×

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யவேண்டும்: மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவு

செங்கல்பட்டு, ஏப். 11: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள உறுதி செய்ய வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளான சரிவு பாதை வசதி, மின் விசிறி, பழுதடைந்த கதவு மற்றும் ஜன்னல் மாற்றம் செய்தல், குடிநீர் வசதி, தரைதளம் சரி செய்தல் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேவைப்படும் வசதிகள் குறித்தும், நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், செங்கல்பட்டு தொகுதியில் 443, செய்யூர் தொகுதியில் 263, மதுராந்தகம் தொகுதியில் 274, சோழிங்கநல்லூர் தொகுதியில் 663, தாம்பரம் தொகுதியில் 427, பல்லாவரம் தொகுதியில் 437, திருப்போரூர் தொகுதியில் 330 என மொத்தம் 2,837 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இதில், மின் விளக்கு, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் பந்தல், டேபிள், நாற்காலி, குடிநீர் வசதி போன்றவை ஏற்பாடு செய்யவேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் கழிவறை வசதி இருக்க வேண்டும். வாக்குப்பதிவு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் வாக்குப்பதிவு மையத்தில் நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யவேண்டும்: மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,District Collector ,Arunraj ,Dinakaran ,
× RELATED மகேந்திரா சிட்டி,...