நன்றி குங்குமம் டாக்டர்
இரு வழிப்பாதை
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி
அதிலும் ஆண்கள் ‘சாமியாராக’ போகும் ஒரு சிறு நாடகம் பெரும்பான்மையான குடும்பங்களில் ஒருமுறையாவது நிகழ்ந்திருக்கும். இல்லாவிடில் விளையாட்டாக ஒரு வார்த்தையாகவாவது இங்கே சொல்லப்படுவதுண்டு. அப்படிச் சென்றவர்கள் சில மாதங்களில் ஓய்ந்து தளர்ந்து திரும்பி வருவதும் நடக்கிறது. ஏன் மனிதர்களுக்கு இந்த சிறிய ‘இடைவெளி’ அல்லது ‘விடுபடுதல்’ தேவையாகிறது? ஏன் அவர்களால் திரும்ப வந்துவிட முடிகிறது?
மரபில் இதை இருவழிப் பாதை என்கின்றனர்.
அதாவது மனிதன் ஆழத்தில் நிறைவாகவும், உயிரோட்டத்துடனும் தன்னை உணராதபோது தான் அடைந்த அத்தனை வெற்றி தோல்விகளிலும் தான் சேர்த்த அனைத்து வித செல்வங்களிலும், அர்த்தமின்மையை உணரத் தொடங்குகிறான். அது வாழ்வில் சலிப்பை உண்டாக்குகிறது. இதை விட்டுவிட்டு விலக வேண்டும் என ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அப்படி கிளம்பிச் சென்ற பின்பும், பற்றிக்கொண்டிருக்கும் எதுவும் உள்ளத்தளவில் விலகுவதில்லை. அந்தப் பற்று அவர்களை கிளம்பிய இடத்திற்கே மீட்டு இழுத்து வந்துவிடுகிறது. ஆகவே இவ்வகை அலைக்கழிப்புகளால் பெரும்பாலும், வாழ்வில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. அப்படி கிளம்பிச்சென்ற வெகு சிலர் மட்டுமே அங்கே தாக்குப்பிடிக்கிறார்கள் அல்லது அமைகிறார்கள்.
ஆகவே நம்முடைய மரபு இந்த இரட்டைவேடச் சிக்கலை தீர்க்க வலுவான அடித்தளம் மிக்க பாதை ஒன்றை வகுத்துள்ளது.அது ப்ரவ்ருத்தி மார்க்கம் என்றும் நிவ்ருத்தி மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.‘வ்ருத்தி’ என்பதற்குப் பரவுதல், சுழல்தல், சுற்று எனப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ப்ரவ்ருத்தி என்பது இன்னும் ஆழமாகவும் முழுதாகவும் தீவிரமாகவும் பற்றிக்கொள்ளுதல் அல்லது சுழல்தல், சுற்றுதல் எனப் பொருள்படுகிறது. இதன் நேர் எதிர்நிலைதான் நிவ்ருத்தி எனப்படும் விடுபட்ட நிலை, பற்றிக்கொள்ளாமல் இருக்கும் நிலை. அதாவது,எந்த ஒரு மனிதரும் முழுமையாக ஒன்றில் அமைவதையும் அல்லது விட்டுவிடுவதையும் வைத்தே வாழ்க்கை அமைகிறது.
அவ்வகையில் மேற்படிப்பு, குடும்பம், திருமணம், உறவுகள், வளர்ச்சி, வெற்றி தோல்வி போன்ற ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் நாம் அனைவரும் முதல் பிரிவினர்.
மிகச் சிறிய வயதிலோ அல்லது பின்னரோ இந்தச் சூழலில் இருந்து விலகி, வேறு ஒன்றைத் தேடி அலைந்து திரியும் துறவியர்,அல்லது எங்கோ சென்று அமர்ந்து இங்கிருக்கும் வாழ்வை விட்டவர்கள் இரண்டாவது வகையினர்.
