×

திருமணத் தடைகளுக்கு ஜாதக தோஷங்கள் காரணமா? :ஜோதிட ரகசியங்கள்

ஜாதக தோஷங்களிலேயே மிக அதிகமாக இப்போது பார்க்கப் படுகின்ற தோஷம் திருமணத் தடை தோஷம். இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இப்போதெல்லாம் எளிதாகத் திருமணம் நடப்பதில்லை. நம்மிடம் வரும் ஜாதகங்களின் பல ஜாதகங்கள், ஏன் திருமணம் தாமதம் ஆகிறது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்ற கேள்வியைக் கொண்டுதான் வருகின்றன. பெரும்பாலான ஜாதகங்களின் திருமணத்திற்கான அமைப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் உளவியல் தடைகளும், எதிர்பார்ப்புகளும் இன்றைக்கு அதிகமாக இருப்பதால், பலருக்கும் திருமணம் தள்ளிப் போகிறது. திருமணம், அதிக காலம் தள்ளிப் போனதால், இனி திருமண வாழ்வுக்கு வழி இல்லை என்ற ஒரு விரக்தி நிலை அடைந்து, சிலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திருமணம் ஆகாவிட்டால், பிறகு திருமணம் ஆனாலும்கூட அது முழுமையான இல்லற வாழ்வுக்கு உரியதாக அமைவதில்லை. ஏதோ தங்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். இன்றைய திருமணத் தடைகளுக்கு ஜாதக காரணம் ஓரளவுக்குத்தான் சொல்ல முடியும். திருமணம் குறித்துச் சொல்லும் பாவம் ஏழாம் பாவம். நம் முடைய ஜோதிட நூல்கள் களத்திர பாவம் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள். சுக்கிரனையும், செவ்வாயையும் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஆண்களுக்கு சுக்கிரனையும், பெண்களுக்கு செவ்வாயையும் பார்க்க வேண்டும். காரணம், இவர்கள் இல்லற வாழ்வின் இனிமையை கொடுக்கக்கூடிய காரக கிரகங்கள். ஆனால், களத்திர ஸ்தானம் கெட்டுப்போன பல ஜாதகங்களில் திருமணம் ஆகி இருக்கிறது. காரணம், 2-ஆம் இடம், 12-ஆம் இடம், 4-ஆம் இடம், 5-ஆம் இடம், 11-ஆம் இடம். இவைகள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் லக்னத்தோடு தொடர்பு கொண்டு வலுவாகி இருந்தால், ஏழாம் இடம் கெட்டுப் போயிருந்தாலும் திருமணம் ஆகிவிடுகிறது.

இரண்டாம் இடம் வலுவாக இருந்தால், அவருக்கு ஒரு குடும்பம் ஏற்பட வேண்டும். நான்காம் இடம் வலுவாக இருந்தால், அவர் சுகப்பட வேண்டும்.ஐந்தாம் இடம் வலுவாக இருந்தால், அவருக்கு வம்சம் ஏற்பட வேண்டும். 11-ஆம் இடம் வலுவாக இருந்தால், லௌகீக ஆசைகள் இருக்க வேண்டும்.12-ஆம் இடம் வலுவாக இருந்தால், அவர் இல்லற வாழ்வில் உள்ள பாலியல் சுகங்களை அனுபவிக்க வேண்டும். இவைகள் ஏதேனும் ஒரு வகையில் லக்னத்தோடு தொடர்பு கொண்டால், இல்லற அனுபவம் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற தசாபுத்திகள் நடக்கின்ற காலத்தில் திருமணம் நடந்து விடுகிறது. மிக முக்கியமாக, குறிப்பிட வேண்டியது எதிர்மறை விஷயங்களை சில ஜோதிடர்கள் சரியான கணிதங்கள் இன்றிச் சொல்லிவிடுவதால், பல திருமணங்கள் நின்று விடுகின்றன. உதாரணமாக, இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலோ, எட்டாம் இடத்தில் சனி இருந்தாலோ அந்த ஜாதகங்களுக்கு திருமணம் ஆகாது என்று ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். நிச்சயமாக இல்லை. ஒரு ராசியில், சனி இரண்டரை வருடங்கள் இருக்கும். ராகு ஒன்றரை வருடங்கள் இருக்கும். அந்த ஒன்றரை வருடங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் பிறக்கக்கூடிய லட்சக்கணக்கான ஜாதகர்களுக்கு இந்த அமைப்பு இருக்கவே செய்யும்.

