ஊட்டி : நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட ேகாத்தகிரி அருகே கெங்கரை வனப்பகுதிக்கு தீ வைத்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 மாதங்களாக கடுமையான உறைப்பனி பொழிவு நிலவியது. மேலும் பகலில் கடுமையான வெயிலான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகின. மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காட்சியளிக்கின்றன. இதனால் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயம் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு சுமார் 8 நாட்கள் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆச்சக்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டு காய்ந்த மூங்கில்கள் எரிந்து நாசமானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகின்றன.
புல்வௌிகள் காய்ந்து இருப்பதால் அவற்றை தீ வைத்து எரிப்பதால் மழை காலங்களில் கால்நடைகளுக்கு பசுமையான புற்கள் கிடைக்கும் என்பதால் சிலர் வேண்டுமென்றே காட்டு தீ ஏற்படுத்துகின்றனர்.
கடந்த 7ம் தேதியன்று நீலகிரி வன கோட்டம், கீழ்கோத்தகிரி வனச்சரகம், கெங்கரை காப்பு காட்டில் காட்டு தீ ஏற்பட்டது. வனச்சரகர் ராம் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் தனிக்குழு அமைத்து காட்டு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கூக்கல் வன பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய தாளமொக்கை பகுதியை சேர்ந்த சிவராஜ் (36) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கெங்கரை பகுதியில் காட்டு தீ ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் அவர் மீது வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து காட்டு தீ ஏற்படுத்த முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வனத்தில் காட்டு தீ ஏற்படுத்துவது வனச்சட்டத்தின் படி கடுமையான குற்றமாகும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
The post கோத்தகிரி அருகே காட்டு தீயை பரப்பிய நபர் கைது appeared first on Dinakaran.