×
Saravana Stores

விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் என்றாலே இனம்புரியாத பயம் அனைவருக்கும் உள்ளது. உண்மையில் தொடக்கநிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால் அதில் இருந்து முழுமையாக வெளியேறலாம்; ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பலாம். புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு ஆரோக்கியமான உடல்நிலைக்குத் திரும்ப வேண்டிய ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், பலருக்கும் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாழ்வுக்குத் திரும்பும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

உடற்பயிற்சி

தொடர்ச்சியான உடற்பயிற்சி எப்போதுமே ஆரோக்கியத்தின் நண்பன். தினசரி அரை மணி நேரம் என வாரத்துக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மிக வேகமாக உயர்கிறது. தொடக்கத்திலேயே கடினமான உடற்பயிற்சிகளைத் திட்டமிட வேண்டாம். லிஃப்ட்டைத் தவிர்த்துவிட்டு படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, மாலை நேரங்களில் சிறிது தூரம் காலார நடந்துசெல்வது என உடலைப் பழக்குங்கள். பிறகு, மருத்துவரின் பரிந்துரையோடு நடைப்பயிற்சி செல்வது, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வது, உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது எனக் கொஞ்சம் கொஞ்சமாக உடலைத் தயார் செய்யுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபட்ட சில நாட்களிலேயே கீழ்க்கண்ட சில அனுபவங்கள் ஏற்படக்கூடும்:

1) உடல் வலுவடைதல்; எதையும் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல் மேம்படுதல்
2) மனஅழுத்தம் குறைதல்
3) உடல், மனச்சோர்வு குறைதல்
4) நல்ல மனநிலை மேம்படுதல்
5) வலி குறைதல், மேம்பட்ட உறக்கம் உணவுப் பழக்கம்

சமச்சீர் உணவை உண்ணுங்கள். தினசரி உணவில் பழங்கள், காயகறிகள், கீரைகள் முழு தானியங்கள் எனப் பலதரப்பட்ட உணவுவகைகள் இடம்பெறட்டும். இதனால், எல்லா சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கப்பெற்று உடல் வலுவாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணுங்கள். நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ்ஃபேட் கொழுப்புகளைத் தவிர்த்திடுங்கள்.மீன், முட்டை,நட்ஸ், விதைகள், பருப்புவகைகள், உலர் பழங்கள், காய்கறிகள், கீரைகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சி ஆகிய குறைவான புரதமும் நிறைவுற்ற கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ணுங்கள்.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்த முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகளை உண்ணுங்கள்.பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் உடலுக்குக் கிடைக்கும்படியாக பலதரப்பட்ட உணவுகளை உண்ணுங்கள்.சில உணவுகள் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் இயல்புடையவை. மஞ்சள், இஞ்சி, பூண்டு, வெங்காயம், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை, புரோகோலி, கிரீன் டீ, அவகேடா, மிளகு, சீரகம், வெந்தயம் போன்ற பல்வேறு உணவுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை இயல்பாக்குபவை. இயல்பற்ற செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, செல்களின் முதிர்ச்சியைச் சீராக்கி, ப்ரீ ரேடிக்கல்ஸைத் தடுப்பவை. எனவே, இவற்றை உணவில் முறையாகச் சேருங்கள்.

சப்ளிமென்ட்கள் பயன்படுத்தும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், குறிப்பிட்ட ஒரு ஊட்டச்சத்து திடீரென அதிகரிப்பது சில சமயங்களில் வேண்டாத விளைவுகளை உருவாக்கக்கூடும்.செயற்கை மணமூட்டிகள், சுவையூட்டிகள், பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

அறுவைசிகிச்சைக்குப் பின் சிலருக்கு உடலில் உள்ள தாதுஉப்புக்களின் அளவில் மாற்றம் ஏற்படக்கூடும். எந்த உப்பு உடலில் குறைந்திருக்கிறது எனப் பரிசோதித்து அறிந்து அது அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து புற்றுநோயின் பக்கவிளைவுகளாக ஏற்படும் வாந்தி, மயக்கம், வலி போன்ற
வற்றுக்கான உணவுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான எடைப் பராமரிப்பு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு எடையில் மாறுபாடுகள் ஏற்படக்கூடும். உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடை எதுவோ அதைப் பராமரிக்க வேண்டியது அவசியம். எடைகுறைவாக உள்ளவர்கள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மூலமாக எடையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். எடையைக் குறைக்க வேண்டியவர்கள், படிப்படியாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்குங்கள். அதிகபட்சமாக வாரம் ஒரு கிலோ வரை எடை குறைக்கத் திட்டமிடலாம்.

புகையிலை, மதுவைத் தொடாதீர்கள்

புகையிலை புற்றுநோயின் தலைவாசல். எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் புகையிலையைத் தொடாதீர்கள். இதனால் மீண்டும் ஒரு புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். அதுபோலவே, மதுப்பழக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிப்பதால் அதையும் கைவிட வேண்டியது மிகவும் அவசியம்.