எனவே இவ்வளவு பேருக்கும் திருமணம் ஆகாது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? எனவே, தசா புத்திகளை கணக்கிட்டு இந்த ராகு – கேது மற்றும் சனி திசைகள் கடந்து விட்டதா? இனி வரப்போகிறதா? எப்பொழுது வரப்போகிறது? என்பதை தீர்மானம் செய்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.ஆனால், அம்ச கட்டத்தைக் கூட பார்க்காமல், ராசிக் கட்டத்தை மட்டும் பார்த்து, எட்டில் சனி, மாங்கல்ய தோஷம், இரண்டில் ராகு, சர்ப்ப தோஷம் என்று ஜாதகங்களைத் தள்ளி விடுகின்றனர். சுத்த ஜாதகங்களைப் பார்க்கிறார்கள். உலகத்தில் சுத்த ஜாதகங்கள் என்று ஒரு ஜாதகம் இருப்பதற்கு வழியே இல்லை. ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்ற ஜாதகங்கள்கூட வாழ்க்கையில் படு சிரமங்களைச் சந்தித்து இருக்கின்றன. எந்தக் கிரகமும் ஆட்சியோ உச்சமோ பெறாத ஜாதகங்கள் அற்புதமாக வாழ்ந்து இருக்கின்றன. எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜாதகத்தில் திருமண அமைப்பை நிர்ணயித்து விடக்கூடாது.

இன்னொன்று, எதிர்மறை சிந்தனைகளை வளர்த்து, தம்முடைய ஜாதகத்தில் மிகப் பெரிய தோஷம் இருக்கிறது; திருமணம் ஆகாது. ஆனாலும் நிலைக்காது; என்றெல்லாம் சொல்லுவதால், கிரகங்கள் வேலை செய்கிறதோ, இல்லையோ மனம் அந்த கெடு பலன்களை ஒட்டியே ஆழமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. பிறகு என்ன அவர்கள் வாழ்க்கை சொர்க்கமாகவா இருக்கும்? என்னிடம் சிலர் வருவார்கள். அவர்கள், ‘‘நாங்கள் இந்த இடத்தில் பெண்ணைப் பார்த்திருக்கின்றோம். பெண்ணும் பெண்ணின் குடும்பமும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அவர்களும் வந்து மாப்பிள்ளையைப் பார்த்து விட்டார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது. இதோ இருக்கிறது, இருவர் ஜாதகங்களும். இதைச் சேர்க்கலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள்’’ என்று கேட்கும் பொழுது, நான் சொல்லுகின்ற பதில் இதுதான்.
எப்பொழுது உங்களுக்கு அவரைப் பிடித்து இருக்கிறதோ, அவர்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறதோ, இருவர் ஜாதகங்களில் நுட்பமாக கிரகங்கள் வேலை செய்து, இருவரையும் இணைப்பதற்கு தயாராக இருக்கின்றன என்று முடிவு செய்து கொள்ளுங்கள். எனவே, இதற்கு மேல் ஜாதகத்தை பார்த்து, அதில் ஏதாவது ஒரு தோஷத்தைக் கண்டுபிடித்து, திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம். அப்பொழுது அவர்கள் கேட்பார்கள்.‘‘இவர்கள் இருவரையும் சேர்த்து ஏதேனும் தோஷங்களால் பாதிப்பு ஆகிவிட்டால் என்ன செய்வது?” அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களைப் போல் சிந்திக்கக் கூடிய எல்லோருக்கும் சொல்லக்கூடிய பதில் இதுதான்.கிரகங்களை நீங்கள் வெல்ல முடியும் என்று மனதால்கூட நினைக்காதீர்கள். அது அப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொன்னால், அது அப்படித்தான் நடக்கும். அது யார் பார்த்துக் கொடுத்தாலும் அப்படித்தான் நடக்கும்.

‘அப்படியானால் எங்களுக்கு வழி என்ன?’’ அவர்களுக்குச் சொல்லுவேன்.நம்மை விட, நம்மை ஆளும் கிரகங்களைவிட, நம்மைப் படைத்த இறைவன் மிகப் பெரியவன். அவன் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த திருமணத்தை முறையாக நடத்திக் கொடுப்பார். இல்லை என்று சொன்னால், ஏதோ ஒரு காரணத்தினால் இந்தத் திருமணம் நின்று போய்விடும். அப்படி நின்று போய்விட்டால் ஜாதக தோஷம் வேலை செய்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு, அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள். மற்றபடி மனதில் குழப்பம் வேண்டாம். திருமணம் நடப்பதற்கு கிரகங்கள் தடையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாமே தடையாக இருக்க வேண்டாம்.

The post திருமணத் தடைகளுக்கு ஜாதக தோஷங்கள் காரணமா? :ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Jataka ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்