இதில் முதல் வகையினராக நமக்கு மரபு வகுத்துள்ள பாதைக்கு ‘ப்ரவ்ருத்தி மார்க்கம் ‘ என்று பெயர். நாம் அனைவரும் வாழ்வில் எதாவது ஒரு கட்டத்தில் சலிப்பும் எரிச்சலும், போதாமையும் அடைவோம். அப்போது நம்மை இங்கிருக்கும் எந்தத் தன்மையாலும் சமாதானம் செய்யவோ நிறைவைக் கொடுக்கவோ முடியாது. உறவுகள், செல்வங்கள், உடலின் ஆரோக்யம் போன்ற எதுவும் அந்த வெறுமையை நிரப்பமுடியாது, இவற்றைக் கடந்த உயிர்நோக்கம் அல்லது ஆன்மிகமான எதோ ஒன்று மட்டுமே மனிதனை நிறைவுகொள்ளச்செய்யும் ஆற்றல் மிக்கது. அப்படியான ஒன்றை செய்வதைப் பற்றியும், அதற்கான தயாரிப்புகளைப் பற்றியும் விரிவாக பேசும் பாதைக்கு இந்தப் பெயர்.
இந்த லௌகீக வாழ்க்கையில் துடிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அந்த ‘வரும்’ காலத்துக்கு நம்மைச் சிறிதுசிறிதாகத் தயாரித்துக் கொள்ளுதல், ஏனெனில் அந்த ‘நிறைவு’ எதோ ஒரே வாரத்தில் அடையக்கூடிய பயிற்சியோ, மனநிலையோ இல்லை. மாறாக ஒவ்வொரு நாளும் பல வருடச் செயல்களால் சென்று அடையக்கூடிய நிறைவு அது. உதாரணமாக, ஒருவருக்கு நாற்பதாவது வயதிலோ, ஐம்பதாவது வயதிலோ இந்த ‘சமநிலையின்மை’ எனும் சிறு நோய் பீடிக்கத் தொடங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அவர் தன் வாழ்வில் பெற்ற வெற்றிகளை, உறவுகளை, பாராட்டுகளை, செல்வங்களை வைத்து இந்தக் காலகட்டத்தை கடந்துவிடலாம் என எண்ணினால், அவராலேயே தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதில் சலிப்பையே அடைவார். இதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. இது இயற்கையின் ஆடல் விதிகளில் ஒன்று. ஆகவே நம் மரபில் நான்கு வகை மனிதப் பரிமாண நிலைகளை நான்கு ஆசிரமம் என்று வகுத்தனர், பிரம்மசரியம், க்ருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு நிலைகள்.
இதில் ஒருவர் கிருஹஸ்த நிலையிலிருந்து வானப்பிரஸ்தம் எனும் நிலைக்கு நகர்வதை நம்மரபு முக்கியமான வளர்ச்சியாகக் கருதுகிறது. இந்த காலகட்டத்தில் ஒருவர் எந்த அளவுக்கு லௌகீக செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மேலான செயல்களில் ஈடுபடுகிறார் என்பதை வலியுறுத்துகிறது. இந்த வானப்பிரஸ்த நிலைக்கு நகர்வதற்கு முதல் அடி பிரம்மசரியம் முடிந்த உடனேயே சிறிது சிறிதாகத் தொடங்கப்பட வேண்டும், இல்லையெனில், அள்ளிப்பற்றிய அனைத்தும் பெரும்பாறை என நம் தோள்களில் அமர்ந்திருக்கும். அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியாமல், சுமக்கவும் திராணியின்றி, இதுவரை வாழ்ந்த மொத்த வாழ்வும் அர்த்தமின்மை என்றே உணர்வோம்.
