- பாஜக
- சங்க் பரிவார்
- திருமாவளவன்
- முருகானந்தம்
- தமிழகத்தின் விடுதலைப் புலிகள்
- நடேசன் நகர்
- தண்டேஸ்வரநல்லூர்
- சிதம்பரம்
- கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தண்டேஸ்வரநல்லூர் கிராமம் நடேசன் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் முருகானந்தம் என்பவரின் வீட்டில் தங்கி திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமாவளவன் தங்கி இருக்கும் வீட்டில் கடலூர் வருமானவரித்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடத்திய சோதனையில் எந்தவித பொருளோ, பணமோ கைப்பற்றப்படவில்லை.
வருமான வரித்துறை சோதனை குறித்து திருமாவளவன் சிதம்பரத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரித்துறையினர் நான் தங்கிருந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று திறந்து பார்த்தார்கள். ஒவ்வொரு பெட்டியாக பிரித்து பார்த்தார்கள். இது உள்ளபடியே வேடிக்கையாக இருக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு கட்சி, பொருளாதாரமே இல்லாத கட்சி இந்த கட்சி. மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி என எதுவாக இருந்தாலும் மக்களிடத்தில் பணத்தை பெற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். 30 ஆண்டுகளாக இப்படித்தான்.
இதுவரை இப்படி ஒரு ரெய்டு நடந்ததாக சரித்திரமே இல்லை. முதல் முறையாக இப்படி ஒரு நெருக்கடியை அவர்கள் தந்திருக்கிறார்கள். பாஜ சிதம்பரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ஒரு வேட்பாளர் தங்கி இருக்கிற இடத்திலேயே எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. உளவியல் அடிப்படையிலே ஒரு தாக்குதல் நடத்துவதாக இதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் கடந்து நாங்கள் தேர்தலை வெற்றிகரமாக முடிப்போம். மிக கடுமையாக பாஜ மற்றும் சங் பரிவார் அமைப்புகளை கொள்கை அடிப்படையிலே விமர்சிக்கிற ஒரு இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதால் இந்த மாதிரியான அச்சுறுத்தலை தருகிறார்கள் என்று கருதுகிறேன். இது போன்ற அச்சுறுத்தல்கள் எமது பயணத்தை ஒருபோதும் தடை செய்யாது. பாஜவை எதிர்த்து பேசக்கூடாது, அரசியல் செய்யக்கூடாது என்று அவர்கள் இது போன்ற அச்சுறுத்தலை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post உளவியல் ரீதியாக அச்சுறுத்த பார்க்கிறார்கள்: பாஜ, சங் பரிவார் அமைப்புகளை கடுமையாக விமர்சிப்பதால் ரெய்டு; திருமாவளவன் காட்டமான பதிலடி appeared first on Dinakaran.