×

ரூ.1,000 கொடுக்கலையாம்… மண்டைய உடைச்சுட்டாங்க… பாஜவினரை கைது பண்ணுங்க… போலீஸ் ஸ்டேஷனில் மன்சூர் அலிகான் தர்ணா

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை திடீரென சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 4 நாட்களுக்கு முன்னால் நான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள கஜாக் என்பவரை பாஜவை சேர்ந்தவர்கள் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன காரணம் தெரியவில்லை. டொனேஷன் 1,000 கொடுக்கவில்லையாம். அதையும் நான் சந்தேகப்படுகிறேன். எனக்கு வந்து வேலை செய்த காரணத்தினால் இருக்கலாம். நான் 4 நாட்களாக பிரசாரத்தில் இருந்தேன். தாக்கியவர்களை கைது செய்யவில்லை. இன்ஸ்பெக்டரிடம் பேசிட்டுதான் இருந்தேன்.

கைது செய்தால்தான் இங்கிருந்து போவேன். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் கைது செய்ய வேண்டும். அந்த பையனுக்கு 16 தையில் போட்டு இருக்காங்க. இதுக்கு மேல நான் எப்படி பிரசாரத்திற்கு போக முடியும். தேர்தல் நேரத்தில் இப்படி ரவுடியிசம் பண்ணா, நான் சும்மா இருப்பேனா? நடக்கிறது வேற. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துவாச்சாரியை சேர்ந்த வினோத்(26), முபராக்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைதான வினோத் பாஜ கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ரூ.1,000 கொடுக்கலையாம்… மண்டைய உடைச்சுட்டாங்க… பாஜவினரை கைது பண்ணுங்க… போலீஸ் ஸ்டேஷனில் மன்சூர் அலிகான் தர்ணா appeared first on Dinakaran.

Tags : BJP ,Mansoor Alikhan dharna ,Mansoor Ali Khan ,Vellore ,Sathuvachari police station ,Kazakhs ,Dinakaran ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...