இதை நிகர்செய்யும் மார்க்கமே ‘ப்ரவ்ருத்தி மார்க்கம்’ அனைத்திலும் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, விலகிக்கொண்டும் இருத்தல்.பயின்றும், முயன்றும் மட்டுமே அடையக்கூடிய சாத்தியங்களைத் தான் மரபு ‘சாதனா’ என்கிறது. ஆகவே, இந்த இரண்டு பாதைகளுக்கும் துல்லியமான பயிற்சிகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அடுத்தது ‘நிவ்ருத்தி மார்க்கம்’ எனப்படும், திசை தடுமாற்றம் இல்லாத நீள்பாதை. ஒருவர் பல்வேறு காரணங்களால் அல்லது திட்டவட்டமான ஒரே காரணத்தால், மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு லௌகீக வாய்ப்புகளையும் ஏற்பத்திக்கொள்ளாமல், அல்லது முற்றிலுமாக அதிலிருந்து விலகிச் சென்றுவிடுதல்.
உதாரணமாக துறவு பூண்டவர்களைச் சொல்லலாம். உலகம் முழுவதுமே அப்படி சென்றவர்கள் ஏராளம். பெரும்பாலும் அவர்கள் லௌகீக வாழ்வுக்குத் திரும்புவதில்லை. லட்சத்தில் ஒன்று நிகழலாம் அவ்வளவே. ஏனெனில் இந்த பாதையில் இங்கிருக்கும் எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை, மாறாக அவர்களுடைய உயிரின் நோக்கம் ‘மேலான ஒன்று ‘மேலான ஒன்று’ என அவர்களை நகர்த்திக்கொண்டே இருப்பதால் நம்மைப் போல சலிப்புகள், விரக்திகள் ,போன்ற சஞ்சலங்களை அடைவதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் நிமிடங்களில் வெளிவந்து விடுவது அவர்களுடைய ‘சாதனா ‘ அவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த கொடை.
ஆகவே உள்ளத்தில் தெளிவும், திட சித்தமும் இல்லாமல் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை யாராலும் சரியாக நிர்வகிக்க முடியாது என்றும், உலகம் முழுவதிலும் உள்ள முதியவர்களின் உடலியல், உளவியல், உணர்வியல் வேதனைகள் அனைத்தும் ‘ப்ரவரித்தி ‘மார்க்கத்தை பயிலாமையும், அதில் பயிற்சியின்மையும்தான் என்கிறது யோகபமரபு. உடலையும் உள்ளத்தையும் பழக்கிய ஒருவர், இயல்பாகவே உயிரோட்டம் மிக்கவராகவும், மரணம் போன்ற பெரும் முடிவுகளை சந்திப்பதில் சஞ்சலமில்லாதவராகவும், தன்னை தகவமைத்துக் கொள்கிறார். அவரை ஹடயோகி என்றும், உயிரின் எந்தப் பயணத்துக்கும் தயாரான அந்த நிலையை ஹடயோகத்தின் சாத்தியம் என்றும் சொல்லலாம்.நல்ல வழிகாட்டுதல் அமையுமெனில் இன்றைய கால கட்டத்தில் ஒருவர் இந்த இரண்டில் ஒரு மார்க்கத்தை தனது நாற்பது ஐம்பதாவது வயதிலாவது தொடங்க வேண்டும். அது இம்மைக்கும், மறுமைக்கும் பேருதவியாக இருக்கும் என்கிறது யோகம்.
வியாக்ராசனம்
இந்தப் பகுதியில் ‘ வியாக்ராசனம் ‘ எனும் பயிற்சியை காணலாம். நாம் ஏற்கெனவே செய்த மார்ஜரி பயிற்சியின் தொடர்ச்சியாக இதைச் செய்யலாம். முதுகுத்தண்டில் ஒரு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தவும், சீரான ரத்த ஓட்டத்தைத் தூண்டவும் ஒரு சிகிச்சையாகப் பயன்படும் மிக முக்கியமான பயிற்சி இது. மார்ஜரி நிலையிலிருந்து காலின் மூட்டுப்பகுதியையும் , தலையையும் உடலின் உட்புறமாகச் செலுத்த வேண்டும். பின்னர், மூச்சை உள்ளிழுத்த படி காலை வெளிப்புறம் நீட்டி மேல்நோக்கி மடக்க வேண்டும். இவ்வாறு இரண்டு கால்களுக்கும் மாறி மாறி ஐந்து சுற்றுகள் வரை செய்யலாம்.
The post ங போல் வளை – யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.