பவானி, ஏப். 11: மேட்டூர் அணையின் வலது கரை பாசனத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக் கூறி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் 26ம் தேதி முதல் விநாடிக்கு 200 கன அடி வீதம் வலது மற்றும் இடது கரை பாசனப் பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக் கூறி பவானி அருகே உள்ள மூன்ரோடு பகுதியில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, தாசில்தார் தியாகராஜ், இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதிக்கு விவசாயிகளுடன் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விவசாயிகளின் தேவை குறித்து முறையாக மனு அளித்தால், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை தலைமடை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மதகினைத் திறந்து அதிகளவில் பயன்படுத்தியதால், கடைமடைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்பதால் ஏமாற்றம் நிலவியது. இதையடுத்து, விவசாயிகள் தரப்பில் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
The post மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.