வாழ்வியல் மாற்றங்கள்

புற்றுநோயை எதிர்கொள்ள நேர்மறையான சிந்தனைகள் மிகவும் அவசியம். எனவே, தன்னம்பிக்கை தரும் விஷயங்களை, மனிதர்களைத் தேடிக் கண்டடையுங்கள். தினசரி எட்டு மணி நேரம் உறங்குவது என்பதைக் கட்டாயமாக்குங்கள். ஆழமான தூக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசியம். புற்றுநோயின் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் மாத்திரைகள் மருத்துவர் பரிந்துரைப்படி தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.

கதிரியக்கச் சிகிச்சை முடிந்த நாட்களில் உடலில் கதிர் இயக்கம் இருக்கும் என்பதால், முடிந்தவரை தனியறையைப் பயன்படுத்துங்கள் அல்லது மற்றவர்களுடன் நெருக்கமாகப் புழங்காதீர்கள். எச்சில், வியர்வை, சிறுநீர் வழியாக உடலில் உள்ள கதிரியக்கம் வெளியேறும் என்பதால், தனியான தட்டு, டம்ளர் பயன்படுத்துவது, கழிப்பறையை இரண்டு முறை ஃபிளஷ் செய்வது என சுகாதாரத்தைப் பராமரியுங்கள்.

கீமோ, கதிரியக்கச் சிகிச்சை செய்யப்பட்ட 15 நாட்களுக்கு குழந்தைகள், கர்ப்பிணிகளை நெருங்காதீர்கள். ஏனெனில், அவர்கள் மேல் கதிரியக்கம் படும்போது அவர்களும் பாதிக்கப்படக்கூடும். சிலவகைப் புற்றுநோய் சிகிச்சைகள் முடிந்த பின் சில நாட்களுக்கு சிலவகை உணவுகளைத் தொடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த உணவுகளைக் குறிப்பிட்ட நாட்களுக்குத் தவிர்த்திடுங்கள்.

உங்களின் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தாதுஉப்புக்களின் அளவு போன்றவற்றை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருங்கள். வீட்டில் உள்ளவர்களுடன் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் மனம் கஷ்டப்படும் என எதையும் மூடி மறைக்காதீர்கள். உங்கள் பிரச்னை எதுவென வீட்டில் உள்ளவர்களிடமும் மருத்துவரிடமும் மனம்விட்டுப் பேசி தேவையான ஆலோசனை பெறுங்கள். உதவிகள் கேட்டுப் பெறத் தயாங்காதீர்கள்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

புற்றுநோயாளிகளின் உறவினர்கள் கவனிக்க!

1.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காதீர்கள். உங்களின் அன்பான கவனிப்பும், பராமரிப்புமே அவர்களை முழுமையாகக் குணப்படுத்தும். எனவே அவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்.

2.புற்றுநோயின் பக்கவிளைவுகளுக்காகச் சாப்பிடும் மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் சாப்பிடுகிறார்களா எனக் கண்காணியுங்கள்.

3.கீமோ சிகிச்சை, ரேடியோ டிரீட்மென்ட் முடிந்து வந்த நாட்களில் சிலர் மிகுந்த சோர்வு, எரிச்சல், கோபத்துடன் காணப்படுவார்கள். அவர்களிடம் அன்பாகப் பேசி மனம் கோணாமல் நடந்துகொள்ளுங்கள். அணுக்கதிர்கள் மற்றவர்களிடமும் பரவும் என்பதால் அவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம்.

4. கதிரியக்கச் சிகிச்சை செய்துகொண்ட நாட்களில் தனிமையில் இருப்பது குறித்து அவர்களுக்குப் பக்குவமாகச் சொல்லிப் புரியவைத்திடுங்கள். அவர்கள் மனத்தளவில் தனிமையாக இல்லாதிருப்பது அவசியம்.

5. அவர்களின் உடல்நிலையைப்பற்றி நன்கு அறிந்திருங்கள். அவசியமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான முதலுதவி, பணிவிடைகள் செய்யத் தயங்காதீர்கள்.

புற்றுநோயை முறியடிக்கும் உணவுகள்

1. மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

2. பூண்டு : தினசரி உணவில் தவறாமல் பூண்டு சேர்த்துவருவது குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். பூண்டில் உள்ள சல்ஃபர் சேர்மங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோ ரசாயனங்களுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.

3. இஞ்சி: இஞ்சி பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமைப் பெருகும். இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜிஞ்சரால், பாராடோல், ஷோகால் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் செய்கின்றன. இஞ்சிச் சாறு புற்றுநோய் வராமல் தடுக்கிறது; குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

4. லவங்கப்பட்டை: புற்றுநோய்க் கட்டி உருவாகாமல் இருக்க லவங்கப்பட்டை உதவுகிறது. லவங்கப்பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், சில வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மைக் காத்து உதவுகிறது.

5. மிளகு: மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மிளகில் உள்ள வேதிப்பொருட்கள், நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு.

6. வெங்காயம்: வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். வெங்காயத்தில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை வேகவைத்துச் சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.

8. சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழவகைகளில் காணப்படும் மோனோடேர்ஃபின்கள் புற்றுநோய் உருவாகும் கார்சினேஜன்களை அழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய்எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். வாய், தொண்டை மற்றும் வயிற்றில் வரும் புற்றுநோய்களை சிட்ரஸ் பழங்கள் தடுக்கும்.

The post விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dinakaran ,
× RELATED எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!