக் கூறுவர். இதை விளக்கும் சுதைச் சிற்பமொன்று கோபுரத்தில் இடம்பெற்றுள்ளது. நீண்ட பாம்பின் வாலை அம்பிகையும் சிவனும் பற்றியுள்ளனர். அதன் உடல் வளைந்து கொடி போல் உள்ளது. தலையை விரித்துள்ளது. அந்த விரிந்த படத்தில் விநாயகர் அமைந்துள்ளார். நாகவல்லியை வழிபட்டால் பிள்ளைச் செல்வம் பெருகுமென்பதை இது உணர்த்துகிறது என்கின்றனர்.
நயினார் கோயில் (மருதூர் நாகநாதர்)
பாம்பரசர்கள் பூஜித்து சிறப்புப் பெற்ற தலங்களில் ஒன்று நயினார் கோயில் என வழங்கும் மருதூர் ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒருமுறை ஆதிசேடன் வேத ஆகமங்களைப் பயின்று அதில் முடிவாகக் கூறப்பட்டுள்ள ஞானத்தைப் பெற வேண்டி கயிலை மலைச்சாரலில் தவம் செய்தான். சிவபெருமான் அவன் முன்னே தோன்றி மருதூர் சென்று வழிபடுக என்றார். பாம்பு வடிவுடன் சென்றால் மக்கள் அஞ்சுவர் என்று அந்தண வடிவு கொண்டான். மருதூர் வந்து வில்வ மரத்தடியில் விளங்கும் பெருமானைக் கண்டு ஆலயம் அமைத்தான். தம் பெயரால் நாகத்தடம் என்னும் தீர்த்தமுண்டாக்கினான். அவனது வழிபாட்டுக்கு மகிழ்ந்த சிவபெருமான் ஞானாசிரியனாய் (தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு) எழுந்தருளி அவனுக்கு ஞான தீட்சை செய்வித்து உபதேசம் செய்தார்.ஆதிசேடன் ஞானம் பெற்றதை முனிவர்கள் வாயிலாக அறிந்த அட்ட மாநாகங்கள் நாகநாதரின் மகிமையை உணர்ந்தன. மருதூர் வந்து ஐந்தெழுத்தை யோதி அரிய தவம் புரிந்தன. அவற்றின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவற்றிற்குக் காட்சியளித்து அட்டமா சித்திகளை அளித்து பூமியை எளிதாகச் சுமக்கும் வலிமையை அளித்தார். இத்தலத்தில் மாநாகமாகிய வாசுகி பூசித்த பேறு பெற்றதுடன் தம் பெயரால் ஒரு தீர்த்தமும் அமைத்தான். அது வாசுகி தீர்த்தம் என வழங்குகிறது. இது கோயிலுக்கு மேற்கே உள்ளது. சிறப்புமிக்க இந்த தீர்த்தத்திற்கு 25 பெயர்கள் உள்ளதென்று தலபுராணம் கூறுகிறது. மேலும், நாகங்களின் பெயரைக் கொண்டவர்களும் இங்கு வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஒருவருக்கு நாகநம்்பி என்பது பெயர். அம்பிகை அவருக்கு மகளாக அவதரித்தாள் ஒரு வெள்ளிக்கிழமையன்று பெருமான் அவளைத் திருமணம் செய்துகொண்டு மணக்கோலத்துடன் காட்சியளித்தார்.இங்கு மேற்குப் பிராகாரத்தில் பெரிய பாம்புப் புற்று உள்ளது. இதன் மண் மருத்துவ குணம் மிக்கதாகும். பெருமான் பெரிய நாகமாகக் காட்சியளித்தார் என்று கூறுகின்றனர். அதையொட்டி நாகர்கோவில் என்னும் சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆலயத்திலுள்ள சந்தியாவந்தன மண்டபத்திற்கு வடமேற்கில் உள்ளதாகும். இத்தலத்திற்கு அருகிலிருந்த ஓர் ஊரில் ஒரு பிராமண தம்பதியருக்கு நெடுநாட்களாகப் புத்திரப்பேறு இல்லை. அவர்கள் நாகநாதரை வேண்டி விரதமிருந்ததன் பயனாக புத்திரனை அடைந்தனர். அவர்கள் தமது பிரார்த்தனைக் கடனைச் செலுத்த இத்
தலத்திற்கு வந்தனர். கோயிலுக்கு அருகில் அமைந்த வாசுகி தடாகத்தில் நீராட விரும்பினர். அருகிலிருந்து புளிய மரத்தில் தூளி கட்டி அதில் குழந்தையைத் தூங்கச் செய்து விட்டு குளத்தில் நீராடினர். பின்னர் வந்து பார்த்தபோது, பாம்பொன்று அவர்களது குழந்தையின் காலைச் சுற்றிக் கொண்டு படமெடுத்தாடியவாறு இருந்தது.அதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்வதறியாது திகைத்து ‘‘நாக நாதா நாகநாதா’’ என்று அரற்றினர். பாம்பு சற்று நேரத்தில் இறங்கி மறைந்து வி்ட்டது. அவர்கள் மகிழ்ந்தனர். தங்கள் குழந்தையைக் காத்ததன் நினைவாக இங்கு நாகநாதருக்கு ஆலயத்தை அமைத்தனர். இச்சந்நதியில் மூன்று கால வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது. இது சக்திவாய்ந்த புனிதத் தலமாகப் போற்றப்படுகிறது.
ஜி.ராகவேந்திரன்
The post தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! appeared first on Dinakaran.