×

தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க பிரதமர் மோடி..? ஆதாரங்களுடன் கேள்வி கேட்டு காங்கிரஸ் விளாசல்

புதுடெல்லி; நீட் தேர்வு விலக்குக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன், வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காது ஏன், நிதிபகிர்வில் வெறும் 29 பைசா ஒதுக்கியது ஏன் என்று தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக சென்னை, வேலூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டின் உரிமைகளை புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யாமல் அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மக்கள் மீது பாஜ தனது விருப்பத்தைத் திணிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் பா.ஜவால் இன்று வரை அதை செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டை பாதிக்கும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இன்று(நேற்று) பிரதமர் மோடி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருக்கிறார். கூட்டாட்சியை வலியுறுத்தும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டில் பாஜ தனது விருப்பத்தை மக்கள் மீது திணிக்க பலமுறை முயற்சிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைப் பதிவு பற்றி தமிழ்நாடு கேள்வியைக் கேட்கிறது. அது பிரதமர் மோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறாரா, அல்லது அவர்களை ஆட்சி செய்ய விரும்புகிறாரா? என்பதுதான்.

2017ம் ஆண்டு பாஜ அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்களை அநியாயமாகப் பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பரவலான பொதுப் பின்னடைவு தமிழ்நாட்டில் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் அச்சங்கள் மிக விரைவில், உறுதி செய்யப்பட்டன. 2019ம் ஆண்டு தரவுகளின்படி, தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களில் 2% பேர் மட்டுமே தனியார் பயிற்சியில் சேராமல் தேர்ச்சி பெற்றனர். பயிற்சி மையங்கள் ஒரு மாணவருக்கு ரூ. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதால், ஓரங்கட்டப்பட்ட மாணவர்களை தேர்வுக்கு தகுதி பெறச் செய்தனர். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு இது சாத்தியம் இல்லாமல் போனது.

தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான பேரிடர் நிவாரண நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதால், கடந்த வாரம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023 டிசம்பரில் தமிழ்நாட்டை உலுக்கிய மிக்ஜாங் புயலால் வரலாறு காணாத வெள்ளம், சேதம் ஏற்பட்ட பிறகும் தமிழ்நாடு சமாளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் பிற நிதிகளில் இருந்து 3,406 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால் புயலால் ஏற்பட்ட விரிவான சேதத்தை ஈடுகட்ட அந்த நிதி போதுமானதாக இல்லை.

இதுபோன்ற சூழ்நிலைகளில், மாநில அரசின் சமாளிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாக பேரிடர்கள் இருக்கும் போது உதவுவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலங்கள் கூடுதல் உதவியை நாடலாம். அந்த நிதியில் இருந்து ரூ. 18,214 கோடி நிதியுதவி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதியும், பின்னர் ஜனவரி 10ம் தேதியும் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இப்போது வரை 4 மாதங்களுக்கு மேலாகியும், ஒன்றிய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த நிதி தாமதம் தமிழ்நாடு மக்களுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை சொல்ல தேவையில்லை. தமிழ் மக்களின் தேவைகளைப் பற்றி அலட்சியமாக இருக்கும் பிரதமரின் நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அன்றி வேறு என்ன?

2008ல் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​ஒன்றிய அரசின் நிதி அநீதி மற்றும் போதிய வரிப்பகிர்வு குறித்த தனது கருத்துகளால் புயலை கிளப்பினார். ஆனால், தற்போது ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் இருப்பதால், செருப்பு மற்றொரு காலுக்கு மாறிவிட்டது. ஜனவரியில், தமிழ்நாடு நிதியமைச்சர், தமிழ்நாடு ஒன்றிய அரசுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் மக்கள்தொகையில் 6.124 சதவீதமாக தமிழ்நாடு இருந்தாலும், மத்திய வரிகளில் அதன் பங்கு 12வது நிதிக்குழுவின் கீழ் 5.305 சதவீதத்தில் இருந்து 15வது நிதிக்குழுவின் கீழ் 4.079 சதவீதமாக குறைந்து விட்டது. மோடி அரசு அறிமுகப்படுத்திய செஸ் ராஜ்ஜியத்திற்கு இடையே தமிழ்நாட்டின் பங்கில் இந்த குறைப்பு வந்துள்ளது. இந்த செஸ் ராஜ்ஜியம் குறிப்பாக மாநிலங்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக உருவானது. இந்தப் பிரச்சினையில் பிரதமரின் மனமாற்றம் முழுக்க முழுக்க அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான அவரது விருப்பத்திற்குக் காரணமா?. தமிழ்நாடு தொடர்பான இந்த விவகாரங்களில் பிரதமர் மோடி முதலில் மவுனம் கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் விளாசியுள்ளார்.

நீட் தேர்வால் அழிவு தமிழ்நாடே சாட்சி
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ மருத்துவப் படிப்புகளில் இடம் பெறும் தமிழ் வழி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2016ல் (நீட் தேர்வுக்கு முன்) 600 ஆக இருந்து, 2017ல் 5 ஆகவும், 2018ல் 7 ஆகவும், 2019ல் 0 ஆகவும் மருத்துவப் படிப்புகளில் சீட் பெறும் எண்ணிக்கை சுருங்கி விட்டது. இந்த அநீதியை நிவர்த்தி செய்ய, தமிழ்நாடு சட்டசபை 2017 முதல் இரண்டு நீட் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

அந்த மசோதாக்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கின்றன. ஆனால் எந்த மசோதாவிற்கும் ஜனாதிபதி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த கதையின் மிகவும் சோகமான கூறு என்னவென்றால், இந்த தாமதத்தால் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பல மாணவர்கள் தற்கொலைகளை சந்தித்துள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சாட்சியாக உள்ளது. பிரதமர் மோடி தனது கொள்கைகளால் ஏற்படுத்திய பாதிப்பை ஏன் கண்டுகொள்ளவில்லை?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க பிரதமர் மோடி..? ஆதாரங்களுடன் கேள்வி கேட்டு காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,Congress ,New Delhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர்...