- மோடி
- தயாநிதி மாறன்
- மத்தியப் பிரதேசம்
- திமுக
- சென்னை
- மத்திய சென்னை தொகுதி
- அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு
- அண்ணாநகர் தெற்கு
- மத்திய சென்னை
சென்னை, ஏப்.11: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அண்ணாநகர் தெற்கு பகுதி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் நேற்று பிரசாரத்தை தொடங்கி பல்வேறு இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அதை தொடர்ந்து, தயாநிதி மாறன் அளித்த பேட்டி: இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை புறக்கணித்து, பழிவாங்கும் செயலை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். வெள்ளத்தில் நாம் தவித்த போது ஒருமுறை கூட வராத பிரதமர், வெள்ள நிவாரணத்துக்கு உதவுங்கள் என்று கேட்டபோது ஒரு நயா பைசா தராத பிரதமர், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்கு ஒரு காசு கூட தனது பங்கை தராத பிரதமர், சென்னைக்கு எந்தவித தேசிய திட்டங்களையும் வரவிடாமல் தடுத்தவர் பிரதமர் மோடி.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடிக்காதவர். எங்களை பார்த்து கேட்கும் போது, நாங்கள் சொல்வோம், எங்கள் உரிமைகளை கேட்கிறோம். நீங்கள் தான் இந்தியாவை மதத்தின் பேரால், மொழியின் பேரால் பிரித்து வைத்திருக்கிறீர்கள். எங்களுக்கு தேவை ஜனநாயக முறையில் மதசார்பற்ற முறையில் இந்தியாவில் நல்லாட்சி அமைய வேண்டும்.
அண்ணாமலை ஒரு ஜோக்கர் என்று சொன்னதாக கேட்கிறீர்கள். திமுக காரங்க எப்போதும் உண்மையை தான் பேசுவார்கள். மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம் அழைத்து சென்றார்களே, அந்த கொடுமையை கண்டு நாடே பதறியது. அப்போது பிரதமர் மோடி போய் பார்த்தாரா?. எங்கெங்கு பெண்களுக்கு கொடுமை நடக்கிறதோ, அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் பாஜவினர் தான் இருக்கிறார்கள். வீடியோக்களை ரிலீஸ் பண்ணியது யார்? அவர்களை பற்றி பேசாதீர்கள். பெண்களுக்கு கோபம் வந்து விடும். என்னை பொறுத்தவரை, முந்தைய காலத்தில் சென்னை தீவுத்திடலில் பாம்பே சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் நடத்துவார்கள். அதே மாதிரி இப்போது மோடி அதேபோன்ற ஒரு சர்க்கசை, குறிப்பாக மேற்கு மாம்பலம் பகுதிக்காக அங்குள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக செய்துவிட்டு போயிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளர் ந.ராமலிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கார்த்திக் மோகன், அண்ணாநகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் பத்மபிரியா மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.
காரில் பறக்கும்படை சோதனை
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நேற்று காலை சென்ட்ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலை, ஜக்காபுரம், கல்யாணபுரம், பள்ளம் பகுதி உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு பிரசாரத்தை முடித்து திமுக நிர்வாகி ஒருவர் இறப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் சென்ற போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தயாநிதி மாறன் காரை மடக்கி திடீர் சோதனை மேற்கொண்டனர். காரில் பணமோ, பரிசு பொருட்களோ உள்ளனவா என்று ேசாதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்காதால் அவரை அனுப்பி வைத்தனர்.
The post எந்த தேசிய திட்டங்களையும் வரவிடாமல் தடுத்தவர் வெள்ளத்தில் நாம் தவித்தபோது நயா பைசா தராதவர் பிரதமர் மோடி: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி appeared first on Dinakaran.